Skip to main content

அன்பெனும் பெருவெளி: கூட்டுக்களி

“அன்பெனும் பெருவெளி”  தமிழ் வாழ்வில் வள்ளலாரின் இடத்தை வகுத்துரைக்கும் ஒரு ஆவணப்படம்.  தமிழ் பக்தி மரபில்  சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் அவர். திருவருட்பாவின் ஆறாம் திருமுறையால் ஒரு கவிஞராக உருவெடுத்திருந்தாலும் அவர் பெரும்பாலும் அப்படி எண்ணப்படுவதில்லை. ஆனால் பாரதிக்கு முன்பாக தமிழின் குறிப்பிடத்தக்க ஒரு கவியாக அவர் இருந்துள்ளார்.  துறவியின் தோற்றத்தில் தோன்றினாலும்  “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் “ ,  மேல்வருணம் தோல் வருணம் கண்டார் இலை”,  “குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று” என்பது போன்ற , அவர் காலத்திற்கான ஆக்ரோஷமான வரிகளால் ஒரு புரட்சிக்காரர் போலவே அவர் நினைவு கூரப்பட்டு வருகிறார்

இந்த ஆவணப்படத்தை    வள்ளலார் குறித்ததென்றும் , இசை குறித்ததென்றும் இரண்டு விதமாகப்  பகுக்கலாம்.  இரண்டும் தனித்தனியே அமையாமல் ஒன்றுள் ஒன்று அமர்ந்திருப்பதால் கலவையின்பத்தின் மகிழ்ச்சியொன்று நமக்கு வாய்க்கிறது. 

வள்ளலாரின் ஆறு பாடல்கள்  இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன.

நமது பக்திப் பாடல்களுக்கென்று  கைக்கொள்ளப்படும் ‘ காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்கிற வழமையான  உணர்ச்சிகரத்தை கைவிட்டு,  ஒரு புத்தம் புதிய  பரவசத்துள்ளலில்,  மேற்கத்திய இசை வடிவங்களின் வழியே  உருவாகியுள்ளது இந்த ஆல்பம்.  ஷான் ரோல்டனின் இசையில்  சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார்.  கர்நாடக சங்கீதப் பாடகர் ஒருவர் முதன்முறையாக மேற்கத்திய இசை வகைமைகளை முயன்று பார்த்ததன் அடிப்படையிலும் கவனம் ஈர்ப்பதாக இருக்கிறது இந்த ஆல்பம்.  படத்தை நண்பர் ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இயக்குநரின் பெயருக்குள்ளிருந்து  வள்ளலார் புன்னகைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

1

மனுநீதிச் சோழனின் வாழ்வைச் சொல்லும் உரைநடை நூல் ஒன்றை  “ மனுமுறை கண்ட வாசகம்” என்கிற தலைப்பில் வள்ளலார் இயற்றியுள்ளார். அதில் இடம் பெற்ற பகுதி ஒன்று பாட்டாக மாறி பெரும் புகழ் அடைந்தது. “ நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ?  நட்டாற்றில் கையை விட்டு விட்டேனோ? என்று துவங்கும் பாடல் அது.  கடவுள் என்னை நட்டாற்றில் விட்ட ஒரு நாளில் நான் சொல்லெடுத்து மாரடிக்கத் துவங்கினேன். ஒப்பாரி ஓய்ந்து முடிகையில் அந்தக் கவிதையில் இன்னொரு கவிஞரின் முகம் தெரிந்தது. பொதுவாக இது போல் இன்னொரு கவியின் சாயல் விழுந்தால் அந்தக் கவிதையைக்  கிழித்தெறிந்து விடுவேன். ஆனால் அன்று அத்தனை கசப்பையும் மீறி வள்ளலாரின் சத்தத்தைத் தொட்டு விட்டேன் என்கிற பூரிப்பே மேலெழுந்தது. 

இப்பிறப்பு

எவன் குவளை நீரைத் தட்டிவிட்டேன்
எவன் குடிசைக்கு தீ வைத்தேன்
எந்த தெய்வத்தை நிந்தித்தேன்
எந்த பத்தினியின் விரதத்தைக் கலைத்தேன்
எந்த சொல்லால் எவன் நெஞ்சைச் சிதைத்தேன்
எந்த சிறுமியை வல்லாங்கு செய்தேன்
எந்த குருடனுக்குப்  புதைகுழிக்கு வழி சொன்னேன்
எந்த சூலியின் நிறைவயிற்றைக் கிழித்தேன்
எந்த தூளிக்குள் அனலள்ளிப் போட்டேன்
எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன்
எவன் தொடைச்சதைக்கு  நன்றி மறந்தேன்
எப்பிறப்பில் எவன் குடியறுத்ததற்கு இப்பிறப்பு

“ சும்மா இருக்கும் சுகம்” என்பது வள்ளலாரின் மிக ஆழமான ஒரு வரி. சும்மா இருப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதால் உருவான ஆழம் அது.  சமீபத்திய ஆண்டுகளில்  நான் எழுதிய கவிதைகள் சிலவற்றில் இந்த வரியின் சுகந்தம் உண்டு.  

“ யாரினும் கடையேன்” என்பது நான் புனைந்து கொள்ள ஆசை கொண்ட ஒரு பெயர்.  அந்தப் பெயரில் “ புன்னகை”  இதழுக்கு ஒரு கவிதை கூட  அனுப்பியதாக நினைவு.  குழு நடனத்தில் கட்டக் கடைசியாக ஆடும் ஒருவனைப் பற்றிய கவிதையது. கவிஞரின் பெயரேதான் அந்தக் கவிதைக்கு தலைப்பும். ஆனால் என் முழுத்தொகுப்பில் ஏனோ அந்தக் கவிதையைக்  காணவில்லை. ஒருவேளை கத்தரிக்குப் போயிருக்கலாம். தன்னைத்  தாழ்த்திக் கொள்கையில் அல்லது அப்படி பாவனை செய்கையில் மனிதனுக்கு ஏதோ ஒன்று நிறைகிறது. உடனடியாக ஒரு  பாவமன்னிப்பு கிடைத்து விடுகிறது. அகந்தையை அழித்து விட்டது போன்ற ஒரு மிதப்பு அவனுக்கு அவசியமாகிறது. 

யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
என் பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
பாவியேன் பிழை பொறுத்திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
உடம்பை வைத்துலாவவும் படுமோ
சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
தெய்வத்துக் கடாதவன் என்றே

(திருவருட்பா)

இந்த நிலத்தைக் காட்டிலும் பொறுமைமிக்க நீயே என் பிழைகளை பொறுக்காவிடில்  யாரினும் கடைய, யாரினும் சிறிய பாவி நான் ஊருக்குள் புகுவதுதான் எப்படி?  எனை எளிய மனிதர்கள் பொறுப்பதுதான் எப்படி?

மனிதன் காண அஞ்சும் அவனது பெருத்த சுயநலத்தின் முன் ஒரு பிசாசைப் போல் வள்ளலார் தோன்றி மறையும் காட்சி ஒன்று என் கவிதையில் உண்டு.

உன்னுடையதில்லை அல்லவா?

என்னுடையதா
என்னுடையதா?
நெஞ்சு கிடந்து அடித்துக் கொண்டது

அதே செவலை நிறம்
அதே வால் சுழி

எந்தச் சக்கரத்திற்கும்
அசைந்து தராமல்
சாலையோரம் கிடக்கிறது

தயங்கித் தயங்கி நெருங்கி
தலைகுனிந்து நோக்கினேன்

நீண்டதொரு பெருமூச்சில்
இயல்பிற்குத் திரும்பிய கணத்தில்
சட்டென
அங்கே தோன்றி மறைந்தார்

வெள்ளை முக்காடிட்ட ஒரு துறவி
வெள்ளை முக்காடிட்ட ஒரு பிசாசு

என்னைப் போன்றே இன்று எழுதிக் கொண்டிருக்கும் பலரின் கவிதைகளிலும் அவர்கள் அறிந்தும் அறியாமலும் வள்ளலார் தொடர்ந்து வரக் கூடும் என்றே நம்புகிறேன். இந்தப் படத்தில் சலபதி சொல்வது போல் அவர் மக்கள் கவியாகவும் இருக்கிறார். அவரது சில கவிதைகள்  பொது நினைவில்  கலந்துவிட்டவை.”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்கிற வரி கொலைகாரனுக்கு கூட மனப்பாடம்.

நாம்  இன்பமென்றும் சுகமென்றும் எண்ணி மாய்பவைகளைக் கண்டு  வருந்தி அழுகிறார் வள்ளலார். நம் அறியாமை கண்டு அஞ்சி அஞ்சி  நடுங்குகிறார். அவர் எதற்கெல்லாம் நடுங்குகிறார் என்பதை வாசிக்கையில் அவர் மீது ஒரு பித்தனின் சாயல் விழுந்துவிடுகிறது.  உலக  உயிர்கள் மீதான அவரது பேரன்பு அவரை எப்போதும் தீராத பதட்டத்திலேயே வைத்துள்ளது. அழகிய பெண்களை கண்டால் அறைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறார். சினம் கொண்டு  சீறும் மனிதரை, சத்தமாக பேசுகிற மனிதரை அஞ்சுகிறார். வேகமாக நடந்து செல்லும் மனிதர்களுக்கும், அப்படி நடக்கையில் காற்றில் அலையும் அவர் ஆடைகளுக்கும் அஞ்சியுள்ளார். மென்மையான பட்டின் உள்ளிருக்கும் பகட்டிற்கு அழுகிறார். குதிரை வண்டியைப் பார்த்தால்  கூட  ஐயோ ‘சொகுசு’ வருகிறதென்று  அஞ்சி ஓடுகிறார்.   அன்பளிப்பைப்  பெற அஞ்சுகிறார். பெற்ற அதைத் தூர எறிகிறார். எறிந்துவிட்ட அதை  அன்பின் நிமித்தம் திரும்பவும் தேடியலைகிறார்.

என்புடைவந்தார் தம்முகம் நோக்கி
என்கொலோ என்கொலோ இவர்தாம்
துன்புடையவரோ இன்புடையவரோ 
சொல்லுவ தென்னையோ என்றே
வன்புடை மனது கலங்கி அங்கவரை
வா எனல் மறந்தனன் எந்தாய்
அன்புடையவரைக் கண்ட போதெல்லாம்
என்கொலோ என்று அயர்ந்தேனே.

( திருவருட்பா)

அன்பு கொண்டு என்னைக் காண வரும் ஒருவரைக் கண்டவுடன்  ஐயோ...!  இந்த உயிர் இன்பமுடையதோ? அல்லது துன்பமுடையதோ? இப்போது  என்ன சொல்லப் போகிறதோ? என்கிற கலக்கதில் அவர்களை “வா “ என்று அழைக்கக் கூட மறந்து விடுகிறேன்.

தமிழ் பக்திக் கவிதைகள் காதல் ரஸமும் கலந்தவைதான். வள்ளலாரிலும் அது தொடர்கிறது. இறைவனை நாயகனாகவும்,  தன்னை நாயாகியாகவும் பாவித்து இவரும் பல கவிதைகள் புனைந்துள்ளார்.” ஆசை வெட்கமறியாதது” என்கிற பழமொழியை ஆமோதிக்கிற வரிகள் இதில் உண்டு. தோழி தலைவியின் பித்துரைத்த வரிகள் இவை..

என்னுயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்தாம்  இருக்க
    இடம்புனைக என்கின்றாள்  இச்சை மயமாகித்
தன்னுயிர் தன்உடல் மறந்தாள்  இருந்தறியாள் படுத்தும்
    தரித்தறியாள்  எழுந்தெழுந்து  தனித்தொருசார் திரிவாள்
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள்  உலகில்
    அணங்கனையார்  அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள்
மின்னிவளை  விழைவதுண்டேல்  வாய்மலர வேண்டும்
    மெய்ப்பொதுவில்  நடம்புரியும்  மிகப்பெரிய துரையே.

 என் நாயகன் எப்படியும் வந்து விடுவார். அவர் வந்தால் இருக்க என்று இப்போதே  ஒரு தனியிடத்தை  தயார் செய்யுங்கள் என்று ஆணையிடுகிறாள்.  தன்  உடல் மறந்து, உயிர் மறந்து பரிதவிக்கிறாள். அவளால்  சற்று நேரம் கூட ஓரிடத்தில் அமர முடியவில்லை. படுத்தாலும்  உறக்கம் கொள்ளவில்லை .இரவுகளில்  தனித்தலைந்து வருந்துகிறாள். அவள் உடல் பசியை அறிவதில்லை. உணவுண்ண அழைத்தாலுல் அவள் காதில் அது விழுவதில்லை.

தலைவனான இறைவனை இரட்டைத் தாழ்பாள் போட்டு பூட்டி வைக்கிறாள் ஒருத்தி.

சின்ன வயதில் என்னைச்  சேர்ந்தார் புன்னகையோடு
சென்றார் தயவால்  இன்று வந்தார்  இவர்க்கார் ஈடு
என்னை விட்டினி  இவர் எப்படிப் போவார் ஓடு
இந்தக் கதவை மூடு  இரட்டைத்  தாட்கோலைப் போடு.

பேராசைப் பேய் பிடித்து வருத்துகிறது ஒருத்தியை....

ஊராசை  உடலாசை  உயிர்பொருளின் ஆசை
உற்றவர் பெற்றவராசை  ஒன்றுமிலாள்  உமது
பேராசைப் பேய்பிடித்தாள்  கள்ளுண்டு பிதற்றும்
பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர் கேட் டிடிலோ
நாராசஞ் செவிபுகுந்தால் என்ன நலிகின்றாள்
நாடறிந்ததிது எல்லாம் நங்கை இவள் அளவில்
நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.

அழகியரைக் கண்டால் ஓடிபோய் அறைக்குள் பூட்டிக் கொள்ளும் கவிஞரின் கவிதை ஒன்று வினோதமானது. பாடலின் இரண்டாவது வரியை வாசித்ததும் வாசிப்பது அருட்பா தானா  என்று அட்டையைத் திருப்பிப் பார்க்க வைப்பது.
“ஸ்வாமீ…….தாங்களா..?” என்று புன்னகைத்தபடியே வினவ வைப்பது. ஸ்வாமியும்  நம்மை போன்றே சாமானியனாகத்  தெரிவதால்  இப்பாடலில் ஒரு வித சினேக பாவம் உருவாகி விடுகிறது 

வெய்யலிலெ நடந்திளைப்பு மேவிய அக்கணத்தே
மிகு நிழலும் தண்ணமுதும்  தந்த  அருள் விளைவே
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே 
வலிந்து வரச் செய்வித்த மாண்புடைய  நட்பே
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து
கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
ஐயமுறேல் என்றெனை ஆண்டு அமுதளித்த பதியே
அம்பலத்தென் அரசே என் அலங்கல் அணிந்தருளே!

கவிஞர் இறைவனைத்தான் போற்றுகிறார்.அவர் கோர்த்தளிக்கும் பா மாலையை அணிந்து கொள்ளச் சொல்லி மன்றாடுகிறர். ஒருவன் ஒரு  மடந்தை மேல் கொஞ்சமே மையல் கொண்டாலும்,   அவள் தானே வந்து அவன்  மடி சேருமாறு செய்வானே ஒரு  மாண்புடைய நண்பன், அவனைப்  போன்ற இறைவனே! என்று துதிக்கிறார்,

நெருப்பென்று சொன்னால் வாயா வெந்துவிடப் போகிறது? உவமைக்குச் சொன்னால் உலகா  அழிந்துவிடப் போகிறது?  பரவாயில்லை , வள்ளலார் காலத்தில் அப்படி ஒரு இனம் வாழ்ந்து வந்திருக்கிறது. நமது நண்பர்களைக் குறித்தோ சொல்லத் தேவையில்லை. 

தமிழ் மாணவர் எல்லோரையும் போல எனக்கும் வள்ளலார் அறிமுகம் ஆனது “ கோடையிலே இளைப்பாற்றி” என்கிற பாட்டில்தான். பள்ளியில் அந்தப் பாடலை படித்த போதே  என்னவென்றறியாத  ஒருவித பரவசம் நிகழ்ந்தது. பின்னாட்களில் பலமுறை வாசிக்கும் போதும் அதன் பரவசம் குறைந்த பாடில்லை.  வெறுமனே ஒரு பக்திப்பாடல் என்றில்லாமல் நம் வாழ்வின் எல்லாக் கோடைகளுக்குமான கனிந்த நிழலாக கூடவே வரும் பாடல் அது.  டாஸ்மாக் பார் ஒன்றில்  கன்னங்களில் நீர் வழிய இப்பாடலின் முதல் வரியை அரற்றிக் கொண்டிருந்த ஒரு முதியவரை நான் பார்த்திருக்கிறேன்.

கோடையிலே  இளைப்பாற்றிக்  கொள்ளும்வகை கிடைத்த
     குளிர்தருவே  தருநிழலே  நிழல்கனிந்த கனியே
ஓடையிலே  ஊறுகின்ற  தீஞ்சுவைத் தண்ணீரே
      உகந்த தண்ணீர் இடைமலர்ந்த  சுகந்த மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
      மென்காற்றில் விளைசுகமே  சுகத்தில் உறும்பயனே
ஆடையிலே  எனை மணந்த  மணவாளா  பொதுவில்
     ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே.

மனிதன் என்னென்னவோ தொழில் செய்கிறான்.  அவன்  பிறந்தது முதல் மடிவது வரை அனுதினமும் செய்கிற தொழில் ஒன்றுண்டு.  அவனால் செய்யாமல் இருக்க முடியவே முடியாத ஒரு தொழில். அது ஏங்குவது…

தூங்குகின்றதே  சுகம் என அறிந்தேன்
சோறதே  பெறும் பேறதென்று  உணர்ந்தேன்
ஏங்குகின்றதே  தொழிலெனப் பிடித்தேன்
இரக்கின்றோர்களே  என்னினும் அவர்பால்
வாங்குகின்றதே  பொருள் என வலித்தேன்
வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்குகின்றதற்கு என் செயக் கடவேன்
உடையவா எனை உவந்து கொண் டருளே.

தூக்கத்தையே சுகம் எனக் கொண்டேன்.  சோறே பெரும் பேறேன நினைந்தேன். ஏங்கி ஏங்கி அழிவதையே தொழிலாகப் பிடித்தேன். இரப்போரிடத்தும் இரந்து நின்று பொருள் பெற்றேன். 

வஞ்ச நெஞ்சம்  என்பது கரையாத கல் போன்றதல்லவா? திட்டங்களில் தேர்ந்தது அல்லவா?  ஆனால் அவ்வளவு திடமும் ஒரு பாவனைதான். அது உள்ளே நடுங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே அதைப்  பஞ்சாக்கி பறக்க வைத்து விடுகிறார் வள்ளலார். ..  ” வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்…” 

“ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன்” என்கிறது அவரது இன்னொரு வரி 

இவ்வளவுக்கும் மத்தியில் நான் வந்து ஏன் பிறந்தேன் ? என்று கண்ணீர் வடிக்கும்  சாமானியர்கள் உண்டு. மெய்ஞானத் தேடலிலும் இதே கேள்வி உண்டு.

விளக்கறியா  இருட்டறையில்   கவிழ்ந்து கிடந்தழுது
விம்முகின்ற  குழவியினும்  மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியா துயர்க்கடலில்  விழுந்து நெடுங்காலம்
அலைந்தலைந்து மெலிந்த  துரும்பதனிம்  மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமை எலாம்  கிளைத்த பழுமரத்தேன்
கெடுமதியேன்  கடுமையினேன் கிறிபேசும் வெறியேன் 
களக்கறியாப்  புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ
கருணை நடத்தரசே  நின் கருத்தை அறியேனே.

வள்ளலார் கவிதையில் ‘ சந்தைக் கடை நாய்’ ஒன்று வருகிறது.  உலகியல் இச்சைகளின் முன் சலவாய் ஒழுக்கிய படி அங்கும் இங்கும் ஓடித்திரியும் ஒரு நாய். அவர் கவிதையில் மனித மனத்தின் எளிய குறியீடு போல் வந்த அந்த நாய் நமது காலத்தில் கொழு கொழுவென்று வளர்ந்து விட்டது.  நமது சந்தை மிகப் பெரியது மட்டுமல்ல; மிக நுண்ணியதும் கூட.    “ big billions days sale”  ,”  great Indian festival”  என்பதாக சந்தை இப்போது நாயின் பாக்கெட்டுள் வந்துவிட்டது.  மனசு சரியில்லை என்றால்  புதுச்சட்டை வாங்கும் அலுவலக நண்பர் ஒருவர் எனக்குண்டு. அந்தப் புதுச்சட்டைகளை வைக்க அவர் புதிதாக  பீரோ வாங்கினார். அந்த பீரோக்களை வைக்க விரைவில் அவர் ஒரு வீடு வாங்குவார் என்று நினைக்கிறேன்.  குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கையில் கையிற்குச்  சிக்கும் எதையாவது கொண்டு அதை அடைக்கப் பார்ப்பது போல  ஆகிவிட்டது நமதிந்தக் காலம்.


2



“அன்பெனும் பெருவெளி” யில் வள்ளலாரின் கவிதைகளிலிருந்து சில வரிகளை தேர்ந்தெடுத்து அதை ஆறுபாடல்களாக ஆக்கியுள்ளார்கள்.  பாடல்கள் உருவான விதமும் படமாக்கப்படுள்ளன. நமது சூழலில் பாடல்கள் நிறையக் கொட்டிக் கிடக்கின்றன. அவை உருவான விதம் குறித்த பேச்சுக்களும் அதிகம். ஆனால் அவை நிகழ நிகழக் காட்டும் நேரடிக் காட்சிகள் குறைவு. கேட்பதோடல்லாமல் இசையைப் பார்ப்பததென்பது மேலான இன்பத்திற்கு நம்மை  இழுத்துச் செல்வதாகும்.  

 எனக்கு ஒரு முறை நிறைவேற வாய்ப்பேயில்லாத , வினோதக் கனவு போல ஒரு எண்ணம் தோன்றியது.  திருவிளையாடல், கந்தன் கருணை  போன்ற படங்களின் பாடல் உருவாக்கத்தைப்  பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?   கே.வி. மகாதேவன்,  டி.எம்.எஸ்,  கே.பி. சுந்தரம்பாள்,  கண்ணதாசன், பாலமுரளி கிருஷ்ணா,  T.R. மகாலிங்கம் ….. எவ்வளவு மகத்தான நாளாக அது இருந்திருக்கும்!  ” சக்தி வடிவேலொடும்,  தத்து மயிலேறிடும் சண்முகனை”  நேரில் கண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்!  “ உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின்  தமிழுக்கு உரிமையுண்டு” என்று கே.பி.எஸ் முழங்குவதை எதிர் நின்று கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்!!

பாடல்களுக்கு  உண்மையில் கவிதை பிரதானமாக இருப்பதில்லை. வாய்த்தால் நல்லது வாய்க்கவிட்டாலும் பாதகமில்லை என்பது போன்றதான நிலைதான் இங்குள்ளது. கோடிட்ட இடங்களை   நிரப்புவது போல  டியூனை கச்சிதமாக நிரப்பும் சொற்கள் போதும் நமது இசையமைப்பாளர்களுக்கு.  பாரதி, வள்ளலார் போன்ற கவிகளின் சொற்கள் பாடல்கள் ஆகும் போது , அங்கு  இசையும் சொல்லும் ஆரத்தழுவும்  ஒரு கூட்டுக்களி  நிகழ்ந்து விடுகிறது.

சஞ்சய், ஷான் ரோல்டன் இருவரும் எனக்குப் பிடித்த இசைக்கலைஞர்கள். இருவரையும் நான் தனித்தனியே தான் கண்டடைந்தேன். ஷானுக்கும் சஞ்சய்க்கும் இருக்கிற பந்தத்தை அறிகையில் அது ஒரு இனிய ஆச்சர்யமாகத்தான் எனக்கு இருந்தது.  சஞ்சய்  நேரடியாகவே என் கவிதைகளுக்குள்  இடம் பெற்றுள்ளார். .அவர் முகமாக வாராமல் உணர்வாக அளித்த கவிதைகளும் என்னிடத்தில்  உண்டு.  ‘ஜோக்கர்’  படத்தில் இடம்பெற்ற “ செல்லம்மா எஞ் செல்லம்மா” பாடலிலிருந்து ஷானை நான் பின் தொடர்கிறேன். அவர்  இசையில் மட்டுமல்ல  குரலிலும் எனக்கு மயக்கமுண்டு.  அவர் என் வாட்ஸ் அப்,  பேஸ் புக் DP க்களை சில முறை அலங்கரித்திருக்கிறார். ஆகவே என்னளவில் இந்த ஆல்பம்,  காதலர் இருவர் கருத்தொருமித்து ஆக்கிய ஆக்கம்.

இசையால் ஒரு சாதாரண வரியைக் கூட சிறப்பான வரி போல் ஆக்கிவிட முடிகிறது. “ தருமமிகு சென்னையில் கந்த கொட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே! ” என்கிற வரியில் உள்ளது ஒரு எளிய விளிப்புதான். ஆனால் அது பாட்டில் ஏறுகையில்  ஒரு மேலான வரி போன்ற மயக்கம் தோன்றிவிடுகிறது. இந்த ஆல்பத்தில்  விட சபாக்களில் இன்னும் ஆக்ரோஷமாக  இந்த வரிகளைப் பாடுவார் சஞ்சய். ” சென்னைனா… இந்த ஆழ்வார்பேட்ட, தேனாம்பேட்டயெல்லாம்  இருக்குமே அந்த  சென்னைதான  இது? என்று  கேட்கத் தோன்றும் நமக்கு. 

ஒரு கிடார் துண்டை “ பூன வழுக்கி விழுந்த மாதிரி இருக்கு” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் ஷான். அருட்பெருஞ் ஜோதி பாடலின்  கிடார் கோர்வைகளை கேட்கையில்  எனக்கு இன்னொரு உவமை தோன்றிற்று. “ அரவ மிஷினுக்குள்ள அஞ்சாறு கிதாரத்  தூக்கி போட்ட மாதிரி....”  அவ்வளவு வேகம்! அவ்வளவு முயக்கம்! வித்துவத்தில் தேர்ந்த அரவை மிஷின் அது. 

டிரம்மர்கள் ஆவேச மிகுதியால்  ஸ்டிக்கை அந்தரத்தில் எறிந்து பிடிக்கும் காட்சி அடிக்கடி நாம் பார்க்கக் கிடைப்பது.. ஆனால் இந்தப் படத்தில் டிரம்மர் ஸ்டிக் வைத்திருக்கும் கையை மெதுவாக,  மிக மெதுவாக சுழற்றும் காட்சி ஒன்று உண்டு. என்னளவில் பறக்கும் குச்சிக்கு நிகரான காட்சியது.  அப்போது அவர் எதையும் வாசிக்கவில்லை.  இல்லை அப்படி சொல்ல முடியவில்லை. நம் காதில் அது விழவில்லை என்று சொல்லலாம். அப்படியும் சொல்ல விட முடியாது. அதுவும் சேர்ந்துதான் தாளம் உருவாகிறது.  அந்தரத்தில் பறக்கும் குச்சியும் சேர்ந்ததுதான் டிரம்ஸின் தாளம். 


“இது நல்ல தருணம்” பாடலின் இறுதியில் இசை கொட்டி முழங்குகிறது.  கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, ஏறி உச்சத்தில் சென்று சட்டென நின்றுவிடுகிறது பாடல். அப்படி சட்டென நிற்கையில் தூக்கிய கைகளை தூக்கிய கதியிலேயே வைத்திருக்கும் டிரம்மரின் காட்சியோடு அந்தப் பாடல் முடிகிறது. வாத்தியத்திலிருந்து தூர நிற்கும் அவரது கைகளும் ஒன்றை வாசிக்கவே செய்கின்றன. சமீப நாட்களில் தாளக்கிறுக்கு முற்றியிருக்கும் எனக்கு அது தெளிவாகக் கேட்கிறது. அந்தக் காட்சி எனக்கொரு கவிதையையும் அளித்தது.

அங்கு

கொட்டு கொட்டென்று
கொட்டித் தீர்த்த இசை

சட்டென
நின்று விட்டது

நிசப்தமும் 
முழக்கத்திற்குப் பிறகான  நிசப்தமும்
ஒன்றல்ல

வாத்தியக்காரன்
வாத்தியத்திலிருந்து
கையைத் தூக்கிவிட்ட பிறகு
உருவாகும் தாளமே!

நீ
அங்கென்னைக் கூட்டிச் செல்!

சஞ்சய் இந்த ஆல்பத்தை தன்னுடைய “  life changing moment” என்கிறார். ஒரு துறையில் விற்பனராக இருக்கும் ஒருவர் இன்னொரு துறையில் புதிதாக நுழையும் போது ஒரு வகையில் அவர் மீண்டும் மாணவர் ஆகிறார்.  மாணவர் ஆவதை கீழிறங்குவது என்று நம்புவதே நமது பொதுப் புத்தியாக உள்ளது. கர்நாடக இசை மரபில் வழங்கப்படும் உயரிய விருதான “ சங்கீத கலாநிதி” விருதைப் பெற்றவர் சஞ்சய்.  ஏழுந்து நின்றால் உத்தரத்தை  உரசும் அளவு உயரமான விருது அது.  அந்தக் கிரீடத்தைக் கழற்றி வைப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் சஞ்சய் அதை கழற்றி வைத்ததன் மூலம் உருவான காற்றோட்டம்,  அவர் நெஞ்சை நிறைத்திருப்பதை இந்தப் பாடல்களில் உணர  முடிகிறது.

“ததும்பி நிறைகின்ற அமுதே...! ”  என்று என்று சஞ்சய் பாடுகையில்,  நிஜமாகவே அங்கொன்று ததும்பி நிறைந்து விடுகிறது. 

***

"அன்பெனும் பெருவெளி" ஆவணப்படத்தை காண்பதற்கான இணைப்பு...




Comments

Anonymous said…
ஐயா அருமை.

முதல் கவிதை தொகுப்பில் வெட்டப்பட்டதாக தாங்கள் சொல்லிய கவிதையை எங்களுக்கு தாங்கள் வாய்ப்பு இருந்தால் பகிரவும்

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...