Skip to main content

தெய்வாம்சம்


                 
                                               



   
      தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.
 
  வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிமை. தனிமையிலேயே நம்மை நாம் அதிகம் உணர்கிறோம். படத்தில் வாத்தியக் கலப்பற்று ஒலிக்க விடப்பட்டிருக்கும் ராஜாவின் பாடல்கள் நம்மை நம்முள் இழுத்துச் செல்கின்றன.


  கதை பெரும்பாலும் ஓரிரவில் நிகழ்கிறது. காதல் என்கிற தீரவே தீராத ஆதார உணர்வின் மேல் நகர்கிறது. நாம் எவ்வளவு சொன்னாலும் காதலில் விடுபட்டபகுதி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. கலை அந்த விடுபடல்களைத் தொடர்ந்து நிரப்ப முயல்கிறது.பெரிய சிடுக்குகளோ திடீர் திருப்பங்களோ இல்லாத எளிய கதை. எளியதும் சிறியதுமான ஒன்று தன் நுண்ணிய மடிப்புகளாலேயே சுடர் விட முடியும். இப்படைப்பின் ஒளியும் அதுவே. நாயகியின் கணவன் சிகரெட்டால் தொடையில் சூடு வைப்பவனல்ல என்கிற அதிர்ச்சித் தகவலால் நமது மரபார்ந்த சினிமா ரசனைக்கு சப்பென்று ஆகி விடுகிறது. எனவே “ உப்புச் சப்பற்ற “ கதைதான்.  ஆயினும் ஒரு ரசிகன் தன் கண்ணீரால் அவனுக்குத் தேவையான அளவு உப்பிட்டுக் கொள்ளும்படி செய்திருக்கிறார் இயக்குநர். கதையைச் சொல்லி முடித்ததும் “அப்புறம்” என்று சிலர் கேட்கக்கூடும். அப்புறமெல்லாம் ஒன்றுமில்லை... அவ்வளவுதான். இந்த வாழ்வு அவ்வளவுதான் அனுமதிக்கிறது எனவே அவ்வளவுதான்.
 
  ஜானு , தன் வாழ்வில் என்ன நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாளோ அதைக் கற்பனையில் ஓட்டிப் பார்க்கிறாள் ஒரு காட்சியில். " இப்படித்தான் ஜானு நாம் என்னவெல்லாமோ நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.ஆனால் என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடக்கிறது ".
  சில திரைப்படங்களில்  நாயகனும், நாயகியும் ஒருவருள் ஒருவர் புகுந்து வெளியேறும் காட்சியில் கூட ரசிகர்கள் தேமேவென்று அமர்ந்திருப்பார்கள். ஜானுவும், ராமும் லேசாகக் கட்டிக் கொள்ளும் காட்சிக்கோ அரங்கு அதிர்கிறது.

           

         






சில விஷயங்களை  உடைத்துப் பார்க்கக் கூடாது. அப்படி உடைத்துப் பார்ப்பதின் வழியே சில உண்மைகள் உங்களுக்குச் சிக்கி விடக்கூடும். ஆனால் அந்த உண்மை கொடுங்கசப்பாக இருக்கும்.  ஏற்கனவே போதுமான  அளவு நெஞ்சுக்குள் கிடக்கிறது. மேலும் கொஞ்சம் கசப்பு எதற்கு? எனவே நான் ராமச்சந்திரனை உடைத்துப் பார்க்க விரும்பவில்லை.அவனை முற்றாக, முழு முற்றாக நம்பவே விரும்புகிறேன். “ இடுப்புப் பகுதி” சக்தி வாய்ந்தது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.ஆனால் அதன் சூறாவளியிலிருந்து ஒருவன் தப்பிப் பிழைத்து விட்டான் என்று நம்புவதிலும் எனக்குச் சிக்கலில்லை.

 படத்தில் இராமாயண காவியத்தின் குறியீடுகள் சில பயன்படுத்தப் பட்டுள்ளன. நாயகன் ராமன். நாயகி ஜானகி.எனில், ராமனின் முதல் எழுத்து “ D  “ அல்லவா ?ஆனால் இதில் “ K. ராமச்சந்திரன் “ என்று குறிப்பிடப்படுகிறது. இவன் தசரத ராமனல்ல.. கோசலை மைந்தன்.. "வசை இல் அய்யன்.."

 தமிழர்கள் இப்படி கும்பலாக குமுறி காலங்கள் ஆகின்றன. எவ்வளவு கலப்படம் மிக்கதாயினும் அழுகை நன்றே. விரைவில் வர இருக்கிற “ சர்க்கார் “ எல்லா அழுகைகளிலிருந்தும் நம்மை விடுவித்தருள்வார்.
 தெய்வங்களை விரட்டியடிப்பதில் கை தேர்ந்தவர்கள் நாம்.  இதோ.. அந்த மஞ்சள் நிறச் சுடிதார் சந்தைக்கு வந்துவிட்டது.


      நன்றி : அந்திமழை- நவம்பர்-18

Comments

படிக்கப் படிக்க மனசுக்குள் வெயிலும் மழையும் சேர்த்தடிக்கிறது...
S.Gomala said…
அழகான வரிகளோட தொடக்கம்..எப்போதுக்குமான பிடித்தவைகளில் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது இக்கட்டுரையோட வரிகள்..
கவிஞனின் பார்வையில் ரசனையான விமர்சனம்.இன்னுமொருமுறை முதலில் இருந்து படிக்கத் தூண்டுகிறது.
Thendral said…
Can able to see the film through the poet's eyes. Visualizing film through lines
Anonymous said…
Excellent review Sir.. super.. எதார்த்தம் இது தான் அழகா சொல்லி இருக்கிறீர்கள் இந்த வரிகள் "அப்புறமெல்லாம் ஒன்றுமில்லை அவ்வளவு தான்.
இந்த வாழ்வு அவ்வளவு தான் அனுமதிக்கிறது எனவே அவ்வளவு தான்.."

Popular posts from this blog

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.