Skip to main content

நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காடு





இன்று அதிகாலை பீக்காட்டுக்கு போனபோது
ஒரு டாங்கியைப் பார்த்தேன்.
ஆமாம் அதன் பெயர் டாங்கி தான்
பீரங்கி அல்ல.
பச்சை இலையும் காயந்த சருகும்
சேர்ந்திருக்கும் உடுப்பில்
அதில் இருவர் அமர்ந்திருந்தனர்.
இலங்கையில் போர் நடப்பது எனக்கு தெரியும்.
டி.வி யில் காட்டுகிறார்கள்.
இந்தக் காட்டை மறைத்து நிற்கும் கொட்டாயில்
நான் நிறைய சண்டைகளைப் பார்த்திருக்கிறேன்.
கடைசி சீனில் "டுமீல்" "டுமீல்" என்று
துப்பாக்கிகள் வெடித்திருக்கின்றன.
எதையோ வாயில் கடித்துத் துப்பிவிட்டு
குண்டுகளை வீசுவார்கள்.
நிலம் பிளந்து மண் எழும்பும்.
ஒரு மனிதன் அந்தரத்தில் வெடித்து சிதறுகையில்
நாங்கள் சீக்கி அடித்திருக்கிறோம்.
அந்த கொட்டாய்க்கு பின்னால் தான்
இன்று நீட்டிய குழலோடு ஒரு டாங்கி நிற்கிறது.
எனக்கு தெரியும்
சினிமாவில் எல்லாமே டூப்பு தான்.
ஆனால், நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காட்டுக்குளிருந்து
ஒரு டாங்கி உருண்டு வருவதென்றால்
இது கனவு தானே நண்பர்களே....
கனவு தானே..
கனவு தான்.
ஒரு வேட்டு போட்டால் ஓடி விடாதா இந்த வன விலங்கு.
ஆனால் இது கனவு தானே?
கனவு தானே..
நண்பர்களே இது கனவு தானே..
கனவு தான்.
ஆறுமுகம் எதிரே வருகிறானே..?
பேடிப்பயலே.. அவன் கனவில் வருகிறான்..
ஆமாம்..இது கனவு தான்.. கனவு தான்..
கணவன் தூர்கனவில் உழல்கையில்
மல்லாந்து கிடக்கிற பதிவிரதை....!
என்னை எழுப்படி நாயே...
கனவு ... இது கனவு.. கனவு தான்
அம்மா தாளிக்கும் மணம் வருகிறது.
பாதகமில்லை... கனவு தான்
இது கனவுதானே அம்மா...
அம்மா! இது கனவு தானே..
அடுப்படியில் என்ன புடுங்குகிறாய்
சீக்கிரம் வந்திந்த அறைக்கதவை உடை..
லேசாக பீ வாடை வருகிறதா..?
இல்லையில்லை.
இது கனவு தான்..
அய்யோ..
இது கனவு தான்

Comments

கவிதையில் புதுமையை முயன்றிருக்கிறீர்கள்.அதில் வெற்றி யும் பெற்றுள்ளீர்கள். ஆனால் உங்கள் கவிதைக்கு எப்போதும் இசை அமைக்கும் இளையராஜாவை விடுத்து வித்யாசாகரை அணுகியிருப்பது என் போன்ற ராஜா ரசிகனுக்கு கவிதையுடன் பொருத்தப்பாடு கொள்வதில் சற்று சோம்பேறித் தனத்தை நல்குவதாக உள்ளது.

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...