Skip to main content

நீலம்பாரித்தல்



   ஓர் அதிகாலையில் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்  பாத்ரூமிலிருந்து பாய்ந்து வந்து சாப்பாட்டுத்தட்டின் முன் அமர்ந்தேன். ஒரு காலத்தில் “ சத்துணவு” என்று எங்கள் நண்பர் குழாமால் கேலி செய்யப்பட்ட அதே சம்பாரவை. இன்றோ என் தினசரி காலை உணவு. “சத்துணவு” என்கிற விளி எப்படிக் கேலியானது என்பது இன்று வரை விளங்கவில்லை. அவசர அவசரமாக அள்ளி வாயில் திணிக்கையில்தான் கவனித்தேன் என் கையை. அது கருநீலத்தில் இருந்தது உடனே இடது கைக்கு ஓடினேன். அதுவும் அப்படியே இருந்தது. எதையோ தொட்டுவிட்டு ஒழுங்காக கழுவாமல் அமர்ந்து விட்டேன் போல ? திரும்பவும் எழுந்து கைகளை அழுத்திக் கழுவி விட்டு வந்தமர்ந்தேன். ரயில்வேறு தூரத்தில் கூவிக்கொண்டிருந்தது.
  இரண்டு வாயிற்குப் பிறகு திரும்பவும் கைகளைப் பார்த்தேன். எதுவும் மாறவில்லை. கருப்பு குறைந்து நீலம் கூடிவிட்டது போல் தோன்றியது. கட்டைவிரல் மேட்டில் கொஞ்சம் வெளிரிய இளமஞ்சளும் பூத்திருந்தது. எனக்கு எல்லாம் விளங்கி விட்டது.
   சமீப நாட்களில் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். என்னளவில் கொஞ்சம் கடுமையானதுதான். பத்து கிலோ குறைத்தத்தில் நெஞ்செலும்பு வெளித்தள்ளி விட்டது. ஆனால் இந்தக் கட்டுப்பாடு எந்த மருத்துவரின் ஆலோசனையின் படியும் மேற்கொள்ளப் படவில்லை. எனக்கு நானே வைத்தியன் ஆகி என் உடலைக் கொண்டு நானே நிகழ்த்திய ஆராய்ச்சி இது. சர்க்கரையை நிறுத்தி விட்ட தைரியத்தில் பேக்கரி பண்டங்களுக்கும் விடை அளித்திருந்தேன். விளைவு நன்றாகவே இருந்தது. ஆனால் கூடவே வந்துவிட்டது போலும் உபவிளைவு.
   இரண்டு வருடங்களாகவே தேநீரில் “வித் அவுட்டுக்கு” மாறியிருந்தேன். சமீபமாக சர்க்கரை கலந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். இப்படி சுத்தமாக சர்க்கரையை விலக்குவது சரியா? என்று சில நண்பர்கள் எழுப்பிய கேள்வியை நான் பொருட்படுத்தவில்லை. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருந்ததால் தொடர்ந்து சர்க்கரை புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தேன். இத்தனைக்கும் நானொரு சர்க்கரைப் பிரியன். சிறுவயதில் 20 கம்மர்கட்டுகள் இல்லாமல் நான் சினிமாவுக்குப் போனதில்லை. இடைவேளைக்கு முன் பத்து. பின் பத்து என்பது கணக்கு. கம்மர்கட்டுக்கு சைட்டிஷ் சினிமாவா? சினிமாவுக்கு சைட்டிஷ் கம்மர்கட்டா என்பது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.         
   நீலம் மறைவது போல் தெரியவில்லை.  அப்படி இனிப்பில் ஊறித்திளைத்த உடலை பட்டினி போட்டு வாட்டியதின் விளைவு இப்படி கைகளில் வந்து ஏறியிருக்கிறதா? அல்லது உடலுக்குள் முக்கியமான உறுப்பொன்று  கொஞ்சம் கொஞ்சமாய் அழுகி வந்து, அழுகல் முற்றிவிட்டதன் சாட்சியா இது?
 அடுத்து செய்ய வேண்டியது என்ன? எந்த மருத்துவரைப் போய் பார்ப்பது? எதனால் இப்படி ஆகிவிட்டது? முந்தைய இரவு முழுக்கவும் தூக்கமின்மையால் அவதியுற்றிருந்தேன். அதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பிருக்குமா? அதற்கு முந்தைய நாள் இரவு ரெஸ்டாரெண்டில் பரிமாறப்பட்ட காடை வறுவலில் ஏதும் பிழைபட்டுவிட்டதா? எண்ணற்ற கேள்விகள். தீராத குழப்பங்கள்.
   மனம் திருந்தி குற்றவுணர்ச்சியில் உழலும் ஒரு கொலைகாரன் தன் கைகளை கண்டு கண்டு குமைவதைப் போலே என் கைகளைக் கண்டேன். என் பாவங்கள் தான் ஒவ்வொரு விரலிலும் ஏறியிருக்கும் இந்த நீலவண்ணங்கள். வாழ்வு குறித்த திட்டங்கள்,  பிரம்மாண்ட கற்பனைகள் யாவும் “ பட்” என்று வெடித்து வீடு முழுக்கச் சிதறிவிட்டன. என் தெய்வமே! நான் அப்படி என்னதான் செய்து விட்டேன்?  எந்தக் குருடனுக்கு புதைகுழிக்கு வழி சொன்னேன்? எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன்? எவன் தொடைச்சதைக்கு நன்றி மறந்தேன்? எதற்கிந்த தண்டனை?
  நோயும் ஞானமும் இரட்டைப் பிறவிகள் போலும்? நோய் கண்ட சில நிமிடங்களிலேயே ஞானத்தின் தாடி என் முகமெங்கும் மண்டிவிட்டது. இந்த வாழ்வுக்கு என்னதான் பொருள்? இத்தனையையும் கையுள் வைத்து ஆட்டிப் பார்க்கும் அவன் யார்? எங்கிருந்து வந்தேன்? எதற்காக வந்தேன்? எங்குதான் போகப் போகப்போகிறேன்? அடர்ந்து செறிந்த இருளுள் ஆழத்திற்குச் சென்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், “நேரமாகலையா?” என்று வாசலில் நின்று அழைத்த மனைவியின் குரல் கேட்டுத் திரும்பினேன். அப்போதுதான்  எதேச்சையாக வாஷிங் மெசினைப் பார்த்தேன்.  அதில் புதிதாக வாங்கிய துண்டு காய்ந்து கொண்டிருந்தது. ஒரு காதிபவனில் 20%  தள்ளுபடியில் ரூ.35 க்கு வாங்கியது. நீலக்கலர். இன்பத்தின் மின்னலொன்று என் இதயத்தில் வெட்டி முறிந்தது. அதை எடுத்து தண்ணீரில் நனைத்துப் பார்த்தேன். வானத்தை வாளியில் முக்கி அழுத்தியது போல அவ்வளவு நீலம் பிரிந்து வந்தது.

       ரயில் போய்விட்டதுதான். ஆனால் உயிர் கூட்டிற்குத் திரும்பி விட்டது.

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?