Skip to main content

Posts

கவிதை

தென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுகிழமையின் காற்று பிஸ்கட்டைப் பிட்டு தேநீரில் நனைத்து சுவைப்பது போல இந்த ஞாயிற்றுகிழமையைப் பிட்டு ஒரு கோப்பை மதுவில் நனைத்து சுவைக்கிறேன். மூளைக்குள் கத்திக்கொண்டிருந்த அலுவலகத்தின் நா அறுக்கப்பட்டு விட்டது. மைதானங்களில் மகிழ்ச்சி ஒரு ரப்பர் பந்தென துள்ளிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன். இக் கொதி நிலம் திடீரெனக் குளிர்ந்து பெய்கிறது ஒரு ரம்யமான மழை. ஞாயிற்றுகிழமையின் காற்றுக்குதானா தென்றல் என்று பெயர் என்றொரு வரி தோன்றியது. இதையடுத்து உருகிவழிந்த கண்ணீரின் துளியொன்று கோப்பைக்குள் சிந்த எடுத்து அருந்தினேன். தாளாத தித்திப்பு அது! தாளாத தித்திப்பு அது!

கவிதை

டம்மி இசை வீட்டிலிருந்து 15 நாட்கள் விடுப்புவேண்டி இருப்பதால் அமானுஷ்யத்தின் துணைகொண்டு ஒரு “டம்மிஇசையை” உருவாக்கினேன். அதற்கு என் நடை உடை பாவனைகளை கற்பித்தேன். ஒரு அலைபேசியை கையளித்தேன். மனமுருக அதன் கரங்களைப் பற்றுதலால் நன்றி பகன்று விடைபெற்றேன். மறுநாளே அழைத்த அது என் மகனின் வீட்டுப்பாடங்கள் ரொம்பவும் கடினமாக இருப்பதாக சொன்னது. நாளுக்கு நாள் அதன் புகார்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன. புதிததாய் தனக்கு மூச்சுமுட்டும் வியாதி கண்டிருப்பதாகவும் சீக்கிரம் வந்துவிடும் படியும் அது நச்சரிக்கத்துவங்கியபோது நானதனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினேன். அமானுஷ்யக்காரரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினேன். பிறகு அதன் அழைப்புகள் நின்று விட்டன. விடுமுறையின் ஏகாந்தம் முடியும் கடைசி நாளில் என் வருகையைத் தெரிவிக்க நான் அதை அழைக்க , ஒரு பெண் குரல் சொன்னது “நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார்” நன்றி; கல்குதிரை .

கவிதைகள்

சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்- 1 அவனிடம் இருந்த துப்பாக்கி சமயம் பார்த்து வெடிக்காமல் போனது. அவன் அதை துடைத்து எண்ணையிட்டு நன்றாகவே பராமரித்து வந்தான். இருந்தும் அது வெடிக்கவில்லை. விசையை அழுத்திப் பார்த்தான். தோட்டாக்களை ஆராய்ந்தான். எல்லாம் சரியாகவே இருந்தது. பிறகு அதை ஒரு துப்பாக்கி பழுதுபார்ப்பவனிடம் கொண்டுபோய் கொடுத்தான். அவன் தீர பரிசோதித்துவிட்டு எல்லாம் சரியாகவே இருக்கிறது என்று திருப்பிக் கொடுத்தான். எல்லாம் சரியாக இருந்தும் ஒரு துப்பாக்கி ஏன் வெடிக்கமாட்டேன் என்கிறது என்றிவன் யோசித்த வேளையில் பெருங்குரலில் ஒரு சிரிப்பொலி கேட்டது. சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-11 அதை நோக்கி சுட்டபடி தொடர்ந்து முன்னேருங்கள் என்றொரு ஆணை பிறந்தது. சர்வ வல்லமை படைத்த அது ஏதோ ஒரு மந்திரத்தை முணூமுணுத்தது. துப்பாக்கிகள் ஒன்றையொன்று சுட்டுக் கொண்டன. அது தொடர்ந்து முன்னேறியபடி இ ருக்கிறது. சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-111 அந்த ஊரில் எல்லோரும் அவரை துப்பாக்கி சாமி என்றே அழைத்தனர். அடிக்கடி இரவுகளில் வீறிடும் குழந்தைகளுக்கு அவர் தன் துப்பாக்கியிலிருந்து தாயத்துகள் செய்து தந்தார். ரவைகளை உருக்கி குளு...

அதனாலென்ன...

அதனாலென்ன? விகடன் பொங்கல் சிறப்பிதழில் எனது கவிதைகள் வந்திருக்கின்றன. அழகான வடிவமைப்புடன் இடம் பெற்றிருக்கிற அக்கவிதைகளில் இரண்டு இடங்களில் விகடன் கத்தரி வைத்திருக்கிறது. ( வெறும் இரண்டே எழுத்தை தான் நீக்கியிருக்கிறார்கள் என்ற போதும் மனம் வேதனை கொள்ளவே செய்தது). “அதனாலென்னா? “ என்று ஒரு கவிதைக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள். நம்பர் 1 வார இதழில் உன் கவிதை வரும் என்றால் ‘அதனாலென்ன’ டா இசை!..... நண்பர் சுகுணா திவாகருக்கு என் நன்றியும், விகடனுக்கு என் நன்றியும், வருத்தமும். எடிட் செய்யப்படாத எனது கவிதைகள் கீழே... ```````````````````````````````````````````````````` ஓயாத திகில் என் உடல் ஆம்புலன்ஸ் தலை சைரன் பல்ப் மனம் இடுது நாசஊளை. ````````````````````````````````````````````````` 999 வாழ்க்கை இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய் எனக் கடிந்து கொள்கிறாயே நானென்ன அவ்வளவு நீதிமானா? அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன். ````````````````````````````````````````````````````````````````````````````` உன்னை அடைவது ... உன்னை முத்தமிட வேண்டியே உன் இதழ்களை முத்தமிடத் தவிக்கிறேன். உன் இதழ்களை முத்தம...
திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு அதற்கு ஒரு காரணத்தை சொல்ல மறுக்கிறது. சிகரெட்டுக்களை புகையாக்குகிறது. திடீரென மனச்சோர்வால் பீடிக்கபடுபவர்களுக்கென்றே எப்போதும் விட்டத்தில் ஒரு பல்லி அமர்ந்திருக்கிறது. நீங்கள் மனச்சோர்வால் பீடீக்கப்படுகையில் உங்கள் நண்பர்களின் எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் இருக்கின்றன. உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ள உருவாக்கிடும் வரிகளை யாரோ ஒருவன் உருட்டுக்கட்டையால் தலையில் அடிக்கிறான். திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு ஒன்பதாவது சுயமைதுனத்தில் இரத்தமாக வெளியேறுகிறது. பிறகு நினைவும் இல்லை. சோர்வும் இல்லை.

‘காயசண்டிகை’ நூல் விமர்சனம்

சிக்கலான அல்ஜீப்ரா கணக்குகளுக்கு திணறும் எளிய மூளை ‘காயசண்டிகை’ கவிதை நூலை முன் வைத்து.. நவீன கவிதைகளில் படிந்திருக்கும் துயரத்திற்கு உலகப் போருக்குப் பிறகான மனித மனங்களில் படர்ந்த இருள் ஒரு காரணமாக சொல்லப்படுவதுண்டு. துயரம் மனிதனோடு சேர்ந்தே பிறக்கிறது. ஆனால் உலகப் போரின் பேரிழப்புகளின் போதே அது பெரிதாக, ஒட்டு மொத்தமாக உணரப்பட்டது என்று இதை நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி துயரக் கறை கொண்ட கவிதைகளின் மேல் தற்போது வைக்கப்படும் ஒரு விமர்சனம் “ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது” என்பது. ஒப்பாரிப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே ஒரு கலைப்படைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற நிலையில், இவ்விமர்சனத்தை நிர்தாட்சண்யமாக ஒதுக்கி விடலாம். ஒரே ஒரு நிபந்தனை, அப்பாடல்கள் கலையின் அழகியலோடு வெளிப்படவேண்டும் அவ்வளவே. நவீன கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பலரிடமும் ஒரு ஓயாத துயரத்தைக் காணமுடிகிறது. துயரக் கறைக் கொண்ட இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் அடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘காயசண்டிகை’ 2007ல் வெளிவந்து தற்போது பரவலாக கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. வாழ்வு தரும் நெருக்கடிகள் வழங்கியவை இக்கவித...
விசில் ஒலிக்கும் சமோசா பொறிஞர் ஆனந்துக்கு இன்றைய தேநீர் இடைவேளையின் போது ஒரு சமோசா சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. தாளித்த வெங்காயத்தின் பொரித்த வாடைக்கு நாசி கிரங்கியது. கண்களை மூடி ஒரு முறை முகர்ந்ததில் அவர் தன் 22 வருடங்களை உள்ளிளுத்துக் கொண்டார். முக்கோண வடிவ சமோசா நீள் சதுர வெண் திரையானது. பொறிஞர், இப்போது லட்சுமி டாக்கீஸின் மணல் குட்டின் மேல் அமர்ந்திருக்கும் சிறு பொடியன். தங்க மீனை எடுப்பதற்காக தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார் கமலஹாசன். நினைத்ததை முடித்தாக வேண்டும் தலைவர். மூதாட்டிகள் கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். ஊஞ்சலைப் போல ஆடிக்கொண்டிருக்கிறது கயிறு. சற்றைக் கெல்லாம் சடசடவென எழுந்த கரவொலிகளுக்கிடையே அரங்கைக் கிழிக்கிறது ஆனந்தின் விசில் சத்தம்.