Skip to main content

ஏக்கத்தின் தேன்


நள்ளிரவில் விழித்துக்கொண்டு
பாலுக்கழுகிறது என் குழந்தை.
ஒரு வாய் சோறதற்குப் போதவில்லை
அள்ளிஅள்ளிக் கொட்ட எனக்குத் துப்பில்லை.
கிறீச்சிடா வண்ணம் கதவு திறப்பதில்
அது சமத்தெனினும்
கொஞ்சம் கிறீச்சிட்டுத் தான் விடுகிறது.
அப்போது நான் கண்மூடிக் கிடப்பது போல் கிடப்பேன்.
தெரியும், அது மண் தின்னப்போகிறது.
போகட்டும்.
கையிரண்டில் அள்ளி வாய் முழுக்கத் தின்னட்டும்.
சதா ஏக்கத்தின் தேனூறும் அதன் கட்டை விரல்
சுண்டச் சூம்பி விட்டது
சீக்கரத்தில் மறைந்து விடும்.
கண்நுதல் நெருப்பில் தப்பிப்பிழைத்த
ஒரு துளியிலிருந்து
பிறந்து வளரும் குழந்தையிது,
சிவனேன்னு கிடப்பதில்லை ஒரு பொழுதும்

Comments

வறுமையின் வலியைச் சொல்லக் கூடிய அற்புதமான கவிதை. பகிர்விற்கு நன்றி.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...