Skip to main content

தங்கவேல், முத்துவேல், ஞானவேல், வடிவேல் …



தங்கவேலுவின் காதல் முத்துவேலை அழைத்து
கோபமாக கத்தியது.
இந்த உலகத்தில் நீதி செத்துவிட்டதுஎன்று சொன்னது.
முத்துலேல் தன் வாழ்வில் அநேகந் தடவைகள்
அந்த வசனத்தை கேட்டிருந்தார்.
ஆமாம்….ஆனால் இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதுஎன்றார்.
அவளொரு நயவஞ்சகி என்றது.
நயவஞ்சகம் என்கிற சொல்லில் கூட
கொஞ்சம்  புளித்த வாடையடித்ததால்
அவர் பேச்சை திசைதிருப்ப முயன்றார்.
“  தமிழ்மூவர்கேட்டீர்களா ? “
என்று கேட்டு வைத்தார்.
தொலைபேசியின் மறுமுனையில் இருப்பது காதல்
அதுவும் ஆக்ரோச கதியில்.
பாவம், அதையவர் அறிந்திருக்கவில்லை.
தமிழ் ஒரு புடலங்காய்
 அந்த மூவரும் சுரைக்காய்கள்
என்று பதில்வரவே, முத்துவேல் அமைதியானார்.
பின் தன் பழைய நினைவுகளின் பாழண்டிய பக்கங்களை
புரட்டத் துவங்கியது அது.
அதில் நிலவுப்பயன் துய்த்த காட்சிகளும்,
கைநரம்பு அறுந்து இரத்தம் பீறிட்ட காட்சிகளும் வந்தன.
பழைய நினைவுகளின் புத்தகத்தை கையில் எடுத்ததுமே
அதன் கோபமும் ரோஷமும் பறந்து விட்டது.
…..ள்…..ளீ .. “ என்று கொஞ்சியது.
அப்போது தோ ஒரு சொரசொரத்த கரம்
 தன் கன்னத்தை செல்லமாக கிள்ள,
 முத்துவேல் அதை எரிச்சலில் தட்டிவிட்டார்.
 அவர் நெளிகிறார்..
 வளைகிறார்
பெருமூச்செறிகிறார்
கொட்டாவி விடுகிறார்
அவர் அடிவயிற்றிலிருந்து கூட
எதோ ஒன்று குமட்டி வருகிறது.
எனினும்,
காலத்தை சற்று பின்னோக்கி ஓட்டிப் பார்த்தால்
அங்கு நாம் இதே காட்சியை திரும்பக்காண்கிறோம்.
ஆனால், அதில் தங்கவேலின் பாத்திரத்தில் நடித்திருப்பவர்
நமது  முத்துவேல்.
கிள்ளப்பட்ட கன்னம் ஞானவேலுடையது.
ஞானவேலின் கதை எனக்குத்  தெரியாது.
ஆனால் எனக்கு வடிவேலைத் தெரியும்.
அவர்தான் தங்கவேலின் கன்னத்தை கிள்ள இருப்பவர்

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.