நெடுஞ்சாலை ஓரத்தில் இன்னும் வெட்டப்படாதிருக்கும் ஒரு புளியமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன இரு காதல் உள்ளங்கள் இருசக்கர வாகனத்து இருக்கையின் மீது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது ஒரு எளிய உணவு. அவள் அதை ஸ்பூனால் எடுத்து அவனுக்கு ஊட்டுகிறாள். அவன் மென்று மென்று விழுங்குகிறான் அவள் நாணத்துச் சிவப்பை. சிலர் அதைக் கண்டும் காணாதது போல் முகம் திருப்பிச் செல்கிறார்கள் சிலர் உற்றுக் கவனித்து ஏசிப் போகிறார்கள். அந்த விருந்தைக் கடக்கையில் அவளும் அறியாது அவனும் அறியாது நானும் உண்டேன் ஒரு வாய். . |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments