பாடகன் ஆகிவிட வேண்டுமென்பதுதான் என் லட்சியக் கனவாக இருந்தது. அப்துல்கலாம் அறிவுறுத்தியதற்கும் முன்பிருந்தே நான் அதைத்தான் கனவு கண்டு கொண்டிருந்தேன். பின்னாட்களில் எனக்கு எந்தக்குரலும் பொருந்தவில்லை என்பதைக் கண்டுகொண்டேன் என்றாலும், எஸ்.பி.பி குரல் எனக்குப் பொருந்தவில்லை என்பதை முன்பே அறிந்து கொண்டேன். எனவே எனக்கு முன்பு இளையராஜா என்றும், பின்பு சங்கர்மகாதேவன் என்றும் நினைப்பு. நான் பாடினால் எனக்கு மட்டும் இளையராஜா போன்றே கேட்டது. காதுக்குள் விதவிதமான கருவிகளை செருகிஎடுத்த போதும் இந்த நோயை குணமாக்க கூடவில்லை. எனினும் இந்நோய் உடலுக்கு பெரிதாக ஊறு செய்யவில்லை. மேலும் மனதிற்கு நேரும் இன்னல்களை விரட்டவும் இதுவே உதவியது. கொஞ்சம் முயன்றிருந்தால், கொஞ்சம் துணிந்திருந்தால் நானும் ஒரு நகலிசைக் கலைஞன்தான் என்பதை இன்றும் விடாது நம்புவதால் , இந்நூல் எனக்கு என்னை ஒத்த ஜீவன்களி...