Skip to main content

தெரியும்



                     





     அது அழுக்கும் காற்றோட்டமற்றதுமான வகுப்பறை.அதன் பின்னால் மனோகரமான பள்ளத்தாக்குகள் இல்லை. அதை ஒட்டி ஓடைகள் சலசலப்பதில்லை. ஆனாலும் அதனுள்ளிருந்து ஒரு கிறங்கடிக்கும் நறுமணம் கசிந்து வரும். அது இதயத்தின் தசைநார்களை இன்பத்தின் வலியால் துடிதுடிக்கச் செய்யும்.வினோதம் என்னவெனில், இப்படி ஒரு அறை இருப்பதே முக்கால்வாசி மனித குலத்திற்குத் தெரியாது. சிலருக்கு தெரிந்திருந்த போதிலும் அவர்களது நாசிகளுக்கும்   அந்த நறுமணத்திற்குமிடையே ஊடுருவமுடியாத தடை இருந்தது.
  
 என்ன வண்ணம்  ? என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாத, பொத்தானுக்குப் பதிலாக பின்னூசி குத்தப்பட்ட  சட்டையும், பொத்தல்களால் “ தபால் பெட்டி “ என்று கேலி செய்யப்பட்ட  டவுசரும் அணிந்திருந்த எங்களால் அந்த நறுமணத்தை உணர முடிந்தது. நாங்கள் பரவசம் கொப்பளிக்க வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டோம். அப்போது கருணையற்ற கண்களை தடித்த கண்ணாடியால் மூடியிருந்த , கடுத்த முகமும் , கொண்டைப் பிரம்பும் கொண்ட ஒரு ஆசிரியர் எங்களை நோக்கி ஓடிவந்தார்.. “காம்யூவைப் பார்த்தாயா? ”  “ காப்காவைத் தெரியுமா ? ” என்று சீறிய படியே, வினோத மிருகமென, தன் பிளந்த வாயிலிருந்து நெருப்பை ஊதிவிட்டார்.
  
   பின்னூசி குத்தப்பட்ட  சட்டையும், தபால் பெட்டி டவுசரும்  அணிந்திருந்த நாங்கள், தலை திருகப்பட்ட  பறவையென, அவமானத்தின் கண்ணீரை மறைத்தபடி, தொங்கிய தலைகளுடன் வகுப்பறைகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டோம். அப்போது அந்த வழியே கொஞ்சம் புஷ்டியான, வழுக்கையும் , கனிவும் கொண்ட  மனிதரொருவர் வந்தார். எங்களிடம்  விசாரித்தது விட்டு எல்லோரையும் ஒரு பன்னீர் மரத்தடிக்கு அழைத்துச் சென்றார். “ நிஜமாகவே உங்களுக்கு காப்காவைத் தெரியாதா ? “ என்று கேட்டார். “ வேறு யாரையும் விட எங்களுக்கு அவனை நன்றாகவே தெரியுமென்று நம்புகிறோம் சார்... ஆனால் அவன் மொழி எங்களுக்குப் புரியவில்லை... “ என்று கலங்கினோம். அவர் அதைப் புரியச் செய்தார். ஆழ்ந்த கவலையில் விழுந்து கிடக்கும் ஒருவனின் நெஞ்சில் பெருக்கெடுத்து வரும் விசித்திர எண்ணங்களின் உலகம்  மெதுவாகக் துலங்கி வரக் கண்டோம். தோள்களை தட்டித் தந்து “ நறுமணத்துள் கிடப்பீர்கள் ! “ என்று ஆசீர்வதித்தார்.  
   
       சரிந்து விழும் டவுசரை அரை நாண்  கயிற்றில் இறுக்கிக் கொண்டு, வகுப்பறையை நோக்கி நடந்தோம். கடுத்த முகமும், கொண்டைப் பிரம்பும் கொண்ட ,  அந்த வெறி முற்றிய ஆசிரியர் இப்போதும் வாசலுக்கு ஓடோடி வந்தார். “காப்காவைத் தெரியுமா? “ என்று கத்தினார். இம்முறை அவர் கண்களை நேர்நோக்கி, நெஞ்சைத் தூக்கி “ தெரியும் “ என்று சொன்னோம்.


                (  தக்கை நிகழ்த்திய ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த அரங்கில் அவரை வரவேற்று நிகழ்த்திய உரை }

Comments

Popular posts from this blog

நினைவோ ஒரு பறவை

  இ ந்தமுறை மருத்துவர்  கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளக் கூடாது”  எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார்  எனில், எனது  நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக்  குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை  சாமாதி நிலைக்குத் தூக்குகிறார்  மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும்  இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள்,  அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...