Skip to main content

ஏன் எழுதுகிறேன்


   
                     நன்றி : அந்திமழை –செப்டம்பர்- 2013
         
  எழுதுவதற்கு என்று என்றென்றைக்குமான அடிப்படைக் காரணம் ஒன்றுண்டு. அது ஒருவனுக்கு இந்த உலகத்திற்கு சொல்ல ஒரு சேதி இருக்கிறது என்பது தான். ஒரு சாமானியனுக்கு எந்த சேதியும் இல்லையா என்றால், அவனுக்கும் சொல்ல ஒன்று உண்டு தான் ஆனால் அவனுக்கு சொல்லியே தீரவேண்டிய நெருக்கடியோ, பதைபதைப்போ இல்லை. நீட்டிப்படுத்தால் தூக்கம் வந்து விடுகிறது என்றால் எழுதுவதற்கு ஒரு அவசியமும் கிடையாது .மாறாக படுக்கையில் நாலாய் எட்டாய் சுருண்டு வளையும் பாம்பு எழுதியே தீரவேண்டி இருக்கிறது.
   எது ஒருவனை படுத்தி எடுக்கிறது என்பது ஆளுக்கு தக்க மாறுபடும் அது ஒன்றாகவே இருக்க ஒரு கட்டாயமும் இல்லை.  லா..ரா, தன்னை ஒரு செளந்தர்ய உபாசகன் என்கிறார். இளவேனிலோ, “ சகோதரிகளே , உங்கள் ஸ்நான அறையை நன்றாகத் தாளிட்டுக் கொள்ளுங்கள். வெளியே ஒரு செளந்தர்ய உபாசகன் காத்திருக்கிறான்என்று சொல்கிறார். சொல்லத்தான் செய்வார்….
  தவிர எழுத்துக்காரனுக்கு இயல்பிலேயே ஒரு கோணல்  இருக்கிறது.அவன் தன் கோணலை இரசிக்கிறான். அந்த கோணலின் வழியே அவன் இந்த சலித்த உலகத்தை  புதிதாக்கிப் பார்த்துக் கொள்கிறான். நான் எல்லோரையும் போல அல்ல என்று அவன் முதலில் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். பிறகு ஊருக்கு சொல்ல முனைகிறான்.
     காக்கைக் குருவி எங்கள்  ஜாதி
     நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
என்கிற பித்து இங்கிருந்து தான் புறப்படுகிறது.
  இந்த வாழ்வை எழுதி எழுதித் தான் கடக்க வேண்டும் என்றவன் விரும்புகிறான். எழுத்து ஒரு வெளியேற்றமாக இருக்கிறது. எழுத்து தப்பித்தல் அல்ல என்கிறார் சுகுமாரன் தப்பித்தல் என்றால் எதாவது மாற வேண்டும் அல்லவா என்று கேட்கிறார் என் பதில் என்னவென்றால்நான் வெளியேறிச் செல்லும் இடத்தில் இங்கிருக்கும் எல்லாமும் இருக்கிறது. கூடவே கொஞ்சம் காற்றோட்டமும் இருக்கிறது. அது என் மூச்சுத்தவிப்பை சற்றேனும் குறைக்கிறது.
   ஒவ்வொருவருக்கும் தனக்கேயான ஒரு வாழ்வு உண்டு. இவ்வுலகம் தொன்று தொட்டு சொல்லி வரும் உணர்வுகளை அவன் தன் கைகளால் தொட்டுப் பார்க்க விரும்பிகிறான். தன் விழிகளால் அள்ளிப்பருகப் பார்க்கிறான். யுகயுகமாய் கண்டு வந்த நிலவையல்ல, அவன் காண்பது. இங்கு எழுத்து பிறக்கிறது. ஒரு கோடித் துயரங்களோடு ஒரு துயரம் சேர்ந்து கொள்கிறது. பலகோடிக் காதல்களோடு இன்னொரு காதலும் இணைந்து கொள்கிறது. இன்னொரு தீப்பந்தம் உயருகிறது. எண்ணற்ற நெம்புகோல்களோடு இன்னொரு நெம்புகோலும் சேர்ந்து கொள்கிறது
    தன் எழுத்தில் எதை சொல்ல வேண்டும் என்பதில் ஒருவருக்கு விரும்பியோ விரும்பாமலோ ஒரு  தேர்வு  நேர்ந்து விடுகிறது. வெவ்வேறு விஷயங்களால் இயக்கப் பட்டாலும் ஒரு குறிப்பிட்ட விஷயமே ஒருவரை எழுதத் தூண்டுகிறது. அல்லது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு விஷயம் என்று சொல்லலாம். வெவ்வேறு வண்ணங்களில் ஜாலம் நிகழ்த்திய எழுத்தாளுமைகள் சொற்பமே.
   எதை எழுத வேண்டும் என்பதில் காலம் முக்கியப் பங்கு கொள்கிறது.
சங்க இலக்கியம்அன்பின் ஐந்திணைஎன்கிறது. நான் என்னுடைய காலத்தில் என்னுடைய தர்மத்தின் மீது நின்று கொண்டு
  பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு
   அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விட முடியாது
என்று எழுதுகிறேன். 
   வேறு எந்தக் காலத்தையம் விடவும் ஒருவன் தன் அந்தரங்க உணர்வுகளுக்கு நேர்மை செய்ய வேண்டிய காலமாக இருக்கிறது இது. ஏற்கனவே சொல்லப்பட்ட எல்லா  தத்தவங்களும் அவன்  கண்முன்னே சிதைந்து போய் இருக்கின்றன. ஒருவன் தன்னை ஒரு சுதேசி என்று மார்தட்டிக் கொள்வான் எனில், அவன் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சாக வாய்ப்புள்ள வாழ்வு இன்றையது.
  ஈழத்தில் நடைபெற்ற இன அழித்தொழிப்பின் போது 10 வரிகளை அடுக்கி கவிதை எழுத பெரும்பாலும் யாரும் விரும்பவில்லை. அப்படி எழுதி விட முடியும் தான். அதில் சில நல்ல கவிதைகளும் கிடைத்திருக்கும் தான். ஆனால் இன்றைய எழுத்தாளன் அப்படிச் செய்யாததற்கு அவன் படைப்பு வறுமை காரணம் இல்லை என்று நான் நம்புகிறேன். அவன் தன் அந்தரங்கத்தை மிக நேர்மையாக எதிர் கொண்டதின் விளைவே இது. அவனுக்கு தெரியும் குடித்து விட்டு விடுதி அறைகளை கண்ணீரால் மிதக்க விட்டது தவிர தான் வேறொன்றும் செய்யவில்லை என்று. வேறொன்று செய்ய முடியாதென்றும்.
  

  

Comments

குடிகார கபோதிக்கு அவ்வளவு தான் முடியும்...

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...