Skip to main content

உன்னை விடவும்

 




ன்னை விடவும்

உன் உடல்

கருணை மிக்கது.

அருள் பூண்டது.


உன்னைவிடவும் 

உன் உடல்

இதயப்பூர்வமானது.

பொய்யுரைக்க நாணுவது.


உன்னைவிடவும் அது

கவித்துவமானது.

நறுமணம் கமழ்வது.


உன்னைவிடவும் அது

இதமானது.

பளிங்கு போன்றது.


உன்னைவிடவும் அது

அகந்தை அழிந்தது.

அழகு பூத்து  உறங்குவது.


உன்னைவிடவும் அது

ஊழலில் குறைந்தது.

தில்லுமுல்லுகளில் விருப்பமற்றது


உன்னைப்போன்று 

கணக்குகளில் சமத்தன்று

அது எளிதாக ஏமாறுவது


உன்னைப் போன்று ஊர்வதன்று

அது பறப்பது.


உன்னை விடவும்

உன் உடல்

கருணை மிக்கது.

அருள் பூண்டது.

மேலும்

கண்ணீரைக் காணச் சகியாதது.


நீ மட்டும்

அடிக்கடி

அதன் காதைப் பிடித்துத் திருகாதிரு!


மீதியை

அதனிடம் நான் பேசிக் கொள்கிறேன்.


Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?