இசை: (1977)
இயற்பெயர் ஆ. சத்தியமூர்த்தி. கோவை மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார். 2002-ல் இருகூர் பாரதி இலக்கிய பேரவை வெளியீடாக ' காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி' என்கிற கவிதைத் தொகுப்பும், 2009-ல் ' உறுமீன்களற்ற நதி்' , 2011-ல் “ சிவாஜிகணேசனின் முத்தங்கள்” ஆகிய கவிதைத் தொகுப்புகள் காலச்சுவடு பதிப்பகம் மூலமாகவும் வெளிவந்துள்ளன. கவிதை தவிர கவிதை பற்றிய எழுத்துகளும் உண்டு.
******************************
எப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை?
ஒரு கலைஞன் அவனையும் அறியாமல் சதா காலமும் எழுதுவதற்கான முனைப்போடே இருக்கிறான் என்றே நினைக்கிறேன். அரவத்தி்ன் செந்நா, வெளியைத் தீண்டிக்கொண்டேயிருப்பதைப்போல் கலைஞன் இவ்வாழ்வை தீண்டிக்கொண்டே இருக்கிறான். நான் இக்கணத்தில் இவ்வாழ்வை தீண்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவன் ப்ரக்ஞை பூர்வமாக உணரும்போது எழுதத் துவங்குகிறான். ஏதோ ஒரு சொற்றொடர் உதிக்கிறது. பிறகு அவன் தன் கற்பனை, சொல்வளம் ஆகியவற்றை அதனுடன் இணைக்கிறான். இதுவரை தன் புத்தியில் சேகரமாகி இருக்கிற கவிதையியல் குறித்த அறிவை பயன்படுத்திக்கொண்டு அவன் தன் கவிதையை எழுதி முடிக்கிறான். இது எனக்கும் பொருந்தும். நான் வலியை எழுதுபவன் என்று சொல்லிக் கொள்பவன். ஆனால், வலியிலும் இரண்டுண்டு என்று நினைக்கிறேன். புத்தியையே பேதலி்க்கச் செய்கிற, எவ்வித இயக்கத்துக்கும் இடம் தராத வலியின் போது என்னால் எழுத முடியவில்லை. இது போன்ற கணங்களில் அரிதாக முட்டித் தெறிக்கும் ஒரு சில வரிகளையும் தொடர்ந்து எழுதி கவிதையாக்க முடிவதில்லை. எனக்கு எழுதுவதற்கு அந்த வலி கொஞ்சம் மிதமானதாக குறைய வேண்டும். அப்படிக் குறைகிற சமயங்களிலேயே என்னால் எழுத முடிகிறது. அக்கவிதை குறி்த்து நிறைய யோசிக்க முடிகிறது. edit செய்ய முடிகிறது. அப்புறம் கவிதையியல் குறித்த உங்கள் எல்லா கேள்விகளும் அறைகுறையானவையே. என் பதில்களும் அப்படியே. அதனாலேயே கவிதை வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது.
எழுத்து எதைச் சாதிக்கிறது?
எழுத்தின் சமூகப் பயன் குறித்து ஏற்கெனவே நமது பாடத் திட்டங்களில் நிறைய சொல்லப் பட்டிருக்கிறது. எழுத்துக்காகக் கொல்லப்பட்டவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் எழுத்து எதைச் சாதிக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள். நாம் வேறு மாதிரி சொல்லிப் பார்க்கலாம். எழுத்து என்பது அன்பு செலுத்துவதாக இருக்கிறது. முத்தமிட உதவுகிறது. எழுதுபவனையும், வாசிப்பவனையும் ஏதோ ஒரு கணத்தில் பிணைத்துப் பிடித்து அழவைக்கிறது. அப்படி இருவரும் ஒரு கணத்தில் கட்டித் தழுவி அழுவதன் மூலம் ஒருவிதமான விடுதலை நிகழ்கிறது. இந்த விடுதலை உணர்வு எழுத்தின் சாதிப்புகளில் முக்கியமானது என்று நினைக்கிறேன். அழுகையைப் போன்றே எல்லா உணர்வுகளுக்கும் இது பொருந்தும். வலியை எழுதுவதன் மூலம் கலைஞன் அவ்வலியிலிருந்து தப்பிக்கிறான். வலியை வாசிப்பதன் மூலம் வாசகனும் வலிகளிலிருந்து தப்பிக்கவே செய்கிறான். துயரத்தையே ஆறுதலாகவும் இன்னும் சொன்னால் சந்தோஷமாகவும் தருகிற ரஸவாதத்தை எழுத்து நிகழ்த்துகிறது.
கவிதை ஒரு செய்பொருளா? அப்படியென்றால் கவிதை என்னவாக உணரப்படுகிறது?
கவிதைக்குள் தம் அறிவு சார்ந்து நிகழ்த்துகிற ' editing' போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு இக்கேள்வி அமைந்திருக்கிறதென்று நினைக்கிறேன்.
' கவிதையை நான் வலுக்கட்டாயமாக செய்வதில்லை' என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். நானும் அப்படிச் சொல்பவன்தான். தீவிர உணர்வெழுச்சியே கதையை துவக்கி வைக்கிறது.ஆனால், ஒட்டு மொத்தமாக பாய்ந்தடங்குகிற ஒரு சில கவிதைகளைத் தவிர பல கவிதைகள் நம் அறிவின் பரிசோதனைக்கு உட்பட்டு, அதன் குணங்கள் நம் விருப்பத்திற்கேற்ப திருத்தப்பட்டு பிறகே இறுதி வடிவம் கொள்கின்றன. ஆனால், இதை ஒட்டி கவிதை ஒரு செய்பொருள் எனச் சொல்லும் தைரியம் எனக்கில்லை. கவிதை அதன் ஆத்மாவோடே பெரிதும் தொடர்புடையது. சித்து வேலைகள் இரண்டாம்பட்சமானவைதான். ஆனால், நான் சித்து வேலைகளின் ரசிகனாகவும் இருக்கிறேன். ஆயிரமாயிரம் கவிதைகளுக்கிடையே ஒரு கவிதை தன் இருப்பை நிரூபிக்க கடுமையாக போராட வேண்டி இருக்கிறது. கவனத்தை ஈர்க்க, தனித்துத் தோன்ற, எப்போதும் தன்னை புதிதாக வைத்துக்கொள்ள, நீடூழி வாழ அது சித்து வேலைகளையும் நம்ப வேண்டி இருக்கிறது.
ஒரு சொல் ஒட்டுமொத்தக் கவி்தையையும் அடைத்துக்கொண்டு ஆள்கிற வினோதத்தை நாம் பல கவிதைகளில் காண்கிறோம். இப்படியே பேசி்க்கொண்டு போய் சித்துவேலைகளுக்கும் கவிதையின் ஆன்மா என்பதில் கணிசமான பங்குண்டு; சித்து வேலைகளும் சேர்ந்ததே கவிதையின் ஆன்மா என்கிற குழப்பமான பதிலை நான் சொல்லக்கூடும்.
கவிதையில் இசைக்கான இடத்தை தங்கள் அல்லது தற்கால கவிதைகள் கொண்டிருக்கின்றனவா?
தமிழ்க் கவிதை வரலாற்றி்ன் ஒரு கட்டத்தில் இசை வெள்ளம் பெருகி அது கவிதையையே அடித்துக்கொண்டோடும் விபரீதம் நிகழ்ந்தது. அதனால் சிலர் இசைத்தன்மை என்பதை வெறுத்தொதிக்கினர்.ஆனால், இசையி
ஒரே ஒரு மதுப்போத்தல்
அதற்கே நான் வந்தேன்
நகரெங்கும் படுகளம்
ஊரே பிணக் காடு
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
நிலமெங்கும் கொடுநாகம்
நீளும் வழி பாதாளம்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
குன்றெங்கும் எரிமலை
குறும்புதரில் கொள்ளிவாய்கள்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
கடலெங்கும் பேய் அலைகள்
கரையெல்லாம் முதலை
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
வனமெல்லாம் புலிக்கூட்டம்
மரந்தோறும் வேதாளம்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
வானெங்கும் விஷக்காற்று
திசையெல்லாம் மின்னல்
ஆனாலும் வந்தேன்
ஒரே ஒரு மதுப்போத்தல்
அதற்கே நான் வந்தேன்
( இளங்கோ கிருஷ்ணன்)
இக்கவிதைக்குள் இருப்பவை சொற்களே அல்ல. அது ஒரு துயரத்தின் இசை. ஒரு நவீன விமர்சகர்க்கு இக்கவிதையை நிராகரிக்கக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், இக்கவிதையின் இசை ஒரு பரவசமான கவிதா உணர்வை எனக்குள் செலுத்துகிறது. அப்புறம் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு இசை உண்டல்லவா ? அது பாடியே தீரும்..
உணர்வெழுச்சியானது கவிதையை(அ) படைப்பை எவ்விதத்தில் முன்னெடுக்கிறது?
உணர்ச்சியே கவிதையின் ஆதாரம். உணர்வெழுச்சியே ஒரு கவிதையை நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. சில சமயங்களில் முழுக்க எழுதியும் விடுகிறது. கவிஞன் இது யார் எழுதிய கவிதை என்று திகைத்து நிற்கிறான் அதன் முன். ' அந்தக் கவிதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது நண்பா' என்று சில கவிஞர்கள் என்னிடம் சொன்னதுண்டு. இப்படி தன்னைத்தானே எழுதிக் கொள்ளுதல் என்பது கட்டற்ற உணர்வெழுச்சியால் நிகழ்வதே என்று நினைக்கிறேன்.
கவிதையில் எளிமை என்பது சிரமமான காரியமாக பேசப்படுகிறது. தங்கள் கவிதைகளில் கூடி வந்திருக்கிற எளிமையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது இயல்பானதா? திட்டமிடப்பட்டதா?
அது இயல்பானதும் திட்டமிடப்பட்டதும் என்றே நினைக்கிறேன். என் துவக்க கால வாசிப்புகளில் பாரதி, ஆத்மாநாம், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன் போன்றோரே என்னை ஈர்ப்பவர்களாக இருந்தனர். இந்த எல்லாக் கவிகளுக்கும் எளிமை என்பது ஒரு பொது இயல்பாக இருந்திருப்பதை இப்போது யோசித்துப் பார்க்க முடிகிறது. நான் யாருடைய கவிதைகளை படித்து சிலாகித்தேனோ அவர்கள் என் கவிதையைப் பாதிக்கவே செய்தனர். எளிமை என்கிற விஷயம் இவர்களின் வழியே இயல்பாக எனக்குக் கடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், நான் எனக்கான தனித்த எளிமையை உருவாக்கவே முயல்கிறேன். மேலும் இந்த எளிமையை நான் என் வாசகர்களை நெஞ்சாரத் தழுவிக் கொள்வதற்கான ஓர் உபாயமாகக் கருதுகிறேன். கவிதையில் இருண்மை என்பது அந்தக் கவிதை கோருவதாக இருக்க வேண்டுமே ஒழிய, நாம் அள்ளிப் பூசுவதாக இருக்கலாகாது என்பதில் திட்டமாக இருக்கிறேன். ஆனால், எளிமை என்பது கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. சில தட்டையான கவிதைகளை எழுதிவிடும் ஆபத்துக்கு அது நம்மை இட்டுச் செல்கிறது. எல்லா எளிய கவிகளும் இந்த ஆபத்தை எதிர்கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். நுட்பத்தை இழக்காத எளிய கவிதைகளை சமைப்பது ரொம்பவும் சவாலான காரியமே. இவ்வளவு சிண்டும் சிடுக்கும் மிக்க வாழ்க்கை எளிமைக்குள் வந்து எப்படி அடரும்?
ஒரு படைப்பாளிக்கு நிலம் சார்ந்த உணர்வு தேவையா? உங்கள் கவிதைகளில் ஏன் நிலம் சார்ந்த பதிவு செய்யப்படவில்லை? அது படைப்பை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கி விடுவதாகக் கருதுகிறீர்களா?
நிலம் பதிவு செய்யப்பட வேண்டும்(அ) பதிவு செய்யப்படக் கூடாது என்கிற முன்முடிவுகளோடு நான் கவிதை எழுதுவதில்லை. நிலம் பதிவு செய்யப்படவில்லை என்று நீங்கள் இப்போது கூறும்போதுதான் நான் மீண்டும் என் கவிதைகளை வாசித்துப் பார்த்தேன். அதில் என் வாழ்நிலம் பெரிய அளவில் பதிவாகவில்லைதான். ஆனால், என் வாழ்நிலம் என்பது என் வீடு மட்டுமல்லவே. அதை என் பணிமனை என்று கருதினால் அது எனக்கு எண்ணற்ற விஷயங்களைக் காட்டியிருக்கிறது. தினம் ஒரு சதிராட்டம் நிகழும் இடம் அது. நான் தொகுப்பூதியம் என்கிற வினோதமான கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டபோது அது என் கை , கால்களைக் கட்டிப்போட்டு கசப்பைப் புகட்டியது. என் வாழ்வின் மிகத் துயரமான காலமது. ஆனால், அதுவே எனக்கு சில திருப்திகரமான கவிதைகளை வழங்கியது. ' ராசா வேஷம் கட்டும் கூத்துக் கலைஞன்' 'மிக எளிய பணி' ' ஓப்பியடிக்கும் பெண் அதிகாரி' ' ஒரு பிளாஸ்டிக் டம்ளர்' போன்று இன்று நண்பர்களால் குறிப்பிடப்படும் கவிதைகளை அந்தக் காலத்தில்தான் எழுதினேன். பிறகு... பயண வழித்தடம், பயணிக்கும் வாகனம் எல்லாமும் நம் வாழ்நிலம்தானே? நீங்கள் குறிப்பாக இயற்கை சார்ந்த என் வசிப்பிடத்தைக் கேட்பீர்களென்றால் அதுவும் என் கவிதையைப் பாதிக்கவே செய்திருக்கிறது. ஆனால், அது நிலமாக அப்படியே பதிவு செய்யப்படவில்லை. எங்கள் ஊரில் செழித்து வளர்ந்திருக்கும் முட்காடுகளை என் கவிதைகளில் காணமுடிவதில்லை. அதற்குள் ஒளிந்திருக்கும் திறந்த வெளிக் கழிப்பிடங்களையும் காண முடிவதில்லை. எங்களூரின் பல தேவதைகளும் அதிகாலை 5 மணிக்கே துயிலெழுந்துகொள்ளுமாறு சபிக்கப்பட்ட்வர்கள். அவர்கள் இருட்டோடு இருட்டாக ஒரு திருடனைப்போல காலைக் கடனுக்கு செல்வதை நான் பார்த்திருக்கிறேன். தூரத்தில் கேட்கும் ரயிலின் ஊதலுக்கு அவசர அவசரமாக எழுந்து புறமுதுகு காட்டிக்கொண்டு நிற்கும் பெண்களை நீங்கள் உங்கள் பயணங்களில் பார்த்திருக்கலாம்.அவர்கள் எம் பெண்கள் தான். கழிப்பிட வசதியைக் கூட நம் பெண்களுக்கு முழுமையாக அளிக்க இயலாத லட்சணத்தில் இருக்கிறது நமது அரசியல். இன்னொரு வினோதம் செல்போனில் பேசியபடியே கழிப்பிடக் காடுகளுக்குச் செல்லும் பெண்கள். உலகமயமாதல், நவகாலனியவாதம் போன்ற பெரிய அரசியலின் எளிய சாட்சிகளாக எங்கள் மக்களை நான் காண்கிறேன். இவை என்னை பாதித்தன. ஆனால், என் கவிதைகளில் அவை வேறொன்றாக வெளிப்பட்டன.
உங்களைப் பாதித்த படைப்பாளிகளில் எது அத்தகைய ஒரு உறவை ஏற்படுத்துகிறது?
இன்று நாம் ' உழைப்பதற்கெதிரான உரிமை”
'பாடுபடல் வேண்டாம்
ஊனுடலை வருத்தாதீர்
உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில், இங்கே
அன்பு செய்தல் கண்டீர்'
என்று பாடி இருக்கிறான். உடனே அதுவேதான் இது, பாரதிக்கு அன்றே எல்லாம் தெரியும் என்று நான் சொல்ல வரவில்லை. பாரதிக்கு ஒரு அறிவாக அதைத் தொகுத்துக்கொள்ள தெரியவில்லை அன்று. ஆனால், ஒரு பரிசுத்தமான உணர்வெழுச்சியால் இது போன்ற இடங்களைத் தொட முடிந்திருக்கிறது. பாரதியின் முன் இன்று வைக்கப்படுகின்ற எல்லா அறிவார்ந்த விமர்சனங்களையும் இந்த ஒற்றைக் கவிதைக்கு நான் தின்னக் கொடுக்கிறேன். இதுபோன்ற பரிசுத்த உணர்வெழுச்சியே என் கவிதைகளை இயக்க வேண்டும் என்று நான் பேராசை கொள்கிறேன். ஒரு படைப்பாளியாகப் பார்க்கையில் என்னைப் பாதித்தவர்கள் நான் எழுதத் தவித்ததை எழுதியவர்களாகவும் , ஒரு வாசகனாக என் வாழ்வைத் தொட்டுத் தீண்டியவர்களாகவும் இருக்கிறார்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
தங்கள் கவிதைகளில் இயங்கும் பகடி மொழி என்கிருந்து பெறப்பட்டது?
என்னைப் பாதித்த கவிஞர்கள் என்று பலர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் என்னையுமறியாமல் சிலதை பெற்றிருக்கலாம். ஆனால், பகடி மொழியை நான் யாரிடமிருந்தும் கடன் பெறவில்லை. அது என் வாழ்விலிருந்தே கவிதைக்குள் இறங்கி இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இந்த வாழ்வை தொடர்ந்து பகடி பண்ணிக் கொண்டிருப்பதன் மூலம் அது அளிக்கும் தண்டனைகளால் பாதிக்கப்படாததைப் போன்ற ஒரு பாசாங்கை நிகழ்த்த முடிகிறது. என் கவிதைகளில் விழப்பார்க்கும் ஒருவித அழுமூஞ்சி சாயலை தவிர்க்கும் உத்தியாகவும் இதைக் கருதலாம். வெறுமனே அழுவதைக் காட்டிலும் பகடியின் மூலம் என் உணர்வுகள் நுட்பமாகவும், அழுத்தமாகவும் என் கவிதைக்குள் பதிவாகுவதாய் நான் கருதிக் கொண்டிருக்கிறேன். அப்புறம் கிராமம் இயல்பிலேயே குசும்பானது, பகடிக் கலையில் தேர்ந்தது. ஒரு கிராமத்தான் பகடி செய்யாமல் போனால் எப்படி?
பகடி செய்வது ஒரு கவிதையின் வலியையும் தீவிரத்தையும் குறைத்து விடாதா ? கவிதைக்குள் அல்லது உங்கள் கவிதைக்குள் பகடியின் இயக்கம் குறித்து சொல்லுங்கள் ?
இல்லை. பகடி கவிதையின் தீவிரத்தை கூட்டவே செய்கிறது. ' sugar coated" மாத்திரைகளும் பிணி நீக்கும் என்பதை தயவு செய்து நீங்கள் நம்ப வேண்டும்.நாம் சில சிமயம் இனிப்பு தீரும் வரை சப்பிவிட்டு மாத்திரையைத் துப்பிவிடுகிறோம்
.இதில், கவியின் சிக்கல் என்னவெனில், அவனும் சில சமயம் வெறும் சர்க்கரையை மட்டும் உருட்டித் தந்துவிடுவது தான். காளமேகம் இப்படி நிறைய இனிப்பு மிட்டாய்களைத் தந்தார். இன்றைய வாசிப்பில் அக்கவிதைகளுக்கு இருக்கும் சமூக அரசியல் முக்கியத்துவம் குறித்து தனியே தான் பேசவேண்டும். ஷங்கர் ராம சுப்ரமணியனின் ' சிங்கத்திற்கு பல் துலக்குபவர்கள்' கவிதை வெறும் வேடிக்கையா என்ன ? அக்கவிதையின் நுட்பமான பகடிமொழியே அதை காலகாலத்திற்கும் துயரார்ந்த மனிதர்களின் மனதில் ஒரு அழியா சித்திரமாக நிலைபெற வைத்திருக்கிறது என்று உறுதி சொல்லமுடியும். இனிப்பு மிட்டாய் வழங்குவது என் வேலையல்ல. யவனிகா " உன் கவிதைகள் கொண்டாட்டமா இருக்கு " என்கிறார். அது உண்மையெனில் அக்கொண்டாட்டம் ஒரு அடர் கறுப்பிற்கிடையே வெள்ளைக்கோடு கிழப்பதினாலேயே பளீரிடுகிறது என்று சொல்வேன்.விகடகவி மட்டையை உயர்த்துகிறார், குடும்ப நாய் ; சில சித்திரங்கள், ஆகிய கவிதைகளில் கண்ணீர் வெளியேயே சிந்திக் கிடக்கிறது.
அவனிடம் திடமான கொள்கைகள் இருக்கின்றன.
மகத்தான லட்சியங்கள் இருக்கின்றன.
அதை வலியுறுத்த
அவனிடம்
எண்ணற்ற புத்தகங்களும் இருக்கின்றன.
ஒரு ஸ்கூட்டி வாசலில் நின்று கொண்டு ஹாரணடிக்கிறது.
" எக்ஸ் க்யூஸ் மீ "
மகத்தான லட்சியங்களே!
என்கிற வரியும்,
சொல் “ மகாலிங்கம் “ !
எத்தனை மான்தான்
வேண்டும் உனக்கு.
என்கிற வரியும் ,
அக்கவிதைகளை விரிவான அர்த்த தளத்திற்கு நகர்த்துவதாகவே உணர்கிறேன். நம் வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் இந்த வரிகள் நம்மை கண்ணீர் சிந்தவும் வைத்துவிடும் என்று நம்புகிறேன். இந்த சுயவிளக்கங்கள் ஒரு நல்ல வாசகனுக்கு மோசமாக போர் அடிப்பவை. ஆனால், சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பிலேயே " லட்சுமி டாக்கீஸ் " என்றொரு கவிதை இருக்கிறது... அந்த தியேட்டர் என் வீட்டிற்கு அருகில் தான் இருந்தது. ஊர் அடங்கிய ராத்திரியில் வீட்டில் படுத்துக் கொண்டே ஒலிச்சித்திரம் கேட்கலாம். சுற்றியிருந்த நாலைந்து ஊர்களுக்கும் ஒரே தியேட்டர் அது தான். எங்களூரின் ஒரு 40 வ்யது மனிதனை நிறுத்தி " சனிக்கிழமை இரண்டாம் ஆட்டம் " என்று சொல்லிப் பாருங்கள்... "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி " அப்படீன்னு சொல்லுவாங்களே அப்படீன்னா என்னன்னு தெரியும். எங்கள் வாழ்வின் அநேக ரகசியங்கள் அதற்கே தெரியும். என் முதல் கவிதை 15 வயதிலேயே வெளிவரவில்லை.நான் 20 வயது வரை அந்த தியேட்டரின் பிள்ளையாகத்தான் இருந்தேன். ஒரு நடிகரின் வெறிகொண்ட ரசிகனாக இருந்தேன். பெயருக்கு முன்னே அவர் பெயரைச் சேர்த்துக் கொண்டேன்.பழைய லாட்டரிச் சீட்டுகளை வாங்க கடைகடையாய்ப் போனேன். பந்தல் போட்டேன். தோரணம் கட்டினேன். ஆமாம் ..
நாங்கள் முட்டாள்களாகத் தான் இருந்தோம். ஆனால் சந்தோசமாக இருந்தோம். ஒரு வேளை அறிவைத் தொலைத்துவிட்டுப் போனால்தான் சந்தோசம் கட்டிக் கொள்ளுமோ என்னவோ ? மண்டைக்குள் பூரான் ஊராத அக்காலத்தையே நான் என் வாழ்வில் மகிழ்ந்திருந்த காலம் என்று இன்றும் சொல்வேன்.இப்படிப் பட்ட தியேட்டரை ஒரு ராத்திரியில் சிமெண்ட் குடோனாக மாற்றி விட்டார்கள் " தியேட்டர் இன்று முதல் ஓடாது" என்கிற ஒரு அறிவிப்பு நோட்டீஸ் கூட ஒட்டவில்லை. நான் இந்த வலியைக் கடத்த முயன்றே ' லட்சுமி டாக்கீஸ்' கவிதையை எழுதினேன்.ஆனால் அது சொல்பேச்சு கேட்காமல் கேலி பேசிக்கொண்டே போனது. இப்போதும் அந்த தொகுப்பை புரட்டுகையில் அந்தப் பக்கத்தை சடாரென்று திருப்பி விடுவேன். நான் மானசீகமாக தோற்ற இடம் அது. என்றாலும் அக் கவிதை யவனிகா ஸ்பெசல். அவரின் சொல்லிற்காகவே அக்கவிதை தொகுப்பில் சேர்க்கப் பட்டது. தொட்டதெல்லாம் ஜொலிக்கும்வரம் எனக்கு அருளப்பட்டிருக்கவில்லை தான்.
கவிதை உங்களுக்குப் போதுமானதாக இருக்கிறதா? சிறுகதை, நாவல் போன்ற பிற வடிவங்களில் ஏன் நீங்கள் இயங்க முயலவில்லை?
கவிதை போதுமானதாகத்தான் இருக்கிறது. கவிதையில் என்னை நுட்பமாக வெளிப்படுத்திக்கொள்ளமுடிகிறது. அப்புறம் கவிதை பழகிவிட்டது என்றே நினைக்கிறேன். அது என் இயல்புக்கு உகந்த வடிவமாகவும் இருக்கிறது. சோம்பேறி என்பதுதான் என்னைப்பற்றிய எனது சித்திரம். என்னுடைய எந்தக் கவிதையும் பேப்பரையும், பேனாவையும் எடுத்துவைத்துக்கொண்டு எழுதப்பட்டதல்ல. அவை மனதுக்குள்ளாகவே உருக்கொண்டு மனதுக்குள்ளாகவே 'edit' செய்யப்பட்டு கடைசியில் அக்கறையற்ற மோசமான கையெழுத்தில் டைரியில் எழுதப்படுபவை. கவிதை சோம்பேறிகளின் வேலை என்பதல்ல இதன் பொருள்.ஒரு கவிதை கோரும் உழைப்பை அறியாதவனல்ல நான். நானே' குரல் முத்தம்' என்கிற என் எளிய கவிதையொன்றை ஒரு வருட காலம் காத்திருந்து காத்திருந்து எழுதி இருக்கிறேன். கவிதை எழுத ஒரு ஒழுங்கு தேவையிப்பதில்லை என்று சொல்ல வருகிறேன். சதா பதற்றமும் அலைதலும் கொண்ட மனமுள்ள என்னால் ஒரே இடத்தில் அரைமணி நேரம் அமர்ந்திருப்பது கூட முடியாத காரியமாகத்தான் இருக்கிறது.
எனவே,' table work' கோரும் பிற வடிவங்களில் என்னால் இயங்க முடிவதில்லை. உண்மையைச் சொன்னால் மிகச் சிரமப்பட்டு நான் சில சிறுகதைகளை எழுதினேன். உலகின் தலைசிறந்த பத்து கதைகளுள் ஒன்று என்கிற எண்ணத்தில் எழுதப்பட்ட அவை பிரசுர வாய்ப்பை பெறவில்லை. ஆனால், அவற்றுள் சில கவிதைகள் இருப்பதைக் கண்டேன். கவிஞரும், சிறுகதையாசிரியருமான என்கிற சின்ன பின்னொட்டுக்கு ஆசைப்பட்டு சிறுகதையைப் போட்டு ஏன் பிராண்டுவானேன்? என்று விட்டுவிட்டேன். நாவல் மிகுந்த உழைப்பைக் கோருகிற விஷயம்.அவ்வளவு பொறுமையும் அர்ப்பணிப்பும் உடையவனாக நான் இப்போது இல்லை.
உங்கள் கவிதைகளில் அரசியல் குறைவு என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா ?
இல்லை. இதை நான் உறுதியாக மறுக்கிறேன் .நான் எந்த ஒரு சித்தாந்தத்தின் தூதுவனும் இல்லை. ஒரு இறுதியான இறுதி
முடிவுக்கு வந்து விட்டு மற்றவைகளை கண்ணை மூடிக்கொண்டு
எதிர்ப்பவனும் அல்ல .அதனால் என் கவிதைகள் ஒரு இறுதி முடிவை
எட்டிவிட்டவர்களுக்கு அரசியல் கவிதைகளாக இல்லாமல் தோன்றாலம்.
மேலும் என் அரசியல் கவிதைகள் பகடி மொழியில் இயங்குபவை. அது என்
மற்றும் என் கவிதையின் இயல்பு.
விறைத்த, சிடுமுஞ்சி அரசியல்குருமார்களுக்கு ஒரு அரசியல் கவிதை என்பது
அவர்களைப் போலவே விறைத்த சிடுமுஞ்சியோடு இருக்க வேண்டும் போல.
அவர்களுக்கு என் கவிதைகளை, அவற்றின் பகடி மொழியின் பொருட்டு வெறும்
நகைச்சுவையாக மட்டுமே படிக்க முடிந்தால், நான் கலைவாணியிடம் அவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் .அப்புறம் நான் அரசியல் பிழைத்ததாக குற்றம் சாட்டப்படுவதற்கு முக்கியக் காரணம்
நான் என் தொகுப்பை நித்யஸ்ரீ என்கிற பாப்பாதிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேனாம்.
அவர் உங்களுக்கு வெறும் பாப்பாத்தி மட்டும் என்றால் அதற்கு மேல் பேச
ஒன்றும் இல்லை.
வாழ்க உங்கள் அரசியல். நான் தனித்தழுத காலங்களில் தாங்கிக்கொண்ட மடி அது.
எனக்கு கர்நாடக சங்கீதம் எல்லாம் தெரியாது. ஆனால் அந்த குரலில் என்
அந்தரங்கமான துயரங்களுக்கான மருந்திருந்தது.
நான் ரொம்பவும் ஆத்மார்த்தமாகவே அதை செய்தேன் .ஒரு கலையை
அனுபவிப்பதுர்க்கு முன்னால்
அது எந்த சாதியிடம் இருந்து வருகிறது என்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால்
அப்படியான் அரசியல் எனக்கு வேண்டாம். அந்தக் குரல் எந்த சாதியிடம்
இருந்து வந்திருந்தாலும் நான்
இதையே செய்திருப்பேன் என்கிற உண்மை என் நெஞ்சுக்கு தெரியும்.
அப்புறம் என் வாழ்வு லட்சிய வாழ்வொன்றும் கிடையாது.
சொந்தச்சாதிக்காரியோடுகூடி சொந்தச்சாதி பிள்ளைகளை
ஈனப்போகிற நான், சாதி ஒழிப்பை பற்றி பேசும் போது என் தொண்டையில்
என்னவோ உறுத்துகிறது. இலக்கியம், கவிதை, புரட்சி என்கிற ஒரு எழவும் தெரியாத
என் தங்கையொருத்தி சாணிப்பொடியைக் கரைத்துக் குடித்து தன் காதலை
நிறைவேற்றிக் கொள்கிறாள்.
அந்த நெஞ்சுரம் கூட இல்லாதவனாகத் தான் நான் இருந்திருக்கிறேன். குடும்பம்
என்கிற வலிய தாம்புக்கயிரால்
இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான். எனவே தான்
நான் முழங்குவதற்குப் பதிலாக அழுகிறேன் . என் சில படைப்புகளில் குடும்பம் என்கிற தளையில் இருந்து வெளியேறத் தவிக்கிற
ஒரு மனிதனின் விசும்பலை , காதிருந்தால் நீங்கள் கேட்கலாம். அப்புறம்,
என்னைப் போன்றவர்களுக்காகத்தான் சே குவேரா டி- சர்ட்டுகள்ஐ மலிவு
விலையில் ரோட்டில் விற்கிறார்கள்.
இல்லை. இதை நான் உறுதியாக மறுக்கிறேன் .நான் எந்த ஒரு சித்தாந்தத்தின் தூதுவனும் இல்லை. ஒரு இறுதியான இறுதி
முடிவுக்கு வந்து விட்டு மற்றவைகளை கண்ணை மூடிக்கொண்டு
எதிர்ப்பவனும் அல்ல .அதனால் என் கவிதைகள் ஒரு இறுதி முடிவை
எட்டிவிட்டவர்களுக்கு அரசியல் கவிதைகளாக இல்லாமல் தோன்றாலம்.
மேலும் என் அரசியல் கவிதைகள் பகடி மொழியில் இயங்குபவை. அது என்
மற்றும் என் கவிதையின் இயல்பு.
விறைத்த, சிடுமுஞ்சி அரசியல்குருமார்களுக்கு ஒரு அரசியல் கவிதை என்பது
அவர்களைப் போலவே விறைத்த சிடுமுஞ்சியோடு இருக்க வேண்டும் போல.
அவர்களுக்கு என் கவிதைகளை, அவற்றின் பகடி மொழியின் பொருட்டு வெறும்
நகைச்சுவையாக மட்டுமே படிக்க முடிந்தால், நான் கலைவாணியிடம் அவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் .அப்புறம் நான் அரசியல் பிழைத்ததாக குற்றம் சாட்டப்படுவதற்கு முக்கியக் காரணம்
நான் என் தொகுப்பை நித்யஸ்ரீ என்கிற பாப்பாதிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேனாம்.
அவர் உங்களுக்கு வெறும் பாப்பாத்தி மட்டும் என்றால் அதற்கு மேல் பேச
ஒன்றும் இல்லை.
வாழ்க உங்கள் அரசியல். நான் தனித்தழுத காலங்களில் தாங்கிக்கொண்ட மடி அது.
எனக்கு கர்நாடக சங்கீதம் எல்லாம் தெரியாது. ஆனால் அந்த குரலில் என்
அந்தரங்கமான துயரங்களுக்கான மருந்திருந்தது.
நான் ரொம்பவும் ஆத்மார்த்தமாகவே அதை செய்தேன் .ஒரு கலையை
அனுபவிப்பதுர்க்கு முன்னால்
அது எந்த சாதியிடம் இருந்து வருகிறது என்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால்
அப்படியான் அரசியல் எனக்கு வேண்டாம். அந்தக் குரல் எந்த சாதியிடம்
இருந்து வந்திருந்தாலும் நான்
இதையே செய்திருப்பேன் என்கிற உண்மை என் நெஞ்சுக்கு தெரியும்.
அப்புறம் என் வாழ்வு லட்சிய வாழ்வொன்றும் கிடையாது.
சொந்தச்சாதிக்காரியோடுகூடி சொந்தச்சாதி பிள்ளைகளை
ஈனப்போகிற நான், சாதி ஒழிப்பை பற்றி பேசும் போது என் தொண்டையில்
என்னவோ உறுத்துகிறது. இலக்கியம், கவிதை, புரட்சி என்கிற ஒரு எழவும் தெரியாத
என் தங்கையொருத்தி சாணிப்பொடியைக் கரைத்துக் குடித்து தன் காதலை
நிறைவேற்றிக் கொள்கிறாள்.
அந்த நெஞ்சுரம் கூட இல்லாதவனாகத் தான் நான் இருந்திருக்கிறேன். குடும்பம்
என்கிற வலிய தாம்புக்கயிரால்
இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான். எனவே தான்
நான் முழங்குவதற்குப் பதிலாக அழுகிறேன் . என் சில படைப்புகளில் குடும்பம் என்கிற தளையில் இருந்து வெளியேறத் தவிக்கிற
ஒரு மனிதனின் விசும்பலை , காதிருந்தால் நீங்கள் கேட்கலாம். அப்புறம்,
என்னைப் போன்றவர்களுக்காகத்தான் சே குவேரா டி- சர்ட்டுகள்ஐ மலிவு
விலையில் ரோட்டில் விற்கிறார்கள்.
இசை- பெயர் காரணம்?
முதலில் சூரியபாரதி என்கிற பெயரில் கவிதைகள் எழுதத் துவங்கினேன். தமிழில் ஏற்கெனவே நூற்றுக் கணக்கில் பாரதிகள் இருந்தனர். எனவே பெயரை மாற்றுவது குறித்து யோசித்தேன். இசை என்ற பெயர் தோன்றியது. இசைக்கும் எனக்கும் இருக்கும் உறவு ரொம்பவும் உணர்வுபூர்வமானது. ' என் பைத்தியத்துக்கே இசையை துணை சேர்க்கிறேன்' என்பார் ஜெயகாந்தன். நானும் அப்படியே. இசை என்னை பித்தாக்கி ஆட்டிவைக்கிறது. ஆனால், எனக்கு முறையான இசை அறிவு கிடையாது. இசையின் கணக்கு வழக்குகளை அறிந்த ஒரு ரசிகன் பயணிக்கும் எல்லா இடங்களுக்கும், இசையின் உணர்வுப் பெருக்கை மட்டும் வரித்துக்கொண்ட ஒரு ரசிகனால் பயணிக்கமுடியுமா என்றெனக்குத் தெரியவில்லை. ஆனால், என் இசை ரசனை மேலானது என்பதி்ல் நான் திடமாக இருக்கிறேன். இலக்கியம், கவிதை என சகலமும் கைவிட்டபோதும் இசை என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆனால், நண்பர்களுக்கு' இசை' என்கிற பெயரில் பெரிய ஆர்வமில்லை. ஒரு மதிய வேளையில் கண்கள் மூடி படுத்திருக்கும்போது ஒரு பாடல் கேட்டேன். சினிமா பாடல்தான். சங்கர் மகாதேவனுடையது. கவிஞர் சுகுமாரன் சொல்வாரே...இசை கேட்கும்போது நிறைய படங்களைப் பார்க்கலாம் என்று. அதுபோல நான் அன்று அந்தக் குரலின் வழியாக மூங்கில் காடுகளையும் , சுனைகளையும், மலைவெளியையும் பார்த்தேன். விழித்ததும் இசை என்கிற பெயரை உறுதி செய்துகொண்டேன். இசை பற்றிய நல்ல கவிதைகள் எதையும் நான் எழுதியதில்லை. ஆனால், என்னுடைய இசை ரசனை என் எழுத்துக்கு பெரிதும் உதவுகிறது என்று உறுதியாக சொல்ல முடியும். அது என் கவிதையின் இசையை ஒழுங்காக்குகிறது.
' குரலுக்கு ஒரு உடலுண்டு
அதற்கு ஒரு மடியுண்டு
அதில் கிடந்து விம்மினேன்'
என்பன போன்ற சில வரிகளை இசையே எழுதித் தந்தது.
முதலில் சூரியபாரதி என்கிற பெயரில் கவிதைகள் எழுதத் துவங்கினேன். தமிழில் ஏற்கெனவே நூற்றுக் கணக்கில் பாரதிகள் இருந்தனர். எனவே பெயரை மாற்றுவது குறித்து யோசித்தேன். இசை என்ற பெயர் தோன்றியது. இசைக்கும் எனக்கும் இருக்கும் உறவு ரொம்பவும் உணர்வுபூர்வமானது. ' என் பைத்தியத்துக்கே இசையை துணை சேர்க்கிறேன்' என்பார் ஜெயகாந்தன். நானும் அப்படியே. இசை என்னை பித்தாக்கி ஆட்டிவைக்கிறது. ஆனால், எனக்கு முறையான இசை அறிவு கிடையாது. இசையின் கணக்கு வழக்குகளை அறிந்த ஒரு ரசிகன் பயணிக்கும் எல்லா இடங்களுக்கும், இசையின் உணர்வுப் பெருக்கை மட்டும் வரித்துக்கொண்ட ஒரு ரசிகனால் பயணிக்கமுடியுமா என்றெனக்குத் தெரியவில்லை. ஆனால், என் இசை ரசனை மேலானது என்பதி்ல் நான் திடமாக இருக்கிறேன். இலக்கியம், கவிதை என சகலமும் கைவிட்டபோதும் இசை என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆனால், நண்பர்களுக்கு' இசை' என்கிற பெயரில் பெரிய ஆர்வமில்லை. ஒரு மதிய வேளையில் கண்கள் மூடி படுத்திருக்கும்போது ஒரு பாடல் கேட்டேன். சினிமா பாடல்தான். சங்கர் மகாதேவனுடையது. கவிஞர் சுகுமாரன் சொல்வாரே...இசை கேட்கும்போது நிறைய படங்களைப் பார்க்கலாம் என்று. அதுபோல நான் அன்று அந்தக் குரலின் வழியாக மூங்கில் காடுகளையும் , சுனைகளையும், மலைவெளியையும் பார்த்தேன். விழித்ததும் இசை என்கிற பெயரை உறுதி செய்துகொண்டேன். இசை பற்றிய நல்ல கவிதைகள் எதையும் நான் எழுதியதில்லை. ஆனால், என்னுடைய இசை ரசனை என் எழுத்துக்கு பெரிதும் உதவுகிறது என்று உறுதியாக சொல்ல முடியும். அது என் கவிதையின் இசையை ஒழுங்காக்குகிறது.
' குரலுக்கு ஒரு உடலுண்டு
அதற்கு ஒரு மடியுண்டு
அதில் கிடந்து விம்மினேன்'
என்பன போன்ற சில வரிகளை இசையே எழுதித் தந்தது.
Comments