“நீங்கள் CCTV யால் கண்காணிக்கப்படுகிறீர்கள் “ இந்த வாசகம் இப்போது பரவலாகக் காணக்கிடைக்கிறது. பெரு நகர வீதி முதல் சிறு வணிகக் கூடம் வரை இதற்கென்று ஒரு இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. CCTV- க்கு முன்பே கண்காணிப்பு பிறந்து விட்டது கண்காணிப்பே! நீ இந்த பூமியில் பிறந்த இரண்டாவது மனிதனின் உடன் பிறப்பு தானே? அறிவியல் ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து இங்கு வந்து சேர இவ்வளவு கோடி ஆண்டுகள் ஆகி விட்டன. போலீஷ் என்கிற CCTV முதலாளி என்கிற CCTV நீதியிலிருந்து மனிதன் தப்பிவிட முடியுமா என்ன? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள் CCTV - யைப் போல ஒருவனுக்கு இன்னொருவன் CCTV அவனை அவனே உற்று நோக்கும் தருணத்தில் அங்கு தோன்றுகிறது ஒரு CCTV பேரன்பு எனில் அது பெரிய CCTV யா என்ன? வீடு வீதி வரை வந்து வழியனுப்பி வைத்துவிடுவதாக எண்ணிக் கொண்டிருப்பது நமது கற்பிதங்களில் ஒன்று நமது வீடுகளின் உச்சியில் கழுத்தை நீட்டிக் கொண்டு ஒரு பலஹீனமான உபகரணம் ஈசனின் தலையில் உடைந்த பிறை போல. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments
உடைந்த பிறை போல. Nalla karpanai 😇