Skip to main content

மன்னவன் வந்தானடி தோழி !





சென்ற மாத்தின் ஒரு நள்ளிரவில்
நாச்சிமுத்து கொலைகாரனானார்.
நம்மை போல் தான் அவரும்.
கொலைசெய்வது பற்றியெல்லாம் நினைத்து கூட பார்த்தவரில்லை.
ஆனால் நம்மைபோலில்லை நாச்சிமுத்து
அவர் ஒரு கொலை செய்தார்.
“ நடிப்பிசை கதைக்கடலான” அவரைக் கொண்டு போய்
சிறையின் கும்மிருட்டுள் வீசினார்கள்.
அங்கு பத்மினியின்றி அவர் தனிமையில் வாடினார்.
திருட்டுத்தனமாக பாட்டு கேட்ட குற்றத்திற்காக
இரண்டு முறை பிடரியில் உதை வாங்கினார்.
மெய்மறந்து பாடிய சத்தத்தில் முன்பல் போனது.
அனேக இரவுகளில் அவர் அழுதுகொண்டிருந்தார்.
இன்று அதிகாலை கடன் கழிக்க கழிவறை சென்ற நாச்சிமுத்துவுக்கு
வெளியே வருகையில் ஒரு அம்சமான மீசை இருந்தது.
மார்பெங்கும் இரத்தினங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
தலையில் ராஜகீரிடம்...
அப்போது யாரோ இருவர் கொம்பூதி முழக்கினர்.
பொற்சரிகை பூண்ட அரையாடை துவள
அவர் நடந்து வருகையில்
பிண்ணனியில் ஒலித்தன ஜதியும் பாட்டும்.
தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த மன்னவன்
வரும் வழியெங்கும் கைகூப்பி எழுந்து நின்ற மரங்களை
கை அமர்த்தி அமரச் சொன்னார்.
அவை அமர்ந்து கொண்டன.

Comments

இசை. வழக்கம்போலவே அசத்திட்ட.
jalli said…
இந்தகவிதை என்னை மிகவும் பாதித்தது மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டும் புதிய யுக்தி. வியப்பை தருகிறது. குறிஈடு , படிமம் , பின் நவீனுத்துவம் , மேஜி கல் ரியலிசம் , எல்லாம் தாண்டிய வடிவம் நாச்சிமுத்து .( வால்பாறையில் ஒருதடவை '' கவிதை கூட்டத்தில் உங்களை சந்தித்து உள்ளேன் ).

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.