Skip to main content

கர்த்தரின் வருகை
சமீபமாயிருக்கிறது

கர்த்தர் வருகிறார்
அவர் நமக்காய் கொண்டு வரும்
புளித்த அப்பங்கள்
ரொம்பவே புளித்து விட்டன
ஆனால், கர்த்தர் வருகிறார்

உங்கள் அன்பில்
நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம்
உங்கள் காதலியை
புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம்
கர்த்தர் வருகிறார்

பாதி வழியில் அவர் வாகனம்
பழுதாகி நின்று விட,
அவர் நடந்து வருகிறார்
ஆனாலும் கர்த்தர் வருகிறார்

இன்னுமொரு தேர்தல் முடியட்டும்
இன்னொரு மக்களாட்சி மலரட்டும்
கர்த்தர் வருகிறார்

எப்போதும் மிரட்டிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் மிரட்டட்டும்
எப்போதும் இறைஞ்சிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் இறைஞ்சட்டும்
இரட்சிப்பின் நாயகர் வருகிறார்

கர்த்தர் ஒருவரே
அவருக்கு உதவியாளர்கள் யாருமில்லை
அவரே எல்லா இடங்களுக்கும்
வர வேண்டி இருக்கிறது
ஆனாலும் அவர் வருகிறார்

நீதியின் மீது பசிதாகமுடையோருக்கு
இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்
வெகு காலம் பற்கடிப்பில் உள்ளோர்
இன்னும் கொஞ்சம் கடிக்கட்டும்
கர்த்தாதி கர்த்தர் வருகிறார்
இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும்
இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும்
கர்த்தர் வருகிறார்

பயப்படாதே சிறு மந்தையே!
கர்த்தர் on the way.

Comments

சமூகத்தின் மீதான விமர்சனத்தை காட்டமாக சொல்லி உள்ளீர்கள்.. நன்றாக இருக்கிறது நண்பா..
word verification எடுத்து விட்டால் கமென்ட் பண்ண வசதியாக இருக்கும் இசை..
உங்க பகடிய ரசித்தேன் நண்பா, அருமையான கவிதை

//உங்கள் அன்பில்
நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம்
உங்கள் காதலியை
புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம்
கர்த்தர் வருகிறார்//

:)

அருமை
கலக்குங்க இசை. ‘கர்த்தர் வருவார் நிச்சயமாக’பிரளயத்தின் முடிவில் தன்னந்தனியனாக நின்று கதற. இணையத்திலும் ‘இசை’பரவட்டும். வாழ்த்துக்கள். மற்றது, நீங்கள் பதிவு போடும்போது தலைப்பை தனியாகப் போடுங்கள். அதற்கு மேலே title என்றொரு பகுதி இருக்கிறது பாருங்கள். அதற்குள் போடுங்கள். அப்போதுதான் தலைப்பு மட்டும் வலது பக்கத்தில் தெரியும். கவிதை உள்ளீடாக இருக்கும். வேறென்ன… எப்போதும் குடித்துவிட்டுத்தான் என்னோடு உரையாட வாய்க்கிறதா உங்களுக்கு?
வடகரை அண்ணாச்சியின் பதிவு வழியே வந்தேன்.

கவிதை அருமை நண்பரே!

Popular posts from this blog

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...