
இரண்டு மாணவிகள் ஒரு குறிப்பிட்ட பாடத்தைச் சுட்டி அதைப் படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில் ஆரம்பப் பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நான் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தான் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இலைப்புதரின் கீச்சுக்குக் கீழே நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் பிஞ்சுக்கதிரொன்று மரச்செறிவில் தயங்கி சைக்கிளில் ஊர்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மரத்தின் கீழே மலரொன்று நிற்பதைப் பார்க்கிறேன் திரும்பி வந்தவள் சூடிக்கொண்டு செல்வதைப் பார்க்கிறேன் |

Comments