செருப்புக்கடைக்கு செருப்புக்கடை என்றே பெயர் சூட்டியுள்ளான் ஒருவன் உனக்கு அம்மை அப்பன் யாருமில்லையா? பெண்டு பிள்ளை சேர்க்கவில்லையா? காதலி... பழைய காதலி... பால்ய சகி ... ஒரு நினைவும் இல்லையோ உனக்கு? அபிமான நடிகன் அபிமான நடிகை இப்படி அபிமானம் ஏதுமில்லையோ? உன் தலைக்கு மேல் வானமில்லையா? பூவோ, புழுவோ இல்லையோ உன் நிலத்தில்? கொள்கை? கோட்பாடு ? தெய்வம் என்று ஒன்று கூட இல்லையா உனக்கு? செருப்புக்கடைக்கு செருப்புக்கடை போதும் என்று முடிந்தது பெருஞ் சலிப்போ? அன்றி தெள்ளிய ஞானம் தானோ? சலிப்பும், ஞானமும் அவ்வளவுக்கும் அருகருகோ! |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments