“விலை மதிப்பற்றது” என்கிற குறிப்போடு போட்டோவில் ஒரு பொருளை அனுப்பிருந்தாய் அதனோடே சேர்ந்து வந்து விட்டது உன் சுண்டு விரல் பிறகு அது ஒரு சின்ன விலைக்குள் அடங்கிவிட்டது “ஆகச் சிறந்த கவிதை” என்று ஒன்றை அது போன்றே அனுப்பி வைத்தாய் இன்னும் நான் அதை வாசிக்கவில்லை. மகத்தான ஒன்று மகத்தான இன்னொன்றை குறிப்பிட்டுக் காட்டுவதில் என்னவோ சிக்கல் இருக்குதடி? சில விரல்கள் நிலவைச் சுட்ட உகந்தவையல்ல பிறகு மொத்த நிலவும் காணாமல் போய்விடுகிறது. |
பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின் சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும் உண்டு சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

Comments