முதல் கனி அந்தக் குழந்தை உலகிற்குப் புதுசு மூடிய காருக்குள்ளிருந்து கண்ணாடி வழியே வெளியே பார்த்தபடி வருகிறது சிக்னல் நிறுத்தத்தில் ஒரு சிறுவன் காக்கி நிஜாரில் மேலாடையின்றி வியாபாரி போல் வந்தவன் அவன் தன் அழுக்குக் கையால் கூடைக் கொய்யாக்களில் ஒன்றினை எடுத்து குழந்தைக்குக் காட்டுகிறான் காட்டிய கணத்திலேயே ஊட்டியும் விட்டுவிட்டான் எட்டினால் தட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறார் அதன் அப்பா ஆனாலும் அதற்குள் அவ்வளவு தூரங்கள் அவரால் ஓடிவரக் கூடவில்லை. * கண்டேன் சற்றே பெரிய ஊடல் போல அவள் சிரி... சிரி... சிரி.. எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவன் துளியும் அசைந்துவிடாது நின்று கொண்டிருந்தான் அவள் கன்னச் சதைகளை இழுத்து இழுத்து விட்டாள் இறுக்கத்துள் கை நுழைத்து உதடுகளைப் பிரித்து வைத்தாள் கடைசிவரை சிரிக்கவில்லை கல் அங்கே சிரித்துக் கொண்டிருந்த இன்னொன்றை நான் கண்டு சிரித்தேன். * மனைவியின் முதல் கவிதை "பாயுது பாயுது நீரு பல எண்ணங்கள் போலே- வருது தண்ணீரு..." என்று முதல் அடி எடுத்தவள் ஏனோ கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டாள் ஏரியைக் காட்டிலும் ஆழத்துள் பாய்ந்தவள் சிந்தையில் சட்டென்றொரு தீப்பொறி ‘தண்ணீரை ' அடித்து விட்டு 'கண்ணீரை' அங்கு இட்டு நிரப்பினாள் கண்ணீர் வந்தவுடன் கவிதை வந்துவிட்டது என்பதில் அவளுக்கு அவ்வளவு உறுதி ஆட்டவோ அசைக்கவோ முடியாத உறுதி |
பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின் சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும் உண்டு சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

Comments