கம்பனின் காதல் கவிதைகள் 1. துயரச் சந்தனக் கிண்ணம் இராமனும், இலக்குவனும் சீதையைத் தேடிச் செல்கையில் கிட்கிந்தையில் உள்ள பம்பை என்கிற பொய்கையை அடைந்து அங்கு ஒரு நாள் தங்குகின்றனர். மலர்கள், பறவைகள், மீன்கள் என இயற்கை எழில் மிக்க பொய்கை அது. கன்னியர் கனி இதழ்ச்சுவை போல் ருசிப்பது. கம்பன் இந்தப் பொய்கையை ஒளியும் நறுமணமும் கூடிய சந்தனக் கிண்ணம் என்கிறான். “…ஒண்தளச் சேறு இடு பரணியின் திகழும் தேசது” (3723) அதன் எழில் இராமனுக்குச் சீதையின் எழிலை நினைவுறுத்தி வருத்துகிறது. அந்தப் பொய்கையில் காதலின் துயர நாடகங்கள் நிகழ்கின்றன. அரி மலர்ப் பங்கயத்து அன்னம், எங்கணும், ‘புரிகுழல் புக்க இடம் புகல்கிலாத யாம், திருமுகம் நோக்கலம்; இறந்து தீர்தும்’ என்று, எரியினில் புகுவன எனத் தோன்றும் ஈட்டது; ( 3715) அந்தப் பொய்கையில் உள்ள தாமரையில் அன்னங்கள் வாழ்கின்றன. அவ்வளவுதான் செய்தி. ஆனால் கம்பன் செக்கச் சிவந்த தாமரையை, பற்றி எரிய விடுகிறான். அதில் அன்னங்களை எரி புக வைக்கிறான்....