Skip to main content

Posts

டி.வி யில் நடக்கும் போர்

டி .வி யில் நடக்கும் போர் என்பது காணக் கிடைக்காத வாணவேடிக்கை கண் கொள்ளாப் பிரகாஷம் திரைகள் எரியும் அதிரடி சண்டைக் காட்சிகள் நிஜத்தில் நிகழ்வது புத்தம் புது பரவசம் டொம்… டொம்… எனும் இனிய சங்கீதங்கள் ஐ.பி. எல் ஆட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதனாலென்ன ஜாலியானவர்களே! நாம் சேனலை மாற்றுவோம். அங்கு  ஐ.பி. எல்-  லைக் காட்டிலும்  ஜாலி ஒரு குழந்தை துடிதுடித்துச் சாகிற ஜாலி டி.வி யில் நடக்கும் போரில் திளைக்க கோழி இறைச்சியை துணை கொள்ளும் ரசிகப்  பெருமக்காள்..! எதற்கும் ஒரு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்... “கோழி இறைச்சி தானே அது?”
Recent posts

நான் அதில் சிற்றெறும்பு

  நா ன் ஒரு எறும்பாய்ப் போய் விடுவதில் தீவிரம் கொண்டிருக்கிறேன் எறும்பெனில் எறும்பினும் எறும்பாக அவள் கழுத்தை ஊர்ந்து தீர்க்கையில் காலம் முடிந்திடும்  அளவு எறும்பாக அவ்வளவு எறும்பாக

ஆங்கிலத்தை இவர்கள் அறிவில்லா முண்டமெனக் கருதிவிட்டார்கள்

“தூ ங்காதே தம்பி…தூங்காதே..” என்பது காலாவதியாகிவிட்ட ஒரு அறிவுரை இன்றோ “தூங்குங்கள்…! தூங்குங்கள்..! என்று கை கூப்பி வேண்டுகிறது மருத்துவம் அவர்கள் இருவருமே தேக ஆரோக்கியத்தில் கவனம் கொண்டவர்கள் ஆகவே சரியாக பத்துமணிக்கு “good night” சொல்லிக் கொள்வார்கள். அரைமணி நேரம்  கழித்து அடுத்த “ good night “ “ good night ..!” “ good  night…!” “Good  night” க்கு தானொரு  “good night” தானா என்பதில் கொடூரமான குழப்பங்கள் தோன்றிவிட்டன அது புரட்டிய அத்தனை அகராதிகளும் ஆலோசித்த அவ்வளவு அறிஞர்களும் “good night “  என்றால் " good night" தான் என்று சொல்லி அதை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் இரும்புக் கதவில்  தலையை முட்டிக் கொண்டு அது இரத்தம் பெருக்கிய பொழுதில் அவர்கள் 13 வது “ good night”  சொல்லிக் கொண்டார்கள். சிற்றஞ்சிறுகாலை என்கிற “ good morning “ - ல் “ ok.. good night ..“ என்றவர்கள் அலுத்துக் கொண்ட போது ஆங்கிலத்திற்கு வெறி மூண்டுவிட்டது இரண்டு பொடணியிலும் பொளோர் பொளோரென நான்கு போடு போட்டது… “எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை  உண்டல்லவா? “

மோகினியாட்டம்

அ லுவலகத்தில் ஒரு சிறு பதவி உயர்வு. சால்வை அணிவிக்கிறார்கள் கொஞ்சம் பணமுடை கோல்டு லோன் கடையில் மணிக்கணக்காக  காத்திருக்க வேண்டியுள்ளது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது ஆம்புலன்ஸைப் பிடிக்க ஓடுகிறேன் அடுத்த மாதம் ஒரு கருத்தரங்கம் பழைய நூல்களைப் புரட்ட அடிக்கடி நூலகம் செல்ல வேண்டியுள்ளது. ஊரில் ஒரு பொதுப் பிரச்சனை முன்னணியில் நிற்பதால் கொலை மிரட்டல்கள் வருகின்றன அக்பர் யாரென்றே அறியாத ஒரு இளைஞன் என் போனை அக்பர் காலத்தது என்று  அறிவித்து விட்டான் நேற்று புதுச்செடியில் முதல் பூ வீட்டுப் பூனை ஈன்றிருக்கிறது ஒரே மியாவ்…மியாவ்… மியாவ்.. இவை எல்லாமே உன் 'ஹேண்ட் பேக்'குள் நடக்கின்றன.

கவி

  பெ ரிய மருத்துவமனையின்  சின்ன அறைக்குள் ஒரே படுக்கையில் உடலில் குழல்கள் செருகப்பட்டு வாரக் கணக்கில் கிடந்தாள் அம்மா. கொஞ்சம் தேறியதும் வராண்டாவில்  மெல்ல மெல்ல நடந்தாள் குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டிருந்தவள் பால்கனியை கை காட்டினாள் பூரண வெளி முன் நின்று "அப்பா... மொத மொதல்ல உன்னப் பார்த்த மாதிரி இருக்கு..." என்றாள் இருவரில்  நான்தான் கவி விருதுகள் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் கவி

பளீர்

ஒ ளி  விளக்குகளால் சுற்றப்பட்ட உயர்ந்த  கம்பத்திற்குக்  கீழே பளீரென ஒரு தள்ளுவண்டி அதில்  பளீரென விரிக்கப்பட்டிருக்கும் சிவப்பிற்கு மேலே பளீரென சில பச்சைப் பழங்கள் கடந்து செல்லும்  ஒவ்வொருவரையும்  பளீராக்கியபடி “மோரிஸ்… மோரிஸ் … ‘என்று அந்தத் தாத்தா வேறெதையோ விற்றுக் கொண்டிருக்கிறார்.

ஒளியினும் ஒளியிலிருந்து இருளினும் இருளுக்கு

  மூ க்குத்தி அணைந்துவிட்ட இருளில் இப்படிக் கால்களுக்குள் முகம் புதைத்துத் தேம்புவது தம்பீ...  இது நீயா? நானா?  நுந்தையா? எந்தையா? நுந்தையின் நுந்தையோ? எந்தையின் எந்தையோ? எந்த இடம் இது? எந்த யுகம் இது?