Skip to main content

கண்ணாடிச் சில்லுகள் பதித்த கோட்டை மதில்


நமது சங்கக்கவித் திரட்டில்  பிரிவே அதிகம் பாடப்பட்டுள்ளது.  நமது கவிகள் பாலை, பாலை என்று பறந்திருக்கிறார்கள். காதலரைத் தேடி ஊர் ஊராக அலைந்ததன் பொருட்டே வெள்ளிவீதியும், ஆதிமந்தியும் தனித்தன்மையுடன் நினைவு கூறப்படுகிறார்கள்.  காமத்துப்பாலில் அதிகம் பாடப்பட்டதும் கூடலின் காமம் அல்ல, பிரிவின் காமம்தான். அய்யன் பிரிவை உருகி உருகி எழுதியுள்ளார்.பிரிவு ஒரு சுவை.  எழுதித் தீராத சுவை.  தலைவன் பிரிய நினைக்க நினைக்கவே தலைவியின் கைவளை நெகிழ்ந்து வீழ்கிறது. அல்லது தமது கைவளை தாமாக  நெகிழ்ந்து வீழ்வது கண்டு தலைவன் பிரிய நினைக்கிறான் என்பதை துப்பறிந்துவிடுகிறாள் தலைவி.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 
வல்வரவு வாழ்வார்க்கு உரை.

என்கிறாள் ஒருத்தி.

அவளுக்கு எந்த சமாதானங்களும் வேண்டியதில்லை. அவள் எதையும் கேட்க தயாரக இல்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம்" போக மாட்டேன்"  என்கிற ஒற்றைச் சொல்தான். அவன் திரும்பி வருவது குறித்த கதைகளையெல்லாம் அவள் கேட்டு பிரயோஜனமில்லை. ஏனெனில் அதுவரை அவள் உயிர் தரிக்கப்போவதில்லை. 

" பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல.."

என்கிறாள் ஒரு தலைவி. நீரில் ஜோடியாக வாழும் மகன்றில் பறவைகள் தமக்கிடையே ஒரு பூ இடைப்பட்டு அதனால் சில விநாடிகள் பிரிய நேர்ந்தாலும், ஒரு முழு வருடமும் பிரிந்திருந்தது போல் துயருருமாம். அவ்வளவு துயர் அளிப்பதாக உள்ளது இந்தப் பிரிவு என்கிறாள் தலைவி.

பிரமாதமான பாடல்கள். ஆனால் உண்மை அவ்வளவு பிரமாதமாக  இல்லை. அன்னையை இழந்த பிள்ளையும் ,பிள்ளையை இழந்த அன்னையும் அறுசுவை உணவுகளோடு தொடர்ந்து ஜீவிக்கவே செய்கிறார்கள். "காதல் போயின் காதல் " என்பது முன்பு  நகைச்சுவையாகச் சொல்லப்பட்டது. இன்று அது எளிய உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. காதல் ஒரு நோய் எனில் அதற்கு மருந்தும் காதலே என்றுதான் அய்யனும் சொல்கிறார்.  நோயும் மருந்தும்  வேறு வேறாக இருப்பதில் சிக்கலில்லை. அது தெளிவாக விளங்குகிறது. இரண்டும் ஒன்றாகவே இருப்பதில் தான் என்னவோ சிக்கல் இருக்கிறது என்று நினைக்கிறேன். 

என் நண்பன் ஒருவன் கவிஞன். 42 வயதில் அவனுக்குப்  புதிதாக ஒரு காதல் வந்தது. காதல் எப்போது வந்தாலும் புதிதாகத் தான் வருகிறது. பிராயத்துக் காதலின் அதே பதற்றத்துடன், அதே அலைக்கழிப்புடன், அதே பரவசத்துடன், அதே பறத்தலுடன் அவனை காதல் ஆட்கொண்டது. கிறுக்குத் தனத்தின் எல்லா இன்பங்களையும் ஆண்டு அனுபவித்தான். காதலி செல்லும் வழியில் இருக்கும் பேக்கரியில் அமர்ந்து கொண்டு அரைமணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு டீக்கள் குடித்தான். 20 வருடத்துக்கு  முன் செய்த  அத்தனை சேட்டைகளையும் திரும்ப நிகழ்த்தினான். சுமார் ஒரு மாத கால நீடித்த அந்தச் சிறுபருவத்தில் தன் கவிவாழ்வின் மிகச்சிறந்த கவிதைகளை எழுதினான்.  சூறாவளி போல் தன்னைத் தாக்கிவிட்டு  கண் மறைந்து போய்விட்ட  அந்தச் சின்னக்காதல்  குறித்து அவனால் தெளிவாக எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்று உறுதி அந்த நாட்களில் அவன் முழுக்க முழுக்க சிறுவனாக இருந்தான். மகிழ்ச்சியை ஏன் கூராய்வு செய்ய வேண்டும்? அதனால் நானும் அவனிடம் ஏன் ? எதற்கு? எப்படி ? என்று கேட்டுக் குடையவில்லை. 

திருமணமான புதிதில் அடிதடிகளோடு வாழ்க்கையைத்  துவங்கிய ஒரு தம்பதி பின்னாட்களில் ஆதர்ஷ தம்பதிகளாகி  முதுமையின் சாப நிழல் படிந்து விடாமல் ஒருவரையொருவர் காத்து நின்று மரணத்திலும் இணைபிரியாது ஒரே நாளில் விண்ணுலகு எய்திய கதையொன்று எனக்குத் தெரியும். 

எங்கள் ஊரில் ஒரு காதல் ஜோடி. பள்ளிப்பருவத்திலிருந்தே காதல். மூன்று சினிமாக்கள் எடுக்குமளவு சாகசங்கள் புரிந்து மணம் முடித்துக் கொண்டார்கள். நான்கு வருடம் கழித்து விவாகரத்துக் கோரி கோர்ட் வாசலில் நின்றார்கள். எல்லா சாகசங்களும் பொருள் இழந்து நின்ற தருணம் அது. அவள் ஏறிக் குதித்த , கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்ட, அதி உயரமான மதில்சுவர்  இப்போது திரு திருவென விழித்துக் கொண்டு நிற்கிறது. அதற்கு ஒன்றும் விளங்கவில்லை. எனக்கும் தான்.  பிரிவுப் பொழுதில் பொங்கியெழும் ஏக்கத்தின் பிணைப்பும் , சதா காலமும் கூடவே இருப்பதில் உருவாகும் சலிப்பும்  யோசிக்க விந்தையாகவே  உள்ளன.  காதல் மனத்துள் காலம் ஆற்றும் வினைகள் தீவிரமானவை. புதிரானவை. அது எங்கு வினை செய்கிறது என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அப்பாவி உயிராக  உள்ளது காதல். 

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை விட காதல்  திருமணங்களில் விவாகரத்துகள் அதிகமாகி வருவதாக புள்ளிவிபரங்கள் சொல்லப்படுகின்றன. சமயங்களில் புள்ளிவிபரங்கள் உருவாக்கப்படுபவை. நான் இதை நம்பவில்லை. காதலை இன்னும் நம்புபவன் என்பதால்  இதை நம்ப விரும்பவில்லை.

பிரிவுப் பொழுது நீள நீள சந்திப்பு இனிக்கும் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. காதல் முத்தங்கள் கசக்கிற தருணங்கள்தான் ஆய்விற்குரியவை.அன்பே! என்கிற ஆழ்ந்த விளிப்பு சனியனாகிப் போவது எப்படி? தூரத்தில்  இருக்கையில் வசீகரத்தால் பொலிந்த ஒன்று கூடவே வந்தவுடன்  ஒளி குன்றிப்போகும் துயரம்தான் என்ன? மனத்திற்குப் புதியதின் மீதுள்ள  தீராத வேட்கைக்கு காதலும் விதிவிலக்கில்லையா? அது எல்லாவற்றையும் அவசர அவசரமாக பழசாக்கி விட்டு சலிப்பில் பரிதவித்து வாடுகிறதா? 

சந்திப்பை விட பிரிவில்தான் ஏக்கத்தின் தேன் ஊறி ஊறி நுரைக்கிறது. மனம் திரும்ப திரும்ப பழையதை மீட்டி ஒவ்வொரு நினைவையும் வீணையின் பளபளபாக்குகிறது.  விருமாண்டி படத்தில் வரும் ஒரு வசனம் போல "சந்தோசம்னா என்னன்னு அதை அனுபவிக்கையில மனுசனுக்குத் தெரிவதில்லை" . காதல் என்றால் என்னவென்று அறிய மனிதனுக்குப் பிரிவு வந்து சேர வேண்டியுள்ளது.

கடவுள்களால் முற்றிலுமாக கைவிடப்பட்ட நாட்களில் குட்டி தெய்வமாக  இருந்து  கடும் கசப்புகளில் இருந்து மீட்டெடுத்திருக்கிறது காதல். அது போலி தெய்வமாகக் கூட இருக்கட்டும். போலிகளை நம்பி ஏமாறாமல் முழு உஷாராக இருப்பதன் மூலம் நாம்  அடைவதுதான் என்ன? பெரிய களைப்பைத் தவிர வேறில்லை. போலிகளை நம்பி சின்னதாக ஏமாறுவதில் கொஞ்சம் மகிழ்ச்சி கிட்டும் என்றால் அந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது. காதல் எனக்கு வழங்காமல் ஒளித்துக் வைத்துக் கொண்டதன் மீதான புகார்கள் ஏதும் இப்போது இல்லை. மாறாக அது அருளியதன் மீது நன்றியோடு இருக்க விரும்புகிறேன். 

காதல் மட்டுமல்ல மொத்த வாழ்வின் சாரமுமே கூட  பிரிவும் சந்திப்பும்தான் அல்லவா? ஆகவே பிரிவோம்...சந்திப்போம்..

     நன்றி; அந்திமழை- ஏப்ரல்- 23

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான