Skip to main content

Posts

Showing posts from 2025

எழுந்தருளல்

  ப ழக்கதோஷத்தில் நான் கிள்ளிப் பூசிய திருநீற்றின் மீது நீ  தொட்டுத் தீட்டிய தீற்றலில் எழுந்ததொரு தெய்வம் அவ்வளவு கும்பலுள் அதை நான் மட்டுமே பார்த்தேன் நான் மட்டுமே பாடினேன் அதற்கு ஆயிரமாயிரம் கரங்கள் அத்தனையத்தனை விழிகள் ஆயினும் நான் “ போதும்” என்று   சொல்லிவிட்டேன்

"போகாதே….!"

  பே ருந்தோ ரயிலோ காத்திருக்காது வீடு பொறுக்காது வேலை பொறுக்காது அந்த நான்கு பேர் உறுதியாகப் பொறுக்க மாட்டார்கள் எனக்குத் தெரியாதா என்ன? என் முகம் வாடுவது கண்டு பூதலத்தில் எதுவொன்றும் வாடி விடாது கண்ணீரை  நான் எவ்வளவு காலமாய் கண்டுவருகிறேன் என் கண்ணீர்… அம்மாவின் கண்ணீர்.. பாட்டியின் கண்ணீர்.. அவள் பாட்டியின் கண்ணீர்.. மானுடம் தோன்றிய காலம் தொட்டு கண்ணீரால் எதையுமே  தடுத்து விட முடிந்ததில்லை ஆனாலும் சொல்வேன்… "போகாதே…!"

காதலில் தோல்வியுண்டோ கண்மணி?

  கா தலில் தோல்வி என்றானவுடன் நேராக பெட்டிக் கடைக்குச்  செல்கின்றனர் சிலர் காதல் தோல்வி சிகரெட்  என்றொன்றுண்டு. என் பால்யத்தில் சசியண்ணனை  அந்த சிகரெட்டுடன் பார்த்திருக்கிறேன் மாலை இருளுள் ரயில்வே ஸ்டேசனின் நீளமான சிமெண்ட் பெஞ்சில்  தனியே அமர்ந்திருந்தார் அப்போது கன்னங்களில் வற்றிய கண்ணீர்த் தடம் ஆயினும் முகமென்னவோ இருண்டுவிட வில்லை அதில் வேறொரு வெளிச்சம் உலகைக்  கொன்று புதைக்கும் வெறிக்கு பதில் அவர் வாய்க்கால் பறவைக்கு  பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மிக மிக உறுதியாக அவர் சிங்கத்தின்  வாயினுள் இல்லை அந்த இதழ்கடை இனிப்பு கூட எனக்கு இப்போதும்  நினைவிருக்கிறது. காதலில் தோல்வி கண்டவரின் கேசத்தை அலசுவதற்கென்றே ஒரு காற்றுண்டு என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன் அவ்வளவு அழகை  அள்ளிக்கொண்டு வரும் காற்று காதல் தோல்வி சிகரெட்டுகள் என்றொரு வகையுண்டு தான் நான் என் முதல் சிகரெட்டை ஏற்றுகிறேன் அதோ… அந்தக் காற்று வருகிறது

மிக வலுவான காரணம்

  பொ துவாகவே குடிகாரன்களை சமாளிப்பது கடினம் அழுகாச்சி குடிகாரனென்றால் அதைவிடக்  கடினம் நாசூக்காக  கைக்குட்டைக்குள் கண்ணீர் சிந்துபவர்களுக்கு மெதுவாகத் தோளைத் தொட்டால் போதும் குடி  முதலில்  நாசூக்கைத்தான் குடிக்கிறது ஆகவே அவர்கள் குடம் குடமாகக் கொட்டுவார்கள் ஏன் அழுகிறார்கள் என்பதற்கான காரணத்தை அவ்வளவு துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியாது என்பதால் ஆறுதலுக்கான சொற்களையும் சரியாகத் தேர்ந்து விட முடியாது இப்படித்தான் இன்று என்னவோ சொல்லப் போய் “ ஆமாம்…நீ அதில் உன் அம்மாவைத் தேடி விட்டாய்…”  என்று சொல்லி விட்டேன். பிறகோ மண்ணில் கிடந்து புரளத் துவங்கி விட்டான்.

சார், ஒரு சின்ன உதவி

  உ ங்கள் முன் அன்பு வெறுப்பு என்று இரண்டே இரண்டைக் காட்டினாரே  அவர் நிஜமாலுமே அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும்தான். அதே அளப்பறிய கருணையாளன் இதோ…என் முன்  எண்ணற்ற விதவிதங்களை  உருட்டி விடுகிறார் அன்பு போல் தோன்றும் வெறுப்பு வெறுப்பு போல் தெரியும் அன்பு அன்புதான் என்று உறுதி சொல்லமுடியாத அன்பு வெறுப்பென்று இறுதி  செய்துவிட முடியாத  வெறுப்பு அன்பின் வெள்ளைக்கரு மூடிய வெறுப்பின் மஞ்சள் கரு முக்கால் வெறுப்பில்  துளியூண்டு     அன்பைக் கலந்து   கடைந்த  ஒன்று முழு அன்புள்  நெளியும்  வெறுப்பின் சிறு புழு அன்பின் ஆடை அவிழ்ந்து விடாமல்  காக்கும்  வெறுப்பின் இடைக்கச்சை வெறுப்பின் வதனத்தில் அன்பின் அழகிய மைத்தீற்றல் ரஹ்மான் சார், எனக்கு ஒரு நல்வழி காட்டக் கூடாதா?

இரண்டு கவிதைகள்

  1 ம னசு தோள் மீது கைவைத்து மெல்ல அழுத்தி "மனசைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்.." என்றான் இத்தனை ஆண்டு கால நட்பில் நானும் அவனும் மனசைக் குறித்து ஒரு முறை கூட பேசிக் கொண்டதில்லை. நான் உறுதி பூண்டேன்.. காவல் காத்தேன். மனசைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றையும்  பார்க்கவில்லை ஆயினும் பார்க்கப் பார்க்கவே நான் பார்க்கப் பார்க்கவே அது  பத்திரத்துக்கு அப்பால் சென்று கொண்டிருக்கிறது * 2 கு ட்டிச்சுவர் மீதொரு குட்டிச்சுவர் இருளில் மூழ்கிக் கிடக்கும் இந்தக் குட்டிச்சுவர் மீது கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தால் கண்ணீர் குறையும்  என்று தோன்றுகிறது அதுதானே என் தொட்டில் 

பச்சைப் பலகையே! பச்சைப் பலகையே!

  பெசண்ட் நகர்- 9 கி.மீ என்று போட்டிருந்தது. ஒன்பது கிலோ மீட்டர் ஒன்பதே கிலோ மீட்டர் எவ்வளவு அழகான 9 ! பஸ்ஸில் போகலாம் பைக்கில் போகலாம் ஆட்டோவில் போகலாம் வாடகைக் காரில் போகலாம் ஒரு கார் வாங்கி அதில் கூடப் போகலாம் அம்புக் குறி காட்டும் வழியில் எவ்வளவு மெதுவாக நடந்தாலும் அந்திக்குள் அடைந்து விடலாம் ஆனாலும் அந்த ஊரை நீ  இப்படி கூவிக் கூவிக் நிறைக்காதே! காதுக்குள் முழக்காதே!

இசை கவிதைகள்

  எதையும் மறந்துவிடவில்லை அல்லவா?  புறப்பட்டுப் போகப் போகிறது மே ஃப்ளவர் * ஒரே ஒரு சின்னச் சிக்கல் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் நீ அதில் சிக்கல் என்னவெனில் நீ இருப்பது * வெஞ்சரம் நஞ்சில் புரட்டிய அம்பால் இதயத்தின் ஆழத்தைக் குடைவது வெகு எளிது உனக்கு ‘நீ’ யிலிருந்து ‘ நீங்களு’க்காய் ஒரு நொடிப் பொழுதின் சாகசம் * பார்க்கப் பார்க்க உன் ஈரக்கூந்தலை அடித்து உதறியதில் தெறித்த திவலைகளென வெளி முழுக்கச் சிவந்து நிற்கிறது மே ஃப்ளவர் ஜுன் வந்து கொண்டிருக்கிறது * நன்றி அகழ்! https://akazhonline.com/?p=10173

எப்படி எழுந்தனவோ

கவி தன் கவிதையைக் குறித்து தானே பேசுவதில் சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன. அந்தப் பேச்சில் இயல்பாக எழுந்து வரும் தற்பெருமை ஒரு  சிக்கல். தன் கவிதை குறித்து தானே பேச முனைகையில் எழுகிற சலிப்பு ஒரு சிக்கல்.  கவிக்கும் தன் கவிதையின் நதி மூலம் குறித்து  தோராயமாக அன்றி   துல்லியமாகத்  தெரிந்து விடாது என்பது இன்னொரு சிக்கல். பேசிப் பேசி கண் முன்னே தன் கவிதையின் அழகுகள் கரைந்து செல்வதை  அவன் சற்றும் விரும்புவதில்லை என்பது முக்கியமான சிக்கல். விளக்க முடியாத ஒன்று கவிதைக்குள் இருப்பதைப் போன்றே விளக்கக் கூடாத ஒன்றும் கவிதைக்குள் இருக்கிறது. ஆனாலும் கவிகள் கால காலமாக கவிதையைக் குறித்து பேசி வந்திருக்கிறார்கள். அதற்கு இலக்கணங்கள் வகுத்திருக்கிறார்கள். கவிதை அந்த இலக்கணங்களை உடைக்கையில் அதற்கு புதிய இலக்கணங்களை படைத்திருக்கிறார்கள்.தனது முழுத்தொகுப்பிற்கான முன்னுரையில் சுகுமாரன் எழுதியிருக்கும் ஒரு வரி “கவிதையாக்கம் குறித்துக் கொண்டிருந்த கொள்கைகளையும் பிடிவாதங்களையும் கவிதையே காலாவதி ஆக்குவதை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”.  இந்த உற்சாகம்தான் கவியைய...

மூன்று கவிதைகள்

மு தல் கனி  அந்தக் குழந்தை உலகிற்குப் புதுசு மூடிய காருக்குள்ளிருந்து கண்ணாடி வழியே வெளியே பார்த்தபடி வருகிறது சிக்னல் நிறுத்தத்தில்  ஒரு சிறுவன் காக்கி நிஜாரில் மேலாடையின்றி வியாபாரி போல் வந்தவன் அவன் தன் அழுக்குக் கையால் கூடைக் கொய்யாக்களில் ஒன்றினை எடுத்து குழந்தைக்குக்  காட்டுகிறான் காட்டிய  கணத்திலேயே ஊட்டியும் விட்டுவிட்டான் எட்டினால் தட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறார் அதன் அப்பா ஆனாலும் அதற்குள் அவ்வளவு தூரங்கள் அவரால் ஓடிவரக் கூடவில்லை. * க ண்டேன் சற்றே பெரிய ஊடல் போல அவள் சிரி... சிரி... சிரி..  எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவன்  துளியும் அசைந்துவிடாது  நின்று கொண்டிருந்தான் அவள் கன்னச் சதைகளை  இழுத்து இழுத்து விட்டாள் இறுக்கத்துள் கை நுழைத்து உதடுகளைப்  பிரித்து வைத்தாள் கடைசிவரை சிரிக்கவில்லை கல் அங்கே சிரித்துக் கொண்டிருந்த இன்னொன்றை நான் கண்டு சிரித்தேன். * ம னைவியின் முதல் கவிதை "பாயுது பாயுது நீரு பல எண்ணங்கள் போலே- வருது தண்ணீரு..." என்று முதல் அடி எடுத்தவள் ஏனோ  கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டாள் ஏரியைக் காட்டிலும் ஆ...