Skip to main content

கருரோஸ்

 



சித்தி விநாயகர் முன்

அமர்ந்திருக்கிறேன்

வேண்டுதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன


நீராட்டும் பொருட்டு 

ஒவ்வொரு அலங்காரமாக

அழித்து வருகிறார்கள்.

தலைப்பாகை நீக்கி

ஆடைகள் களைந்து

எண்ணெய்ச் ஜொலிப்பின் மீது 

ஒரு குடம் நீரை வாரி ஊற்றினார்கள்.


முழுக்கருப்பின் முன் அமர்ந்திருக்கிறேன்


ஒரு கிள்ளுச் செவ்வரளி ஏந்தி

பக்தையொருத்தி வந்து சேர்ந்தாள்


இப்போது

மின்கருப்பின் உச்சியில்

சின்னஞ்சிறு இளஞ்சிவப்பு


இது 

நான் வேண்டிக் கொண்டிருந்த

தெய்வம் அல்ல.


தெய்வங்கள் குறுக்கிடாத தெய்வதம்.


Comments

GSK said…
அருளழகு மற்றும் இக்கவிதை இவ்விரண்டும் தினமும் அந்நாளை தொடங்கும் முன் படித்து விடுகிறேன். ❤️ . ஒரு நாளின் நிறைவை காலையிலே அடைந்து உலகை விடுதலையுடன் எதிர்கொள்கிறேன். நேற்று கடித்துண்ட காஷ்மீர் ஆப்பிளில் இன்று நெளிகின்றன புழுக்கள் போல அடுத்த நாளை எண்ணுவதில் இருந்து தப்பிக்கிறேன். உங்கள் கவிதைக்கு நன்றி. இப்படிக்கு உங்கள் வாசகன்.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...