Skip to main content

Posts

Showing posts from October, 2025

கண் கண்ட தெய்வம்

  “பங்கமர் குயில்”  என்று   சக்தியைப் புகழ்கிறான் ஒரு புலவன் வாசிக்க வாசிக்கவே வாசலில் கேட்டது  ஒரு கூவல் உச்சிக் கிளையில் அமர்ந்துளதா? இலைப்புதரில் மறைந்துளதா? மண்ணில் அமுது செய் மாயம் அது எங்குளது? இனிது தவிர  இன்னொன்றறியாய் ! எங்குளாய் நீ? பங்கமர் குயிலே …! பங்கமர் குயிலே …! இம்மரத்திலிருந்து அம்மரத்திற்கு  மாறி அமர்கையில் கண்டேன் உமையை கண் கண்ட தெய்வத்தை.

குயில் இனங்கள்

கொ ஞ்சம் கூடிவிட்டாலும் கொஞ்சம் குறைந்துவிட்டாலும் கூவியது குயில் அல்ல கொஞ்சமும் கூடாத கொஞ்சமும் குறையாத எதுவொன்றும் குயிலன்றோ!

புதிய நூலின் இரு அத்தியாயங்கள்

   கம்பனின் காதல் கவிதைகள்            1. துயரச் சந்தனக் கிண்ணம் இராமனும், இலக்குவனும் சீதையைத் தேடிச் செல்கையில் கிட்கிந்தையில் உள்ள பம்பை என்கிற பொய்கையை அடைந்து அங்கு ஒரு நாள் தங்குகின்றனர். மலர்கள், பறவைகள், மீன்கள் என இயற்கை எழில் மிக்க பொய்கை அது. கன்னியர் கனி இதழ்ச்சுவை போல் ருசிப்பது. கம்பன் இந்தப் பொய்கையை ஒளியும் நறுமணமும் கூடிய சந்தனக் கிண்ணம் என்கிறான். “…ஒண்தளச் சேறு இடு பரணியின் திகழும் தேசது” (3723) அதன் எழில் இராமனுக்குச் சீதையின் எழிலை நினைவுறுத்தி வருத்துகிறது. அந்தப் பொய்கையில் காதலின் துயர நாடகங்கள் நிகழ்கின்றன. அரி மலர்ப் பங்கயத்து      அன்னம், எங்கணும், ‘புரிகுழல் புக்க இடம்      புகல்கிலாத யாம், திருமுகம் நோக்கலம்; இறந்து      தீர்தும்’ என்று, எரியினில் புகுவன எனத்      தோன்றும் ஈட்டது; ( 3715) அந்தப் பொய்கையில் உள்ள தாமரையில் அன்னங்கள் வாழ்கின்றன. அவ்வளவுதான் செய்தி. ஆனால் கம்பன் செக்கச் சிவந்த தாமரையை, பற்றி எரிய விடுகிறான். அதில் அன்னங்களை எரி புக வைக்கிறான்....

பெருமாள்முருகன்- 60 : அய்யா வழியில் ஒரு ரகசிய உறுப்பினன்

பெருமாள்முருகனை முதன்முதலில் பார்த்தது சேலம் மணல்வீடு இதழ் சார்பாக நடந்த கூத்துப் பார்க்கப் போன இடத்தில் என்பதாக நினைவு. அப்போது எனது முதல் கவிதைத் தொகுப்பான “உறுமீன்களற்ற நதி” வந்திருந்தது. பார்த்த அன்றே ஒரு நிகழ்விற்கு அழைப்பு விடுத்தார். ஆனந்த், குவளைக் கண்ணன், நஞ்சுண்டன், மரகதமணி ஆகியோருடன் நானும் இளங்கோவும் அவரது ஏற்பாட்டில் சேலத்தை ஒட்டியுள்ள ஒரு கல்லூரியில் நடந்த இலக்கிய நிகழ்வில் கலந்த கொண்டோம். அநேகமாக நான் வெளியூரில் கவிஞன் என்கிற அறிமுகத்துடன் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி அதுவாகத்தான் இருக்கும். கவிதையின் மூலம் சம்பாதித்த சின்னத் தொகையும் அன்று அடைந்ததுதான். வாசகனுக்கு சில புத்தகங்கள் அவனுடைய புத்தகங்களாகவே ஆகிவிடும். “ நீராலானது”வும் “தனிமையின் வழி” யும் அப்படி என் புத்தகங்கள் ஆகிவிட்டவை. இவற்றுடன் இன்னொரு புத்தகத்தையும் சேர்க்க வேண்டும் ,அது பெருமாள் முருகனின் “வான்குருவியின் கூடு”. என் பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்தின் குறிப்பிடத்தக்க தொடக்கப்புள்ளி என்று அந்த நூலைச் சொல்வேன். அதிகமும் தனிப்பாடல்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல். இப்படியாக என் பழந்தமிழ் இலக்கிய வாசிப்பு தனிப...

அதிர்ச்சி ரிப்போர்ட்

க டைசியில் அவன் அறிந்து கொண்டான் அவள் இல்லாத போதுதான் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்கிற உண்மையை அதனினும் கடைசியாக அவன்  திடுக்கிட்டு அறிந்ததுவோ... மகிழ்ச்சியாக இருப்பதில்தான் என்னவோ  சிக்கல் அவனுக்கு

மகா நிர்வாணம்

செ ருப்புக்கடைக்கு செருப்புக்கடை  என்றே பெயர் சூட்டியுள்ளான் ஒருவன் உனக்கு  அம்மை அப்பன் யாருமில்லையா? பெண்டு பிள்ளை சேர்க்கவில்லையா? காதலி... பழைய காதலி... பால்ய சகி ... ஒரு நினைவும் இல்லையோ உனக்கு? அபிமான நடிகன் அபிமான நடிகை இப்படி அபிமானம் ஏதுமில்லையோ? உன் தலைக்கு மேல் வானமில்லையா? பூவோ, புழுவோ  இல்லையோ உன் நிலத்தில்? கொள்கை?  கோட்பாடு ? தெய்வம் என்று ஒன்று கூட இல்லையா உனக்கு? செருப்புக்கடைக்கு செருப்புக்கடை  போதும்  என்று முடிந்தது பெருஞ் சலிப்போ? அன்றி தெள்ளிய ஞானம் தானோ? சலிப்பும், ஞானமும் அவ்வளவுக்கும் அருகருகோ!

பெங்களூர் அந்தி

இ ன்னொரு அந்தியின் படத்தை அனுப்பியிருந்தாள் மகள் அந்தி  எப்போதும் புதியது புத்தம் புதியது அத்தனை கண்களையும் அகலத் திறப்பது படத்தின் ஊடே தலை நீட்டிக் கொண்டிருந்தது ஒரு வினய்ல் போர்டு நியான் விளக்குகள் மிளிரும் ஒரு வர்த்தக விளம்பரம் அந்தியின் முன்  இன்னொன்றால் மின்னி விட முடியாது நான்  பார்க்கப் பார்க்க வர்த்தகம் உருகியது விளம்பரம் உருகியது போட்டியும் வெற்றியும்  உருகி வழிந்தது அந்தப் பலகை அந்தியில் கலந்து  அந்தி என்றே ஆனது “அந்தியே…!” என்று அழைத்தால் அதற்கு அவ்வளவு வெட்கம்! அவ்வளவு பெருமிதம்! நன்றி ஆனந்த விகடன்- தீபாவளி மலர்