1.நம் பூனைக்குட்டியைப் பார்த்தேன் கோடாக இளைத்து மேலெல்லாம் புண்ணாக முடைவீசும் குப்பைமேட்டில் எதையோ மோந்துபார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியை பார்த்தேன் அதற்கு என் உதட்டிற்கும் உன் கழுத்திற்குமான முனகலில் பிறந்ததின் அதே சாயல் என் பழைய பூனைக்குட்டியே.. பழைய ப்புச்சுக்குட்டியே.. பழைய வெல்லக்கட்டியே.. பழைய மொசக்குட்டியே.. 2. ரிசல்ட் பயாப்ஸி டெஸ்டுக்கான முடிவுகள் வந்துவிட்டன மருத்துவர் மூக்கு கண்ணாடியை கழற்றிவிட்டு கருணையின் கண்களைக் காட்டினார் தோளைத் தட்டித் தந்து தைரியமாக இருக்கச்சொன்னார் நான் காதியில் ஒரு நீலக்கலர் சால்வை வாங்கிப் போத்திக்கொண்டேன்.