“அ ன்பெனும் பெருவெளி” தமிழ் வாழ்வில் வள்ளலாரின் இடத்தை வகுத்துரைக்கும் ஒரு ஆவணப்படம். தமிழ் பக்தி மரபில் சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் அவர். திருவருட்பாவின் ஆறாம் திருமுறையால் ஒரு கவிஞராக உருவெடுத்திருந்தாலும் அவர் பெரும்பாலும் அப்படி எண்ணப்படுவதில்லை. ஆனால் பாரதிக்கு முன்பாக தமிழின் குறிப்பிடத்தக்க ஒரு கவியாக அவர் இருந்துள்ளார். துறவியின் தோற்றத்தில் தோன்றினாலும் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் “ , மேல்வருணம் தோல் வருணம் கண்டார் இலை”, “குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று” என்பது போன்ற , அவர் காலத்திற்கான ஆக்ரோஷமான வரிகளால் ஒரு புரட்சிக்காரர் போலவே அவர் நினைவு கூரப்பட்டு வருகிறார் இந்த ஆவணப்படத்தை வள்ளலார் குறித்ததென்றும் , இசை குறித்ததென்றும் இரண்டு விதமாகப் பகுக்கலாம். இரண்டும் தனித்தனியே அமையாமல் ஒன்றுள் ஒன்று அமர்ந்திருப்பதால் கலவையின்பத்தின் மகிழ்ச்சியொன்று நமக்கு வாய்க்கிறது. வள்ளலாரின் ஆறு பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. நமது பக்திப் பாடல்களுக்கென்று கைக்கொள்ளப்படும் ‘ காதலாகிக் ...