Skip to main content

ஒரு கவிதையின் கதை


அது பெருந்தொற்றுக் காலம்.  அப்பன் சாவுக்கு மகன் போகாத காலம். அன்னைக்கும் பிள்ளைக்கும் இரண்டடி இடைவெளி இருந்த காலம். உடைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டதற்காக ஓருடல் ஈருயிர்கள்  சண்டை செய்து கொண்ட  காலம். கடவுள்கள் தங்கள் கதவுகளை இழுத்துச் சாத்திக் கொண்ட காலம். 

உலகம் வீட்டுக்குள் சுருங்கிக் கிடந்த காலத்தில் நான் வெளியேதான் சுற்றிக் கொண்டிருந்தேன். வழக்கத்தை விட அதிகமாகச்  சுற்ற வேண்டியிருந்தது. எனது பணி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர். தினமும் நோயாளிகளை  தொட்டுச் சந்திக்க வேண்டிய பணி. புற  நோயாளிகளில் மறுநாள் கோவிட்  நோயாளியாக ஆகப் போகும் பலரும் இருப்பர்.  இரட்டை மாஸ்க் போட்டுக் கொள்ளச் சொல்லி வல்லுநர்கள் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். நோய்க் கிருமி எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி உயிர்களை உண்டு கொண்டிருந்தது. பொது மக்கள் நோயாளிகளைப்  பார்க்கும்  அதே பீதியோடுதான் மருத்துவர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும் பார்ப்பபார்கள். ஏனெனில் நாங்கள் நோய்ப் பரப்பின் அபாயத்தில் உள்ள ஆட்கள். நான் வீதியில் போகையில்   முட்கள் முட்டிகொண்டு  நிற்கும்  தலையோடு  கொரோனோ நடந்து போவது போலத்தான் பார்ப்பார்கள். 

மனிதர்கள் அவ்வளவு பெரிய தனிமையை அப்போது தான் முதன்முதலாக சந்திக்கிறார்கள். பலராலும் அதை சமாளிக்கவே முடியவில்லை. மனச்சிதைவுக்கு அருகில் சென்றவர்கள் பலர். வாழ்வென்றால் அது களியாட்டம் என்று எண்ணியிருந்தவர்கள் வாடி வதங்கி அழிந்தார்கள். எழுத்தாளன் என்கிற நிலையில் எனக்குத் தனிமை ஒரு சிக்கல் அல்ல எனும் போதும் , அது நான் எடுத்துக் கொள்ளும் தனிமை. தொற்றுக் காலத்துத் தனிமையோ திணிக்கப்பட்டது.  என்னாலும்  அதைத்  தாளத்தான் முடியவில்லை. நண்பர்களால் ஆன நான் கூடிக் களித்தலின் உற்சாகம் மறுக்கப்பட்டு கடும் சோர்வில் இருந்தேன். கூடவே ஒவ்வொரு நொடியையும் கவனத்தோடே கடக்க வேண்டிய எரிச்சலும், கொஞ்சம் மரண பயமும் இருந்தது. 

அந்தப் பைத்திய காலத்தில் ஒரு நாள் மிஷ்கின் அழைத்து, "நான் மசினக்குடி போகிறேன்,  அவிநாசி வழியாக. நீ அங்கு வந்துடு நாம சந்திக்கலாம்" என்றான். வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. வாகனத்தின் முகப்பில் ஒட்டியிருந்த " மருத்துவத் துறை" என்கிற ஸ்டிக்கர் செக் போஸ்ட்களை சிரமமின்றிக் கடக்க உதவியது.  இவ்வளவு ஆபத்தான காலத்தில் சந்திப்பது குறித்த அச்சமும் குற்றவுணர்வும் வழி நெடுக வந்தன.

அவிநாசியில்  ஒரு ஏ.டி.எம் முன்னால் மிஷ்கின் கார் நின்று கொண்டிருந்தது. கதவைத் தட்டினேன். அவன் எப்போதும் போல அதே மிஷ்கினாகவே இருந்தான். வெளியே இறங்க வந்தவனை உள்ளேயே உட்கார்ந்து கொள்ளலாம் என்று தடுத்தேன். அதற்குள் அவன் வெளியே வந்துவிட்டான். அமர்ந்து கொஞ்ச நேரம் பேச  ஒரு  இடமும் இல்லை. சாக்கடை மேட்டில் இருந்த ஒரு பெட்டிக்கடை பாதி திறந்திருந்தது. ஒரு வயதானவர் டீ வைத்து விற்றுக் கொண்டிருந்தார். கீழே சாக்கடை நீர் சுழித்தோட  அதன் மேலே போடப்பட்டிருந்த திண்டைக் காட்டி" இங்கேயே உட்காருவோம்" என்றான்.  கண்ணாடியைக் கழற்றிவிட்டால் அவனை யாருக்கும் தெரியாது. அந்த நாட்களில் கண்ணாடி போட்டிருந்தாலும் அவனைக்  கண்டுபிடிக்க மனிதர்கள் இல்லையே?  அன்று மிஷ்கினின் தம்பிதான் பொறுப்புள்ள குடிமகன் போல நடந்து கொண்டான். அவன் அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் கொஞ்சம் சானிடைசரை உள்ளங்கையில் ஊற்றி அதை கை முழுக்க பூசிக் கொண்டிருந்தான். " டேய் சாமி.... .. செத்தா சாகலாம் கீழ இறங்கி வாடா.." என்று  அதட்டினான் மிஷ்கின். மேற்சொன்ன அழைப்பிற்கிடையே இரண்டு " பீப்" சத்தங்கள் இருந்தன என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை. வேறு வழியின்றி சாமியும் கீழே இறங்கி வந்தான்.

எங்கள் உரையாடல்களுக்கு மத்தியில்  பக்கத்து சந்தின் வழியே இரண்டு  ஆம்புலன்ஸ்கள் கடந்து போவதைக் கவனித்தேன்.  சந்திப்பு முடிந்து  பிரியும் வேளையில் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் உண்டு எங்களுக்குள். ஆனால் சமூக இடைவெளியின் அவசியம் குறித்து அரசாங்கம் ஓயாமல் அறிவுறுத்திக் கொண்டிருந்த அந்த நாட்களில் அதற்கு வாய்ப்பில்லை அல்லவா? மேலும்  நான் ஒரு கொரோனோ தொற்று வேறு. மூடன் தானே உயிரைக் குடுத்து முத்தத்தை வாங்குவான்? ஆகவே நான் கை கூட குடுக்காமல் காரிலிருந்து சற்று விலகி நின்றேன். மிஷ்கின் இந்த உலகிற்கு ஒன்றுமே ஆகவில்லை என்பது போல வழக்கம் போல் வாரியணைத்து முத்தமிட்டான். என்னுள்ளே ஏதோ ஒன்று அவ்வளவு இனிதாக நடுங்கியது.

வைத்துக் கொண்டாடும் படி என் வாழ்வில் விஷேசங்கள் ஏதுமில்லை. அவனுக்கோ ஒரு பொன்னுலகம் மிச்சமிருந்தது. அடுத்த வாரத்தில் நானும் மசினக்குடி போனேன். எச்சில் கைகளால் உணவை பரிமாறிக் கொண்டோம். ஒரே  குவளையை மாற்றி மாற்றி அருந்தினோம். முழு முட்டாள்களைப் போல் நடந்து கொண்டோம்.

என் பிரார்த்தனைகளுக்கு தெய்வங்கள் பெரிதாக செவி சாய்த்ததில்லை. ஆயினும் அந்த வாரம் முழுக்க நான் அவனுக்காக பிரார்த்திக்குக் கொண்டிருந்தேன்.ஏனெனில் அப்போது அவன் தடுப்பூசி எதுவும் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. தடுப்பூசியாலும்  மரணங்களை முழுமையாகத்  தடுக்க இயலவில்லை என்பது தனிக்கதை.

மேதைமையை அறிவும் பயிற்சியும் கொண்டு உருவாக்கி  விட முடியும். ஆனால் முட்டாள்தனம் என்பது  உள்ளே பூப்பதால் வந்து அமையும் பேறு. என் பிரார்த்தனையெல்லாம் என் மீது பழி வந்து சேர்ந்து விடக் கூடாதே என்பதற்காக அல்ல.இந்த உலகில் முட்டாள்தனத்தின் அழகுகள் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காகத்தான். 

மிஷ்கின்!  மிச்ச நாளெல்லாம் நீ உன் முட்டாள்தனத்துள் இனித்துக் கிட!


வாடா!

நெடுநாட்களுக்குப் பிறகான சந்திப்பில்
ஒருவரை நோக்கி ஒருவர்
கிட்டத்தட்ட ஓடி வருகிறோம்

வீதிக்கு வீதி
விழுகின்றன பிணங்கள்

ஆம்புலன்ஸின் நாசஊளை
நின்றபாடில்லை

மகன் தன் தகப்பனின் உடலைக் காண
மறுத்துவிடுகிறான்

கவசஉடை  அணிந்த எவனோ ஒருவன்
தன் பிள்ளையின் பிணக்கட்டை
குழிக்குள் தள்ளிவிடுவதை
டி.வி யில் பார்க்கிறாள்
ஒரு தாய்

நமது காவியங்களின் கிரீடத்தில்
பொத்தல்கள் விழுந்துவிட்டன

தொற்றுக்கு எதிராக 
கடுமையாகப் போராடுகிறது அரசு
மக்களின் நலம் வேண்டி
ஓயாமல் உபதேசிக்கிறது

இப்போது
உனக்கும் எனக்கும் இடையே உள்ளது ஒரு கண்டிப்பான விதி
அது நம் சட்டைக் காலரைப் பிடித்து
பின்னோக்கி இழுக்கிறது

இரண்டடி  இடைவெளியில்
நின்று தயங்குகின்றன  நம் கால்கள்

வாடா!

முத்தமிடாவிட்டாலும்
செத்துத்தான் போவோம்!


        "பிறந்த நாள் முத்தங்கள் நண்பா!"

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான