இன்னொரு அந்தியின் படத்தை அனுப்பியிருந்தாள் மகள் அந்தி எப்போதும் புதியது புத்தம் புதியது அத்தனை கண்களையும் அகலத் திறப்பது படத்தின் ஊடே தலை நீட்டிக் கொண்டிருந்தது ஒரு வினய்ல் போர்டு நியான் விளக்குகள் மிளிரும் ஒரு வர்த்தக விளம்பரம் அந்தியின் முன் இன்னொன்றால் மின்னி விட முடியாது நான் பார்க்கப் பார்க்க வர்த்தகம் உருகியது விளம்பரம் உருகியது போட்டியும் வெற்றியும் உருகி வழிந்தது அந்தப் பலகை அந்தியில் கலந்து அந்தி என்றே ஆனது “அந்தியே…!” என்று அழைத்தால் அதற்கு அவ்வளவு வெட்கம்! அவ்வளவு பெருமிதம்! நன்றி ஆனந்த விகடன்- தீபாவளி மலர் |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments