காதலில் தோல்வி என்றானவுடன் நேராக பெட்டிக் கடைக்குச் செல்கின்றனர் சிலர் காதல் தோல்வி சிகரெட் என்றொன்றுண்டு. என் பால்யத்தில் சசியண்ணனை அந்த சிகரெட்டுடன் பார்த்திருக்கிறேன் மாலை இருளுள் ரயில்வே ஸ்டேசனின் நீளமான சிமெண்ட் பெஞ்சில் தனியே அமர்ந்திருந்தார் அப்போது கன்னங்களில் வற்றிய கண்ணீர்த் தடம் ஆயினும் முகமென்னவோ இருண்டுவிட வில்லை அதில் வேறொரு வெளிச்சம் உலகைக் கொன்று புதைக்கும் வெறிக்கு பதில் அவர் வாய்க்கால் பறவைக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மிக மிக உறுதியாக அவர் சிங்கத்தின் வாயினுள் இல்லை அந்த இதழ்கடை இனிப்பு கூட எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. காதலில் தோல்வி கண்டவரின் கேசத்தை அலசுவதற்கென்றே ஒரு காற்றுண்டு என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன் அவ்வளவு அழகை அள்ளிக்கொண்டு வரும் காற்று காதல் தோல்வி சிகரெட்டுகள் என்றொரு வகையுண்டு தான் நான் என் முதல் சிகரெட்டை ஏற்றுகிறேன் அதோ… அந்தக் காற்று வருகிறது |
Comments