Skip to main content

சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்...


“ கடவுள் அவன் கையகத்தே கொஞ்சம் சொற்களைத் திணித்து, தீரவே தீராத ஒரு நுரையீரல் அடைப்போடு உன்னை படைக்கிறேன்..இவை அவ்வப்போது உன் மூச்சுத்தவிப்பை சொஸ்தப்படுத்தும் என்று சொன்னார்  ..”


            சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்...

  ( கணேசகுமாரனின் “ பெருந்திணைக்காரன் “ தொகுப்பை முன் வைத்து.. )

                                                                                 - இசை-



         சிறுகதை எனும் கலாவடிவத்தை கண்டங்களைத் தாண்டி நகர்த்திடும் முனைப்பேதும் இக்கதைக்களுக்கு இல்லை. அதற்கான நிதானமும், அவகாசமும் இக்கதைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.நின்று நிதானிக்க முடியாத ஒரு கொடுந்துயரின் தவிப்பே இக்கதைகளை எழுதிச்செல்கிறது.எனவே சில சமயங்களில் இவை வாய்விட்டு கத்தி விட நேர்ந்திருக்கிறது. வாழ்வின் கடைக்கோடியில்  ஒண்டிக்கிடக்கும் மனிதர்களையே நாம் இக்கதைகளில் திரும்ப திரும்ப பார்க்கிறோம்.
அனேக கதைகளில் இரத்தம் சிந்திக் கிடக்கிறது. சிலதில் இரத்தத்தைப் போன்றதான சுக்கிலம்.சிலதில் இரத்தமும்   சுக்கிலமும்    சேர்ந்து.  வதைமுகாம் ஒன்றிலிருந்து அம்மணமாக, உயிருக்குத் தப்பி ஓடும் ஒருவனின் சித்திரம் இக்கதைகளுக்கும் பொருந்திப் போகிறது.இதனாலேயே நாம் ஒவ்வொரு கதையை படித்து முடித்ததும் ஒரு மாட்டைப் போல மூச்சு விடுகிறோம்.
   
           கவித்துவம் கூடிய உணர்வெழுச்சியான சொல்லல் முறையும் , நுட்பமான விவரணைகளும் இக்கதைகளில் மனம் கவர்வதாக உள்ளன.

 “ பரப்பி வைக்கப்பட்ட எலும்புகள் மேலே இழுத்துப் போர்த்திய படி வறண்ட தோல்”
                                          
                                                                                            ( மழைச்சன்னதம்)

 வருடம் முழுவதும் உயரக்கரைகளில் திமிறியபடி வெய்யில் வழிந்தோடும்
 
                                                                                    ( பெருந்திணைக்காரன் )

ரயில் சக்கரங்களில் தலைமுடி சிக்கி தண்டவாளத்தோடு தேய்த்து ஒட்டிக்கொண்டு பறந்த படியிருக்க, அதன் அருகில் தான் மூளை கிடந்தது.சந்தன நிறத்தின் மேலே சிவப்புக் கோலம் வரைந்திருக்க, உள்ளங்கையளவு மூளையை அந்தக் காகம் கொத்தும் ஒவ்வொரு முறையும் பத்தடி தூரம் தள்ளிக் கிடந்த உடல் அதிர்ந்து கொண்டிருந்தது.

                                           ( மணிக்கூண்டு மகாராணி )

 போன்ற வரிகளை படித்து முடித்ததும் என் தலையை ஒரு முறை சிலுப்பிக் கொண்டேன்.

  “  HMV  என்கிற ஆங்கில எழுத்துக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிவப்பு நிற நாய் அந்த கருப்பு வண்ண இசைத்தட்டில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. “

  என்கிற வரி    நம்மை    நிமிடத்தில் எண்பதுகளுக்குள்  தூக்கி வீசி விடுகிறது.

      கணேஷ் ஒரு கவிஞனாகவும் இருப்பதின் அனுகூலத்தை தொகுப்பு முழுக்க காணமுடிகிறது.

       “ இரவு மேலும் இரவாகி வானிலிருந்து முதல் துளி வேகமாக நிலமிறங்கி அவன் சிரம் தொட்டது. அத்துளிக்கு பைத்தியம் பிடித்தது. அவன் உடல் தழுவியவாறு சரசரவென்று தரை தொட்ட துளியின் அலறல் அதனைத் தொடர்ந்து வந்த பெருமழையில் மூழ்கியது. பைத்தியத் துளிகளுடன் கலந்த மொத்த மழைக்கும் பைத்தியம் பிடித்தது.மழையின் மறுமுனையை இறுகப் பிடித்திருந்த ஆகாயமோ பதறியது.கண் சிமிட்டி துடித்தது.சட்டென ஓர் உதறலில் மழையைத் துண்டித்துக் கொண்டு பெருமூச்சு விட்டது.... .... பதறி ஓடி மோதிய மழை பைத்தியமாக்கியது கடலை. கொந்தளிக்கத் துவங்கியது சமுத்திரம். “

 என்று எழுதிப் போகும் வரிகளில் கவித்துவத்தின் பூரிப்பை காணமுடிகிறது.

    ”கண் மூடிக்கிடக்கும்
     கடைசி நொடியில்
     உன் மூளையை நெருங்கும்
      ரயிலின் அலறலை கடந்து விட்டால்
      நீ சாகலாம்.
     அவ்வளவு நெஞ்சுரம் இருந்தால்
     நீ வாழவே பழகிக் கொள்ளலாம்.

          ’தூக்கி வாரிப்போடும்’ கவிதை வகைமைக்குள் ஒரு ராஜகவிதையாக உலவும் தெம்பும், திமிறும் இவ்வரிகளுக்கு உண்டெனவே நான் நிச்சயம் நம்புகிறேன்.

     அனேக கதைகளில் நாம் கணேசயையே பார்க்கிறோம்.கதைக்குள் வருகிற பெண்களையும் ஒரு விதத்தில் நாம் கணேசாக வாசிக்கலாம்.கொம்பனில் மட்டும் ஒரு யானை வருகிறது. புல்லட் ரயிலில் அடிபட்டு சாகும் அந்த யானையும் கணேஷ் தான் என்று தயவு செய்து யாராவது சொல்லிவிடாதீர்கள்.

   மன்னர்களின் காலை நக்கி வாழ்ந்த மரபு நம் கவி மரபு. மகாகவிகளை சீட்டுகவியாக்கி அழகு பார்த்த வாழ்வு இது. சரஸ்வதி, சமயங்களில் நம் கபாலங்களைக் கோர்த்துக் கட்டி கூத்தாடும் கங்காளி. “ இப்பெல்லாம் யாரு சார் எழுத்தை மட்டும் நம்பி வாழற..” என்று நாம் வியாக்கானம் பேசி முடிக்கும் முன்னே
ஒரு பலியாடு தலை நீட்டிப் பார்க்கிறது.  நாம் நமது வாயையும், பொச்சையும் மூடிக் கொள்ள வேண்டி இருக்கிறது..  தீரவே தீராத நீள்வரிசை அது.   பலியாடுகளின் இரத்தத்தில் நாறி மிதக்கிறது சத்தியலோகம். இந்த நீச மரபிலிருந்து வருகிறது ‘கையறுமனம் “ கதை. தொட்டால் கை பொத்துப் போகும் சூட்டில் இருக்கிற இக்கதையின் மு்ன்னே தற்போதைக்கு என் எல்லா விமர்சனங்களும் செத்து விழுகின்றன. ஆனால் நண்பா கவனம்...  இவ்வனுபவத்தின்  எல்லா சூடும் தணிந்து, எல்லா தடயமும் மறைந்து, நீ ஒரு ஏ.சி பாரில் குளுகுளு பீரோடும், பில்டர் சிகரெட்டோடும், குஷன் சேரில் அக்கடா என்று சாய்கையில், நான் என் ஜட்டிக்குள் மறைத்து வைத்திருந்த “ கலையமைதி” என்ற சொல்லை எடுத்து உன் டேபிளில் வைப்பேன்...

        கூட்டு வல்லாங்குக்கு ஆளாகும் ஒரு சிறுமி, மற்றும் ஒரு பைத்தியதை பற்றிய கதையான “ ஏலி ஏலி லாமா சபத்கானி மற்றும் பிச்சைக்காரியாக மாறும் விபச்சாரியை பற்றிய கதையான “ மணிக்கூண்டு மகாராணி “ ஆகிய கதைகளும் உணர்வின் கொந்தளிப்பு கூடிய கதைகளே. ஆனால் அவை என்னை பெரிதாக அசைக்கவில்லை. அல்லது கணேஷ் பதறித் துடிக்கும் அளவுக்கு உலுக்கவில்லை.
 “ பெண்ணாய் பிறந்து விபச்சாரியாய் வாழ்ந்து பிச்சைக்காரியாகி இப்போதி பைத்தியப் பட்டமும் பெற்று விட்டாளே ? “ என்று கணேஷ் தலைதலையாய்
அடித்துக் கொள்கையில் நான் சிகரெட் புகையை வானத்திற்கு ஊதிவிட்ட படியே
 “ அப்புறம் ”    என்று      கேட்டேன். ஒரு வேளை கணேஷ் அளவுக்கு நான் அவ்வளவு நல்லவனில்லையா? அல்லது ஒரு தீவிர சிவாஜி ரசிகனைக் கூட அழவைக்க முடியாத படிக்கு இக்கதை அவ்வளவு வலுவற்றிருக்கிறதா? அல்லது வதைக்கூடத்தில் இருந்து இருந்து நான் சொரணையற்றுப் போய் விட்டேனா? என்றெனக்குத் தெரியவில்லை.

       “ பெருந்திணைக்காரன்” என்னென்னவோ சொல்லி என்னென்னவோ செய்யும்
 ஒரு மாயக்கதை. கையில் ஒட்டியும் ஒட்டாத ஒன்று. கழுவினால் போகாத ஒன்று.
    
     கையருமனம் கதையில் வரும் அரிசில் கிழார் பற்றிய கதை
 இயல்பாகவே கதையின் ஒரு பகுதியாக இருக்க, அதை ஒரு தனி தகவல் போல ஆக்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது.
   
      கொம்பன் என் அளவில் ஒரு மகத்தான கதை. பரணிக்கி இணையான போர்க்கள காட்சிகளோடு துவங்கும் இக்கதை, சட்டென யானைகளின் காட்டு வாழ்கைக்குள் நுழைந்து, அடுத்த கணமே வயல் வெளிகளுக்குள் புகுந்து, நகர சாலைகளின் வழியே ஒரு புல்லட் ரயிலின் முன்னே போய் அடிபட்டு சாகிறது. அசாத்தியமான உணர்வெழுச்சியும், மதிநுட்பமும் கூடி விளைந்த கதையிது.
   
     என் வீட்டு வாசலில் எரிந்து கொண்டிருக்கும் குண்டுபல்ப்  இரண்டு மாதத்திற்கு
ஒரு முறை ப்யூஸாகி விடுகிறது. “  ஒழுங்கா  ஒரு   பல்ப்  கூட  வாங்கத்  தெரியல..” என்று கொமட்டில் குத்து படுகிறேன். ஆனால் , தமிழ்க்கதைக்குள் பன்னெடுங்காலமாக
“ தலைக்கு மேல் சோகையாய் ஒரு குண்டுபலப் எரிந்து கொண்டே இருக்கிறது. கணேஷின் கதைக்குள்ளும் மூன்று இடத்தில் அந்த பல்ப் எரிகிறது. கடவுளே ! நீ தமிழ்கதைக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் “ தலைக்கு மேல் சோகையாய் எரிந்து கொண்டிருக்கும் அந்த குண்டுபல்ப்பை முதலில் உடைத்தெறியும்... “   ஒரு வேளை இந்த பல்பை உடைத்துப் போட்டால் ஒளிவெள்ளம்  பெருகிவிடுமா ? இந்த ஒளிவெள்ளத்தில் தான் மின்சாரத்தை நீக்கி விட்டு மார்க்வெஸின் சிறுவர்கள் ஆனந்த துடுப்பிட்டார்களா ? **
       நான் கணேஷின் இரத்தமற்ற கதையொன்றைப் படிக்க விரும்புகிறேன்.என்றாலும் நான் இதை அவனிடம் வற்புறுத்த முடியாது,அவனே கூட அவன் கதையிடம் வற்புறுத்த முடியாது அல்லவா?

     ( பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன் - உயிரெழுத்து பதிப்பகம்- விலை; 60)

   **   நீரைப்போன்றது ஒளி - மார்க்வெஸ்- தமிழில் ; கோபி கிருஷ்ணன் ; கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ்

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...