அலுவலகத்தில் ஒரு சிறு பதவி உயர்வு. சால்வை அணிவிக்கிறார்கள் கொஞ்சம் பணமுடை கோல்டு லோன் கடையில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது ஆம்புலன்ஸைப் பிடிக்க ஓடுகிறேன் அடுத்த மாதம் ஒரு கருத்தரங்கம் பழைய நூல்களைப் புரட்ட அடிக்கடி நூலகம் செல்ல வேண்டியுள்ளது. ஊரில் ஒரு பொதுப் பிரச்சனை முன்னணியில் நிற்பதால் கொலை மிரட்டல்கள் வருகின்றன அக்பர் யாரென்றே அறியாத ஒரு இளைஞன் என் போனை அக்பர் காலத்தது என்று அறிவித்து விட்டான் நேற்று புதுச்செடியில் முதல் பூ வீட்டுப் பூனை ஈன்றிருக்கிறது ஒரே மியாவ்…மியாவ்… மியாவ்.. இவை எல்லாமே உன் 'ஹேண்ட் பேக்'குள் நடக்கின்றன. |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments