Skip to main content

நைஸ்






எதேச்சையாக பட்டுவிட்டது
உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன


இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா


இதற்காகத்தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா


இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா
இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா
இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா

இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா
இந்த நைஸிற்காகத்தான் "வைகறை வாளாகிறதா"


இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா


இதற்காகத்தான்
தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா

அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம்,அதே நைஸ்தான் வேண்டுமோ.

                                         நன்றி : காலச்சுவடு மே இதழ்

Comments

ஐயோ சாமீ...! ரொம்ப Nice...!
னைசாக ஒரு கவிதைக்கு வித்து கிடைத்துவிட்டது.
னைசாக ஒரு கவிதைக்கு வித்து கிடைத்துவிட்டது.
எவருடைய கை நைஸோ தெரியவில்லை. ஆனாலும், இப்படியொரு கவிதையை எழுத வைத்துவிட்டதே! அந்தக் கை நைஸாக இருந்தால்தானென்ன... இனி இல்லாமல் விட்டால்தானென்ன... ஒரு கவிதைக்குப் பிறகு.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...