Skip to main content

எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழி


ஒரு பொட்டு தெரித்தாலே
உடல் கொப்புளமாய் பொந்திப் போகையில்
எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழியில்
மனிதர்கள் ஏன் இப்படி நெருக்கியடித்து நிற்கிறார்கள்
ஒருவரை ஒருவர் முந்தவும் பார்க்கிறார்கள்
 நன்மார்க்கத்தின் வழியில்
 காற்று விளையாடிக் கொண்டிருக்கிறது.
அங்கு ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் ஒரு சிலரும்
ஏன் இங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
தவிரவும்,  அடிக்கடி ஏன் அவர்கள் சலவாய் வடிக்கிறார்கள்.
வாணியிடம் ஆசிபெற்ற கையோடு
உற்சாகமாய் வந்து
இந்த நெரிசலில் கலக்கிறான் ஒரு கவி.
அவன் தொப்பி எதுவும் அணிந்திருக்கவில்லை
மேலும்
அனைவரையும் தொப்பியைக் கழற்றிவிடும் படியும்
கேட்டுக் கொள்கிறான்.
எட்டுமுழ வேட்டியை தலைக்கு போர்த்தியிருக்கும்
சிவனாண்டியைப் பார்கையில்
நமக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.
உளுந்துவடைகள்
எண்ணெய்க் கொதிக்கு மருளுமோ தாயே ?

Comments

எண்ணெய்க் கொப்பரை அது என்று சொன்னால், 'பொறாமை'என்பார்கள். மேலும், அப்படிச் சொல்வதற்கு நமக்கு உரிமையும் இல்லையே இசை. அவரவர் அனுபவமும் அவரவர் கவிதையாக நினைப்பதும் அவரவர்க்கே.

தொப்பியும் வேட்டியும் யாருடையவை என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்:)))

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685