திடீரெனக் கண்டேன் சுவரில் மிதக்கும் ஒரு ஒளிக்குழம்பை. ஆனந்தக் குழப்பத்துள் தலைகுப்புற வீழ்ந்தேன். சேறும் சகதியும் ஊரும் புழுவும் மொய்க்கும் ஈயும் மல்லாந்து கிடக்கும் ஒரு பல்லியின் சடலமும் சேர்ந்த ஒரு சிறு குட்டையில் எங்கிருந்தோ வந்த ஒரு சூரியக் கதிர் பட்டுத் தெறிக்கிறது. சுவரிலோ சேரில்லை சகதியில்லை பல்லியின் சடலமும் இல்லை தெரிவதெல்லாம் முழு ஒளித் தளும்பல். பள்ளிப் பிராயத்தின் அறிவியல் வகுப்பில் ஒளிச்சிதறல், பிரதிபலிப்பு, எதிரொளிப்பு என்றெல்லாம் சொல்லப்பட்டனவே அவையல்ல இந்த நடுவயதில் கன்னத்தில் கைகூட்டி நெடுநேரம் இப்போது நான் கண்டு கொண்டிருப்பது |
வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல், மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில் ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!

Comments