அ ந்திக்குள் புகுந்து செல்லும் மோட்டார் சைக்கிளோடு பிறந்தேன். அணில் கூட்டத்தோடு பிறந்தேன். மொட்டைமாடியோடு பிறந்தேன். கம்பர்கட்டோடு பிறந்தேன். ஓணத்துச் சேலையோடு பிறந்தேன். எப்படி எப்படியோ சொன்ன பிறகும் எஞ்சி நிற்கும் நதிகளோடு பிறந்தேன். தப்பட்டைக் குச்சியோடு பிறந்தேன். 'ஒளவை' என்கிற தெய்வத்தொடு பிறந்தேன். கால்களிடையே மிட்டாயோடு பிறந்தேன். 'செகவ்'வோடு பிறந்தேன். துளசி மணத்தோடு பிறந்தேன். " வித்தும் இடல் வேண்டா புலத்தொடு" பிறந்தேன். உலகைச் சின்னதாக உருட்டித் தந்த கிரிக்கெட் பந்தோடு பிறந்தேன். " சே 'வின் சுருட்டைப் புகைத்தபடியே பிறந்தேன். தைலமாகும் விரல்களோடு பிறந்தேன். என்னவென்றறியா வானொடு பிறந்தேன். கொடல்வத்தலோடு பிறந்தேன் 'ராஜாவோடு ' ராஜாவாகப் பிறந்தேன். புலரியை மீட்டும் புள்ளொடு பிறந்தேன். இந்தப் பொற்கணத்தில் இப்படிச் சொல்ல விரும்புகிறேன்.. இந்தத் தாயிற்கும் இந்தத் தந்தைக்குமல்ல தாயொடும், தந்தையொடும் பிறந்து வந்தேன்.