Skip to main content

அப்போது அந்தமுகத்தில் ஒரு சிரிப்பிருந்தது.விழிக்கடையில் கொஞ்சம் நீர் சேர்ந்திருந்தது

ராமகிருஷ்ணன் தான் பிறப்பதற்கு முன்பே
அவர் தாயை
ஆயிரம் முறைக்கும் அதிகமாக
அரசமரத்தை சுற்ற வைத்தார்.
அம்மன் சன்னிதிகளில் அவள் உருண்டு உருண்டு மண்ணானாள்.
நாளெல்லாம் விரதமிருந்தாள்.
இப்படி வாராது வந்த மாணிக்கத்திற்கு
பேச்சு வரவில்லை சரியாக.
அவள் மீண்டும் அலகு குத்தி
காவடி சுமந்து
தீக்குண்டம் இறங்கியேற
அவர் தன் எட்டாம் வயதில் திருவாய்மலர்ந்தார்.
அவர் விண்ணப்பித்த எல்லா பணியிடங்களும்
அதற்கு முந்தைய நாளில் நிரப்பப்பட்டிருந்தன.
"பத்துநாட்களுக்கு முன்னால் சொல்லியிருக்ககூடாதா" என்று
அவர் காதலி அழுது வடிந்தாள்.
அவர் அத்தனை நாளும்
அவளைப் பற்றிய ஒரு காவிய முயற்சியில் மூழ்கியிருந்தார்.
33 மூன்றாம் வயதில் திருமணம் முடிந்த அவருக்கு
5 வருடங்கள் கழித்து
அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இப்போது நரை முற்றி உடல் உளுத்து
துள்ளிதுள்ளி இருமும் அவருக்கு
ஒரு சாவுவந்து தொலையமாட்டேன் என்கிறது.
இந்த நகரத்தின் எல்லா மருத்துவமனைகளிலும்
அவர் உடல் பரிசோதுக்கப்பட்டு குறிப்பெழுதப்பட்டு விட்டது.
இந்த புதிய மருத்துவமனியின் புதிய மருத்துவர்
புதியதொருகுறிப்பிற்காய் பெயரை வினவிய போது
அவர் சொன்னார்
"லேட் ராமகிருஷ்ணன்"

Comments

முகத்தில் சிரிப்பும், விழிக்கோடியில் நீரும்தான் வருகிறது. ரசித்தேன்.
க ரா said…
என்னன்னு சொல்ல இந்த கவிதைய பத்தி. சொல்லாமல் சொல்லும் சோகமாக படுகிறதுதெனக்கு...
:)
இந்த கருப்பு நகைச்சுவை என்ற சுவை இருக்கிறதே :)
இதுக்கு தான் ராமகிருஷ்ணன் பிறக்காமயே இருக்க முயற்சி பண்ணியிருக்கார், அவர் அம்மா சும்மா விட்டாங்களா :)
அல்லது இந்தக்கவிதை இப்படி எழுதப்பட்டு ராமகிருஷ்ணன் இப்படி அல்லலுற வேண்டும் என்பது உங்களையும் மீறிய முன்னமே எழுதப்பட்ட விதியா :)
வாழ்வில் விளையாடும் மதியால் வெல்ல முடியாத விதியை என்னவென்று சொல்வது :(
எல்லாம் எல்லாம் யோசிக்கும் வேளையில்,,,,,,,,,
எல்லாம் எல்லாம் முடிந்து விடுகிறது

நல்ல கவிதை நண்பா

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...