“விலை மதிப்பற்றது” என்கிற குறிப்போடு போட்டோவில் ஒரு பொருளை அனுப்பிருந்தாய் அதனோடே சேர்ந்து வந்து விட்டது உன் சுண்டு விரல் பிறகு அப்பொருள் ஒரு சின்ன விலைக்குள் அடங்கிவிட்டது “ஆகச் சிறந்த கவிதை” என்று ஒன்றை அது போன்றே அனுப்பி வைத்தாய் இன்னும் நான் அதை வாசிக்கவில்லை. மகத்தான ஒன்று மகத்தான இன்னொன்றை குறிப்பிட்டுக் காட்டுவதில் என்னவோ சிக்கல் இருக்குதடி? சில விரல்கள் நிலவைச் சுட்ட உகந்தவையல்ல பிறகு மொத்த நிலவும் காணாமல் போய்விடுகிறது. |
கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே ஆப்பிள் ஒரு இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக் கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல் அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம் எதுவென்றுரைத்தால் அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

Comments