பனிபூத்த இந்த மார்கழிப் பொழுதில் வீட்டின் முன் கோலம் கொண்டிருக்கிறாள். அமர்ந்த கோலமோ குனிந்த கோலமோ அன்று இது தனிக்கோலம். ஒன்றில் ஆழ்ந்து கரைகையில் கொள்ளும் திருக்கோலம். ஈரக் கூந்தலினின்று சொட்டுச் சொட்டாய் நழுவிவிழும் நீர்த் துளிகள் அழிப்பதற்குப் பதிலே ஆக்கி ஆக்கி அளிக்கின்றன. உலகை ஆசிர்வதித்தபடி கொஞ்சமாய் உந்தி வளையும் குதிகால்பிறை சிருஷ்டியின் பூரிப்பு அவள் தன்னுள்ளே சிதறிக் கிடக்கும் புள்ளிகளை ஒன்றிணைத்து ஒரு கோடிழுக்கிறாள் வாசலில் உதிக்கிறது புத்தம்புது கோலமொன்று. |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments