இந்த அதிகாலையில்
ஓர் ஓட்டு வீட்டின் கூரை மீது
எழுந்தருளியுள்ளது ஒரு மயில்
எந்தத் தருணத்தும்
இடிந்து விழும் கதியிலுள்ள அவ்வீடு
சட்டென ஒரு கலைக்கூடமாகிவிட்டது
பவிக்குட்டி எம்பிஎம்பி குதிக்கிறாள்
என்னென்னவோ பேசுகிறாள் அதனோடு
மயில் தோகை விரித்து ஒரு குலுக்கு குலுக்குகையில்
" இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவே...." என்று கூவினாள்.
நடனமும் பாட்டும் போன்றிருந்ததக்கணம்.
நொண்டியாட அழைக்கிறாள் அதை.
" எனக்குத் தெரியாதே..? " என்றது வருந்திச் சொல்வது கேட்கிறது எனக்கு.
மயில் ஒன்றும் சும்மா வரவில்லை.
பவியின் அப்பன் வீட்டை விட்டு ஓடும் போது
கூடவே ஓடிப்போன அவளது சிரிப்பை
திரும்பக் கொத்தி வந்துள்ளது.
Comments