( லிபி ஆரண்யாவின் “
உபரிவடைகளின் நகரம்” தொகுப்பை முன் வைத்து )
-
இசை-
மாட்டை வெளியே மேயவிடும் முன்
கயிற்றின் மறுமுனையை ஒரு தடித்த மரத்தில் கட்டிவிடுவது நமது வழக்கம். லிபி அந்தக்
கயிற்றையும் அறுத்தெரிந்து விடுவதின் மூலம், கயிற்றின் நீளமே மாட்டின் சுதந்திரம்
என்கிற கட்டுப்பாட்டை மீற
முயற்சித்திருக்கிறான்.இத்தொகுப்பில் வரும் கவிதைகளுக்கு ஒரு திடமான மையப்புள்ளி
இல்லை.அது நிலையற்று ஒன்றைத் தொட்டு ஒன்று, அதைத் தொட்டு இன்னொன்று என்று
தாவித்தாவி பறந்தபடியே இருக்கிறது. ஆனாலும் ‘ ஒன்றைத் தொட்டு ஒன்று “ என்பதால்
எல்லாவற்றிற்குமிடையே மங்கலாக ஏதோ ஒன்று தொட்டுக்கொண்டு தான் இருக்கிறது. புனைவின்
கட்டற்ற சுதந்திரத்தை துய்கும் வேட்கை என்று இதைச் சொல்ல்லாம். சில கவிதைகளில்
இந்த தாவல் “ போதை வேளைப் பேச்சு “ என்கிற சாக்கில் நிகழ்கிறது. சில சமயம்
நிதானத்தில் நிகழ்கிறது. ”போதை வேளைப் பேச்சு” சற்று அதிகம் தாண்டுகிறது
என்பதில் வியக்க ஒன்றுமில்லை. தமிழில் இதற்கு முன் ”கூட்டுக்கவிதை” என்பதாக இவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. ஆனால்
ஒரு தனியாள் தன் தொகுப்பின் அனேக கவிதைகளை
இவ்வாறு எழுத முயன்றிருப்பது
ஆச்சர்யமளிக்கிறது.
சமீப காலமாக நான் வாசித்த தொகுப்புகளில்
நம் சமகால வாழ்வைப் பாதிக்கும் எண்ணற்ற அரசியல் காரணிகளை இவ்வளவு வாய்விட்டு
பேசியிருக்கும் தொகுப்பு லிபியுடையது தான். வாய்விட்டு பேசும் போதும் கலாஅமைதி
கெடாது பார்த்துக் கொண்டிருப்பதே இக்கவிதைகளின் வெற்றி. ஒரு விமர்சன வசதிக்காக
தனிமனிதன் , சமூக மனிதன் என்று வகைபிரித்தால் , சுயானுபவத்தை விட ஒரு பொது
அனுபவத்தை, அதன் நுட்பமான அரசியல் புள்ளியை கவிதையாக்க முயல்பவையாக இவை
இருக்கின்றன. இந்த்த் தன்மையாலேயே சமகால கவிதைகளில் இவை தனித்து நிற்கின்றன. நம்மை
ஆச்சர்யம் கொள்ள வைக்கும் பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன என்று துணிந்து
சொல்வேன். இதன் கலாநேர்த்தி குறித்து சிலருக்கு மாற்றபிப்ராயங்கள் இருக்கலாம்.ஆனால் இக்கவியின் அரசியல்கண் காட்டும் காட்சிகள் நம்மை ஆச்சர்யம் கொள்ளச் செய்து விடுகின்றன.
“ தமது சாமான்களை பரத்தி வைக்க
தோதான சந்தையாகிச் சுழலும்
ஒரு மகாஉருண்டையை அத்தனை லேசில் நமது எசமானர்கள் விட்டு விடுவார்களா என்ன ?
என்று “ உலக அழிவு “ குறித்து முன்னுரையில் அரசியல்
பேசத்துவங்கும் லிபி கடைசி கவிதையில் தன் எண்ணற்ற காதலிகளை நினைவில்
பத்திரப்படுத்த ஏதுவாக இந்நிலத்தில் வல்லாரைக்கீரைகள் அதிகம் கிடைப்பதில்லையே என்று வருத்தம் கொள்கிறான்.
உலகமயம் நம் தனித்த
கலாச்சாரத்தை, நம் தனித்த வாழ்வை
பாதிப்பதை குறித்த நிறைய எழுத்துக்கள் சமீபத்தில் எழுதப்படுகின்றன.
லிபியும் அது குறித்து எழுதியிருக்கிறான். ஆனால் அது நம் உடல்நலத்தில்
விளைவிக்கும் கேடுகள் குறித்து “ கவிதைக்குள்” அதிகமாக பதிவில்லை. அல்லது லிபி எழுதியிருப்பது போல
இவ்வளவு விஸ்தாரமாக இல்லை
என்று சொல்ல்லாம்.
‘ தலைக்கு மேலே தண்ணீர்த்தொட்டிகள்
முளைவிடத் துவங்கிய பின்புதான்
நமது நிலத்தில்/கூரைகளின் கீழ்
வசிப்பவர்கள்
தமது அடிவயிற்றில் /ஒரு சோடிக்
கூழாங்கற்களைச் சுமக்கும்படியாயிற்று.
கூரையின் ஆகாசகங்கையிலிருந்து இறங்கும்
உப்படைத்த பி.வி.சி சர்ப்பங்களின் தீண்டலுக்கு
நமது நீர்பாதையின் போக்குவரத்து
சிக்கலாகிறது.
( பக்: 13)
கேவலம் கொசுக்கடிக்கு
நமது பிள்ளைகளைத் தூக்கித் தந்துவிட்டு
விஞ்ஞானத்தை புலுத்திக்கொண்டிருக்கும்
இந்த யுகத்தின்....
பக் : 63
நமது பச்சை நாடனல்லவா இது
நிறத்தோடு பெயரையும் திரித்து
ரிலையன்ஸ் பழமென்று கையில் திணிப்பவர்களால்
பொழுது புலர்வது சிக்கலாகிறது நமக்கு
பக் : 75
லிபியின் சில கவிதைகளில் மொழிதலின்
கச்சிதத் தன்மை இல்லை. சில இடங்களில் தேவைக்கும் சற்று அதிகமாகவே பேசிவிடுகிறது.
இந்த “ அதி விவரிப்பு “ சில சமயங்களில் கவிதையை அலுப்பாக்கி விடுகிறது. டெங்கு
காய்ச்சல் என்றால் என்ன ? அது எவ்வகை கொசுக்களால் வருகிறது ? பிறவகைக்
சொசுக்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு ? இவை எவ்வகை நீரில் வாசம் பண்ணுகின்றன
?இதற்கு எத்தனை ஜோடி கால்கள்’... என்று இவ்வளவு
தகவல்களையும் “இன்றைய கவிதைக்குள் “ பேச நிறைய திமிர் வேண்டும். தொகுப்பின் சில
கவிதைகள் இத்தகைய திமிர்தனத்தொடு எழுதப்பட்டிருக்கின்றன. கவிதைக்குள் திமிராக
திரிவது எனக்கும் பித்தமான ஒன்று தான் . கூன்விழாத முதுகுடன், கைகளை அகல
விரித்தபடி சைக்கிள் ஓட்டும் சாகசம் ஏகாந்தமானது தான். நான் இக்கவிதையை ஆகச்சிறந்த
கவிதை என்று சொல்ல மாட்டேன். ஆனால்
புறங்கையால் ஒதுக்கி விடமுடியாத படி எங்கேனும் ஓரிடத்தில் ஒரு அசலான சொல்லை
எழுதிவிடுகிறான் லிபி.
நமது கல்விமுறை குறித்து ஓயாது புகார்
சொல்பவையாக இருக்கின்றன
இந்தப் பள்ளிஆசிரியரின் கவிதைகள். இந்தக் கவிதைகளை ஒரு போதும் லிபியின்
கல்விஅலுவலர்கள் படித்துவிடப் போவதில்லை என்பதில் இருக்கிறது இவன் ரொட்டிக்கான
உத்தரவாதம். லிபி அரிதாக கச்சித்தன்மையோடு எழுதியிருக்கும் ஒரு நல்ல கவிதை இது..
ஜீப்பில் வந்து இறங்கும் கிருமிகள்
அரசு அலுவலக
மூத்திர வாடை முகப்பில்
வைக்கப்படும்
வெள்ளை வெள்ளை பிளீச்சிங் வட்டங்கள்
இன்று பெரிய கிருமிகளுக்கு மட்டுமே
அனுமதி
என்று
சின்னக்கிருமிகளிடம் சொல்லிச்
சிரிக்கின்றன
லிபியின் சில கவிதைகள் எனக்கு
சுயம்புலிங்கத்தை நினைவு படுத்தின. இருவருக்குமான புழங்கு மொழி வேறாயினும் தன்
காலத்தின் அரசியல் பாடுகளை அழுத்தமாக பதித்கும் கவிதைகள் எனும் அடிப்படையில்
ஒற்றுமையுண்டு. இன்னொரு ஒற்றுமை இடதுசாரிகள் மீதான் ப்ரியமும், செல்லமான எள்ளலும்.
எங்கள்
கிராமத்தில் கம்யூனிஸ்டுகள் எண்ணி ஐந்து பேர்
ஐந்து பேரும் ஒருத்தர் முகத்தை
ஒருத்தர் பார்க்கிறது இல்லை
பேசுகிறது இல்லை
ஐந்து பேரும் கிராமத்தில்
யார்கிட்டயும் பேசுகிறது இல்லை
ஆளுக்கு ஒரு கட்சி
எல்லோரும் தலைவர்கள்
இந்த
நல்லபிள்ளைகள் அரசமரத்து நிழலில் கூடி யோசிக்கவேண்டும்
ஒரு
தொண்டையில் பேச வேண்டும்
இது சுயம்புலிங்கத்துடையது.
“நமது
பெண்கள்தான் இடதுசாரி/மார்வாடிப் பெண்கள் வலதுசாரி
என்ற
தாவாவே நமக்குள் தீரவில்லை
இது
லிபி... ( பக்:67)
லிபியை ஒரு நல்ல சொற்பொழிவாளன் என்று நான்
அறிவேன். தொகுப்பின் சில கவிதைகளை ”கவித்துவம் ஏற்றப்பட்ட
சொற்பொழிவுகள் “ என்று சொல்லத்தோன்றுகிறது.இந்த சொற்பொழிவுத்தன்மை ”கவிதைக்கேயான” பிரத்யேகமான உச்சங்கள் நிகழ
இடையூறாக நிற்கிறது என்பது என் எண்ணம்.
இதையெல்லாம் கவிதையில் பேசிவிடமுடிந்திருக்கிறதே
என்று ஆச்சர்யம் கொள்ள வைக்கும் சில வரிகளை லிபி எழுதியிருக்கிறான்
“ நமது
குடியிருப்புகளின் தளத்தை/வழுவழுப்பாக்குபவர்கள் தான்
வயதானவர்களின் குடுவைகளை/ உடைத்தபடியிருக்கிறார்கள்
தத்தித் தத்தி நடந்து/ வாத்தென்றாகிவிட்ட நம்மிடம்
பறித்துக்கொண்ட சொரசொரப்பை/ செருப்பிலும் மிதியடியிலும்
இறக்கிவைத்து/ அக்குபஞ்சர் கல்லாகட்டும் /
குயுக்தியான சந்தைதான்
அன்புமிகுதியில் / ஆண்டிமார்க்ஸ் க்ரீமை/
யுவதிகளுக்கு பரிசளிக்கிறது
(
பக் : 25)
ஸ்கூட்டியிடமிருந்து,
கல்லூரிப்பேருந்திடமிருந்து, நெளிகேசத்திடமிருந்து,ஆரஞ்சு சுளையாலான
அதரங்களிடமிருந்து இன்னும் தன்னால் விடுதலையாக முடியவில்லை அல்லது தான் விடுதலையைக்
கோரவில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ளும் லிபியின் நேர்மையை நான் முத்தமிட்டு
வரவேற்கலாம். சாகஸக்காரர்கள் வட்டவடிவ தீப்பந்தங்களினூடே குட்டிக்கரணமடித்து
வெளியேறுகையில், ஒரு சின்னகாதுவளையத்தின் முன்னே ஸ்தம்பித்து நிற்கும் கவிஞனை
இச்சமுகம் இன்னும் சற்று கூடுதல் கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும்.
இத்தொகுப்பில் தனித்து நிற்கிற கவிதை ஒன்று இந்த ஆரஞ்சு சுளைகளின் முன்னே
மண்டியிடுகிறது..
நெடிகிலும்/
பதற்றத்தின் குறிப்புகளை இறைத்து
யாரோ ஒருவரைக் காப்பாற்ற/ தலைசுழல வழிகேட்டபடி/
அவ்வாகனம் கடக்கையில்/ ஒரு சித்திரமென எதிர்ப்படும் / அந்த யுவயுவதி / தன்
மேலிமைகளை சற்றே இறக்கி / முகத்துக்கு நேரே/ கருனையை
சிலுவையென வனைகிறாள்/ ஜெபம் கசியும் ஆரஞ்சு சுளைகளுடன்
என்ன சிலுவை இது/ ஒருத்தர் சுகப்படவும்/ ஒருத்தர்
அகப்படவும்
( பக் ;20)
லிபியின் சமூக வாகனம், ஒரு சின்ன ஆரஞ்சு சுளையின்
மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்துகிடக்கும் கவிதை இதுவென்று நாம் விளையாட்டாக சொல்லாம்.
ஏனெனில், ஆம்புலன்சை பாராமல், சைரன் ஒலிக்காய் நடுங்காமல், உள்ளே துடிதுடிக்கும்
உயிர்க்காய் இரங்காமல் “ இதென்ன பொறுக்கித்தனம் “ என்கிற அபத்தமான கேள்வியை நாம்
அவனிடம் கேட்கப் போதில்லை. ஒரு வேளை கேட்டாலும்,
பிரார்தித்தலின் கருணையினாலேயே அந்த எளிய உதடுகள் ஆரஞ்சுசுளைகளாகி விட்டன
என்று அவன் அன்பு பேசலாம்.
டீக்கடைப்
பெஞ்சில் அமர்ந்து பகடி பேசுவதற்கும், கவிதைக்குள் இருந்து பகடி பேசுவதற்கும்
இடையேயான வேறுபாடுகளை லிபி அறியாதவனல்ல எனும் போதும், அவனும் சில டீக்கடை பகடிகளை
எழுதியிருப்பது எரிச்சலூட்டக் கூடியது. துரதிஷ்டவசமானது.
பழயை
எம்.ஜி.ஆர் படங்களிலாவது லில்லன் யாரென்று கடைசி சீனில் தெரிந்துவிடுகிறது. ஆனால்
நமது வில்லன்கள் நீளமான கோட்டையும், கருப்பு நிற கையுறைகளையும் தொடர்ந்து
கைமாற்றிக் கொண்டு எண்ணற்ற முகங்களுடன் நம்மால் துப்பறியவே முடியாத வேடங்களில்,
துப்பறியவே முடியாத தூரங்களில் இருக்கிறார்கள். இந்த பீதியுணர்வை நெஞ்சேற்றுவதாக
இருக்கின்றன் இக்கவிதைகள்.
ஆம்
லிபி, நீ சொல்வது போல் இவ்வளவு கயமைகளுக்கு மத்தியிலும் தூக்கிக்கொண்டிருக்கும்
சைடு ஸ்டேண்டுக்கு சைகை காட்டி நம் இன்னுயிரைக் காக்கும் நல்லவர்களும் இந்நிலத்தில்
வாழவே செய்கிறார்கள். நாமும் நாம்
புரியும் எண்ணற்ற கயமைகளுக்கு பிராயசித்தமாக எங்கேனும் ஒரு சைடு ஸ்டேண்டு
தூக்கிக்கொண்டிருக்கிறதா என்று உற்றுக்கவனித்தபடியே தொடர்ந்து வாழ்வோமாக.
( உபரிவடைகளில் நகரம்- லிபிஆரண்யா- சந்தியா பதிப்பகம்
வெளியீடு)
Comments