Skip to main content

கரகரப்பின் மதுரம்




நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா.


எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.

 

ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒருவர் தலையைக் குலுக்கியபடி “அவர் பாட மட்டும் கூடாதுங்க...” என்றுஏதோ ஒரு மாபாதகத்தை குறிப்பது போல் கூறியது இப்போதும் நினைவிருக்கிறது. இப்படிச் சிலரைஎனக்குத் தெரியும். அந்தக் குரலின் கரகரப்பு அவர்களைத் தொந்தரவு செய்கிறது போலும்? அவர்கள்ஒருவேளை குரலில் பளிங்கைத் தேடுபவர்களாக இருக்கலாம். அதுவும் கண்ணாடிப்பளிங்கு வேண்டும் போல? ராஜாவின் குரலும் பளிங்குதான். ஆனால் அது செடிசெத்தைகள் மிதந்தலையும், லேசாக மண் கலங்கித்தெரியும் ஓடையின் பளிங்கு.

 

ராஜாவின் குரல் எப்போது அறிமுகம் ஆனது என்கிற புள்ளிவிபரம் என்னிடமில்லை. குழந்தைப்பருவத்தில் இருந்தே கூட வருவது. ஆகவே ஒரு தகவலாக அதைத் தனியே பிரித்துச் சொல்ல இயலவில்லை. ஆனால் காதலென்றால் என்ன என்றே அறியாத வயதில் “மாடிவீட்டு கண்ணிப் பொண்ணு” என்கிற வரிக்கு  கண்கலங்கி நின்றிருக்கிறேன். “பந்தபாச சேற்றில் வந்து விழுந்த வேகம் எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்குப்போகும்?“ என்கிற வரியின் முன் வினோதமான குழப்பங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். நமக்கு விருப்பமானஒரு நாளின், விருப்பான பொழுது எப்படிப் புலரும்? “நான் தேடும் செவ்வந்திப் பூவிது” பாடலுக்கு முன் வரும்ராஜாவின் ஹம்மிங்கைப் போலத்தான் புலரும். என் எல்லாக் காதல்களுக்கும் நான் அளிக்கும் முதல் பரிசு “சங்கத்தில் பாடாத கவிதை” தான். அந்தப் பரிசை பொருட்படுத்தாதவளை தொடர்ந்து காதலிக்கவேண்டியஅவசியமேதுமில்லை அல்லவா? 

 

உன்னி கிருஷ்ணன் , சித் ஸ்ரீராம் போன்றோரின் குரலில் இருக்கும் பட்டுத்தன்மை ஒரு சாமான்யனுக்குஎப்போதும் வியப்பிற்குரியது. அது அவர்கள் தொடமுடியாத தூரத்தில் இருக்கிறது. ஆனால் ராஜாவின் குரல்கொஞ்சம் அவனைப் போலவே ஒலிக்கிறது. அவனால் அந்தக் குரலைத் தொட்டுப்பார்க்க முடிகிறது. அவன்அவர் கூட சேர்ந்து பாடத் துவங்கிவிடுகிறான். இது இருவருக்கும் ஒருவித இணக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.  தான் ஒரு பாடகன் என்று ஒருவனை நம்பவைத்துவிடுவது,  காட்டுப்பாதையின் கும்மிருட்டுப் பயணத்தில் ஒருவிளக்கை அளிப்பது போல. “நான் இருக்கிறேன்” என்று சொல்ல எப்போதும் நெஞ்சோடு ஒரு தெய்வம்உறைவது போல.

 

ராஜாவின் குரல் எளியது போல் தோன்றினாலும் அது அவ்வளவு எளிதல்ல என்பதை பாடும்போது உணர்ந்துகொள்கிறோம். சமீபத்தில் வெளியான “மாரி-2” படத்தில் வரும் “வானம் பொழியாமா” பாடலை அவர்கொஞ்சம் சிரமத்தோடு பாடியிருப்பது போல்தான் தோன்றுகிறது. கொஞ்சம் பிசிறுகள் தெரிகின்றன. ஆனால்அவையும் ஒருவித அழகோட வெளிப்படுகின்றன. இப்போது நான் ஒரு வாரமாக அந்தப் பிசிறுகளுக்குமுயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவை அவரது குரலின் அழகியல்களில் ஒன்றாகவே மாறிவிட்டன என்றுதோன்றுகிறது. பாடிப்பாடி அவை உண்மையில் பிசிறுகள்தானா அல்லது ஒருவித நுட்பமா என்கிற சந்தேகம்கூட எனக்கு வந்துவிட்டது.

 

ஒரு நல்ல பாடகன் என்பவன் எல்லாப் பாவங்களிலும் பாடக்கூடியவன்தான். ராஜாவின் துள்ளல் பாடல்களைக்நினைக்கையில் இரண்டு சம்பவங்கள் நினைவில் எழுகின்றன. எங்கள் ஊரில் பேச்சிமுத்து என்று ஒருவர்உண்டு. சில வருடங்கள் முன்தான் இறந்துபோனார். ஒரு தொழிற்சாலையில் காவலாளியாக இருந்தார். அவர் “ஓரம்போ..ஓரம்போ..” பாடலை சைக்கிள் மிதித்தபடியே சத்தமாகப் பாடிக்கொண்டு போவதை பல முறைகண்டிருக்கிறேன். ‘பிச்சமுத்து’ என்பதை பேச்சிமுத்து என்று மாற்றிப்பாடுவார். அவரும் அந்தப் பாடலும்மட்டுமே இந்தப் பூமியில் இருப்பது போல பாடிக்கொண்டு போவார். அவர் யாருக்கு கீழும் இல்லை. பெரியகார் கடந்து மறையும் வரை வணக்கம் வைத்த படியே ஆடாது அசையாது நிற்கும் அந்த வாட்ச்மேன் அல்லஅவர் அப்போது.  

 

நாயகன் படம் எங்கள் ஊர் தியேட்டருக்கு வந்தபோது நான் சிறுவன். எங்கள் பகுதியில் மில் தொழிலாளர்கள்அதிகம். அப்போது எல்லோரும் கழுத்தில் துண்டு போட்டிருப்பார்கள். பால்காரர்கள், குடியானவர்கள் துவங்கிகல்லூரி மாணவர்கள் வரை கலர் கலராகத் துண்டு போட்டுக்கொண்டு அலைந்த காலம் அது. அந்தத்தியேட்டரில் இரண்டே இரண்டு வகுப்புதான். தரைடிக்கட், சேர்.  படத்தில் “நிலா அது வானத்து மேல” பாடல்துவங்கியதும் மொத்த தரைடிக்கட்டும் எழுந்து ஆடியது நினைவிருக்கிறது. உற்சாகம் அதிகமானால்கழுத்துத்துண்டு தலையில் ஏறிவிடும். தலையில் துண்டோடு மொத்த சனமும் ஆட, ஆடக் கூசிய ஓரிருவர்ஒதுங்கி நின்று கண்டுகளித்தனர். ஆனால் அவர்களும் தமக்குள் ஆடிக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள்துண்டும் தலையில்தான் இருந்தது. 


எனக்கு எப்போதும் ராஜாவின் குரல் ஸ்பெஷல்தான். சில பாடல்களை இரண்டு பாடகர்கள் தனித்தனியேபாடியிருப்பார்கள். அந்த இரண்டில் எப்போதும் நான் கேட்பது ராஜாவின் குரலைத்தான். “நானாகநானில்லை தாயே” என்று ராஜாதான் சொல்லவேண்டும் எனக்கு. எஸ்பிபி சொல்லும் அளவு  அவ்வளவு அழகாகஎன்னால் சொல்ல முடியாது என்பது முதல்காரணம்.  அம்மா முன் மண்டியிடுகையில் அவ்வளவு அழகுதேவையில்லை என்பது இன்னொரு காரணம். எனக்குப் பாடல்களில் “sweetness” சைத் தாண்டிவேறொன்று வேண்டி இருக்கிறது. அந்த வேறொன்று ராஜாவின் குரலில் இருக்கிறது. ஒரே பாடலில் கூடபெண்குரலின் வரிகளை விட்டுவிட்டு முன்னால் ஓடி ராஜாவின் குரலுக்காக காத்துநிற்பேன். ஒருவேளை ஆண்என்பதால் அப்படி ஆகிறதா என்று யோசித்தால் அப்படியும் இல்லை. இரண்டு ஆண்கள் பாடும் பாடல்களிலும்என் மனம் ராஜா உச்சரிக்கும் சொற்களைத் தேடித்தான் ஓடும். உதாரணமாக ‘பாட்டுப் பாடவா” படத்தில் “வழிவிடு வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்” என்று ஒரு பாடல் . எஸ்பிபியும் ராஜாவும் சேர்ந்துபாடியுருப்பார்கள். நான் வழக்கம் போல ராஜா வரிகளில் நின்று விடுவேன். அல்லது பாட்டைவிட்டு விட்டுஓடுவேன். அதே படத்தில்  ராஜாவின் குரலில் இன்னொரு பாடல் “ நில் நில் நில்” என்று துவங்கும். அதில் ஒருவரி ... “ மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே”....... நான் தேவியாக இருந்திருந்தால் நிச்சயம் ராஜா வீட்டுக்குத்தான் போயிருப்பேன். 

வைரமுத்துவின் பிரிவுக்குப் பிறகு ராஜா வரிகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்றேதோன்றுகிறது. “fill in the blanks with suitable words”  என்கிற கணக்கில்தான் பாடல் வரிகள் இருந்தன. வாலி அந்த இடத்தைசரியாக நிரப்பினார். ராஜாவின் பாடல்களின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்கும், வேகத்திற்கும் அவர்பொருத்தமானவராக இருந்திருக்கலாம். புலமைப்பித்தன் போன்ற பாடலாசிரியர்களை அவர் சரியாகப்பயன்படுத்தவில்லை என்கிற மனக்குறை எனக்கு உண்டு. ஆயினும் பாட்டுக்குள் இறுதி செய்யப்படும் வரிகளைமதிப்பவராகவே அவர் இருந்திருக்கிறார். ஒரு சொல்லின் ஜீவனை அதன் ஆழமான பொருளுணர்ந்து, அழகுணர்ந்து அசைப்பவர் அவர். உதாரணத்திற்கு ‘ராசாத்தி’ என்கிற  சொல் வெறுமனே அழகை மட்டும்குறிப்பதல்ல. அதனுள்ளே ஆழமான நேசமும் இருக்கிறது. நாம் ராசாத்தி சொல்வதில்லை. நம் அப்பனும்பாட்டனும் சொல்லியிருக்கிறார்கள். நாம் கேட்டிருக்கிறோம்.   “உள்ளம் உருகுதே ராசாத்தி” என்கிற வரியில்வரும்  ராசாத்தி அந்த ராசாத்திதான். “வானம் பொழியாமா” பாடலில் நீங்கள் இதைக் கேட்கலாம்.

 

அவதாரம் படத்தில் “ தென்றல் வந்து தீண்டும் போது” பாடல் மெகா ஹிட். அந்த அலையில்அடித்துக்கொண்டு போய்விட்ட ஒரு அற்புதம் என்று “சந்திரரும் சூரியரும் பெத்ததொரு புத்திரனும்நான்தானே” பாடலைச் சொல்லலாம். பாடலைப் பாடுபவன் ஒரு கூத்துக் கலைஞன். ஆனால் பாடலின்பின்னணியில் மேற்கத்திய இசையின் பிரம்மாண்ட ஊர்வலம் இச்சிப்பட்டியிலிருந்து கிளம்பி இங்கிலாந்தைசுற்றிவிட்டு திரும்பவும் இச்சிப்பட்டியில் தரையிறங்குகிறது பாடல். எங்களுக்கு ஒபேரா என்கிற பெயர்மட்டும்தான் தெரியாது. ஆனால் ஒபேரா தெரியும். அறியச்செய்தவர் இளையராஜா.


ராஜாவின் குரல் நம் குரல் போலவே இருப்பதால் அதில் ஒரு “அந்தரங்கத் தன்மை”வந்துவிடுவதாகத் தோன்றுகிறது. “காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானே” என்பது தத்துவம். “சாறைப் பாகாக நாம்காய்ச்சலாம் அம்மா அருள்தானே இனிபாக்குது” என்று ராஜா பாடுகையில் அது ஒரு கிராமத்து மனிதனின் எளியபக்தி. திருவாசகத்தை பல ஓதுவார்கள் பாடும்போதும்  அதுஒரு சைவப் பனுவலாகவே ஒலிக்கிறது .ஆனால் “நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு.” என்று ராஜாபாடுகையில்,  நாம் நமது லெளகீக வாழ்வில் நாயிற் கடையாய் கிடந்த பொழுதுகளையும் சேர்த்தேநினைவூட்டிவிடுகிறது. நாம் உருகி வழிந்து விடுகிறோம்.


ராஜாவின் குரலில் ஒரு சரணாகதித் தன்மையும் உண்டு. ‘உன்னையல்லால் எனக்கு வேறு யாருமில்லை’ என்றுமண்டியிடுகிற பாவம் தொனிக்கும் வரிகளை ராஜா அளவு இதயப்பூர்வமாகப் பாடுபவர்கள் குறைவு. இந்தசரணாகதித் தன்மை அவரது பக்தி இலக்கிய ஈடுபாட்டில் இருந்து வந்திருக்கலாம். “முயன்றால் முடியாததுஒன்றுமில்லை” என்பது வாழ்வு களை இழந்துவிடக் கூடாது என்பதற்காக  நமது முன்னோர் சொல்லி வைத்தஒரு ஏமாற்று. எவ்வளவு முயன்றாலும் முடியாதவை என்று சில உண்டு. விதியைச்  சுட்டிப் பாடும் இடங்களிலும்அதற்கேயான கையறுநிலையை இயல்பாகவே தொட்டுவிடுகிறது அவரது குரல்.


ஒரு பாடகன் விதவிதமான பாவங்களில் பாடியிருந்தாலும் அவனது குரல் ஏதோ ஒரு ஆதாரமான மனிதஉணர்வுடன் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். அவ்வகையில் எஸ்பிபி யைக் ‘கொண்டாட்டம்’ எனலாம்.அப்படி ராஜாவின் குரல் எந்த உணர்வோடு பிணைந்திருக்கிறது என்று யோசித்தால் அதற்கான பதில்‘கண்ணீர்’ தான். “ஆலோலம் பாடி” என்கிற பாடல் அழுகையில் துவங்கி அழுகையில் முடிகிறது. “எங்கேசெல்லும் இந்தப் பாதையும்” அப்படித்தான். வரிகள் இவற்றிக்கு ஒரு சாக்கு மட்டுமே. ராஜா நம்மை காதலிக்கவைத்திருந்தாலும்  ஆட வைத்திருந்தாலும் அவரது குரலின் ஆதாரம் துக்கம்தான். நிர்கதியாக நிற்கும்ஒருவனின் அவலக்குரலாக ஒலிக்கும் பண்பு அவரிடம் உண்டு. நாம் அப்படி நிர்கதியில் நிற்கும் தருணங்களில்அவர் குரல் நம் குரலாகவே மாறிவிடுகிறது. நாம் நடுரோட்டில் பலர் காண அழுது கொண்டே போகிறோம்.

 

“அள்ளி அணைக்க யாரேனும் இருக்கும் இடத்தின் பெயரெல்லாம் வீடென்று ஆகுக” என்பது நண்பன் குணாகந்தசாமியின் கவிதை வரி.  வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குமான இரண்டுமணி நேரப் பயணத்தில் என் ஹெல்மெட்டுக்குள் அழகான வீடொன்று உருக்கொள்ளும். அதைக்கட்டியெழுப்பி வாழ்வின் மகத்தான பரிசாக கையளிப்பவர் இளையராஜா. உண்மையில் அது வீடுபேறு.

 

“தாயிற்சிறந்த தயாளனுக்கு” என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


நன்றி: காலம்- டிசம்பர்: 2021

Comments

அது செடிசெத்தைகள் மிதந்தலையும், லேசாக மண் கலங்கித்தெரியும் ஓடையின் பளிங்கு.// என்னவொரு உவமை! எனக்கு முதலில் ராஜாவின் குரல் கீதாஞ்சலி படப்பாடல்களில்தான். ”மாலைமுதல்....ல்ல்ல்ல்ல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே”வும். வாசனைப்பூக்கள் வாய்வெடிக்கவும் எனை ஏதோ செய்தது. அதுவரையிலான சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், சீர்காழிகளின் கட்டைக் குரலுக்கு எதிர்த்திசையில் வேறு மாதிரி ஒரு குரல் நீங்கள் சொல்வதுபோல அது ஓடையின் பளிங்கு என்றுதான் நானும் நினைக்கிறேன்.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம