Skip to main content

அழகு போர் அடிக்காதிருக்கட்டும் !


           




ஒரு தேசத்தில் 4 அழகிகளும்
நாற்பதாயிரம் இளைஞர்களும் வாழ்ந்து வந்தனர்.
அந்த நாற்பதாயிரம் இளைஞர்களும் காதலில் துடிதுடித்தபடி இருந்தனர்.
இளைஞர்கள் எனில் அத்தனை ஆண்களும் தான்
4 : 40,0000 என்கிற ஆகக் கொடூரமான வாய்ப்பாட்டால்
அங்கு பூசல்கள் மூண்டன.
கலவரங்கள் வெடித்தன.
முதுகில் குத்த காலஅவகாசம் போதவில்லை
ஆகவே நேருக்கு நேராக நெஞ்சில் குத்திக்கொண்டனர்.
வீதிகளில் பிணங்கள் கிடந்தன
வெறிநாய்கள் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டன.
அரசனுக்கு துக்கம் மண்டையை அடைத்தது.
ரிஷியொருவன் தன் பத்தினியல்லாத ஒருத்தியுடன்
கலக்குங்காலையில் நம் தேசத்து அற்பனொருவன்
எட்டிப் பார்த்ததால் விளைந்த வினை..
முன்வரலாறு சொன்னார் குலகுரு.
உடனே
யாககுண்டத்தில் தீ வளர்த்து
கண்ணீர் வார்த்து
ரிஷியை வரவழைத்தனர்.
செக்கச்சிவந்த வீதிகளைக் கண்டதும்
அவருக்கு கண் கலங்கி விட்டது.
மனம் இரங்கி விட்டது.
32000 : 32000 என்று
அழகின் சமன்குலைவை நீக்கியருளினார்.
தேசத்தில் அமைதி திரும்பியது.
ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர்.
விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும் பரிசுப்பொருட்களையும்
பரிமாறிக் கொண்டனர்.
மாரிமூன்றும் பொய்க்காது பொழிந்தன.
நீதிநெறிகள் தழைத்தோங்கின.
கலைகள் செழித்து வளர்ந்தன.
அத்தேசத்தின் கொடியிலிருந்து
“தலையில்லாத முண்டம் அகற்றப்பட்டு
முத்தமிடப்படும் கன்னம் “ பொறிக்கப்பட்டது.
 பாருங்கள்...
 இப்போது அது பட்டொளி வீசிப் பறக்கிறது !


                                                                        நன்றி : மலைகள்.காம்

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...