Skip to main content

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

 




கேரட் கண்ணிற்கு மிக நல்லது

இரு, இரு 

பச்சையாக உண்பதே நல்லது


முட்டை புரதச்சத்து மிக்கது

இரு இரு 

வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது


கீரை யுண்டால், பீடை யில்லை

இரு, இரு

முட்டையுடன் உண்டு தொலைக்காதே 


ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு

இரு, இரு

உப்பிட்ட வெந்நீரில்

நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம்


வானகமே, இளவெயிலே, மரச்செறிவே!

இரு, இரு

பால்காரன் வந்துவிட்டானா?


ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை

இரு, இரு

கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது


உடற்பயிற்சி மிக மிக முக்கியம்

இரு, இரு

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு


தூங்காதே தம்பி, தூங்காதே!

இரு, இரு

எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’


வெளி திறந்து கிடக்கிறது

இரு, இரு

ஃபீல் அட் ஹோம்


பணத்தினைப் பெருக்கு

இரு, இரு

ரஸத்திலே தேர்ச்சி கொள்


“நீ வாழ பிறரைக் கெடுக்காதே”

இரு, இரு

வலுத்ததே வாழும்


பிறப்பு என்றிருந்தால்

இறப்பு என்றிருக்கவே செய்யும்

இரு, இரு

சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும்


உன்னதங்களின் உன்னதம் 

எதுவென்றுரைத்தால் 

அது கவிதைதான்

இரு, இரு

கவிதையைப் பார்த்துக் கொண்டே 

வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது.


காதலன்றோ  ஜீவ மதுரம்

இரு, இரு

காதல்தான்,  கள்ளக்காதல் அல்ல


அன்பே சிவம்

ஆயினும்

உஷாரய்யா உஷாரு 

ஓரஞ்சாரம் உஷாரு


அன்புடையீர்!

நான் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கிறேன்

அருள் கூர்ந்து

நீங்கள் எல்லாவற்றையும்

முதலிலேயே

முழுசாகச் சொல்லி விட முடியுமா?


Comments

Popular posts from this blog

யோகக் கல்வியில் இன்று

"வி ளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுவதைப் போலே என்னை மொத்தமாக அணைத்துவிட்டு  உறங்க முடியுமா மாஸ்டர்? " என்று கேட்டேன் படுபரிதாபமான குரலில். அவர் சொன்னார்..  " நிச்சயமாக  முடியும்..  தானாக அணையும் போது அதுவாக நிகழும்"

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"