Skip to main content

கவிதைகள்


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்- 1

அவனிடம் இருந்த துப்பாக்கி
சமயம் பார்த்து வெடிக்காமல் போனது.
அவன் அதை துடைத்து எண்ணையிட்டு
நன்றாகவே பராமரித்து வந்தான்.
இருந்தும் அது வெடிக்கவில்லை.
விசையை அழுத்திப் பார்த்தான்.
தோட்டாக்களை ஆராய்ந்தான்.
எல்லாம் சரியாகவே இருந்தது.
பிறகு அதை ஒரு துப்பாக்கி பழுதுபார்ப்பவனிடம்
கொண்டுபோய் கொடுத்தான்.
அவன் தீர பரிசோதித்துவிட்டு
எல்லாம் சரியாகவே இருக்கிறது
என்று திருப்பிக் கொடுத்தான்.
எல்லாம் சரியாக இருந்தும்
ஒரு துப்பாக்கி ஏன் வெடிக்கமாட்டேன் என்கிறது
என்றிவன் யோசித்த வேளையில்

பெருங்குரலில் ஒரு சிரிப்பொலி கேட்டது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-11


அதை நோக்கி சுட்டபடி
தொடர்ந்து முன்னேருங்கள்
என்றொரு ஆணை பிறந்தது.
சர்வ வல்லமை படைத்த அது

ஏதோ ஒரு மந்திரத்தை முணூமுணுத்தது.
துப்பாக்கிகள் ஒன்றையொன்று சுட்டுக் கொண்டன.

அது தொடர்ந்து முன்னேறியபடி இருக்கிறது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-111



அந்த ஊரில் எல்லோரும் அவரை
துப்பாக்கி சாமி என்றே அழைத்தனர்.
அடிக்கடி இரவுகளில் வீறிடும் குழந்தைகளுக்கு
அவர் தன் துப்பாக்கியிலிருந்து தாயத்துகள் செய்து தந்தார்.
ரவைகளை உருக்கி குளுகைகளையும் களிம்புகளையும்
தயாரித்தார்.
அவர் தன் பல்லாயிரம் கரங்களால்
பல்லாயிரம் மக்களின் கண்ணீரைத் துடைத்ததாகச் சொன்னார்கள்.
அவரிடம் எல்லா வினாக்களுக்கும் விடையிருப்பதாகவும்
சகல குழப்பங்களுக்கும் தெளிவிருப்பதாகவும் சொல்லப்பட்டதால்
நான் என் வினாவைத் தூக்கிக் கொண்டு அவரிடம் போனேன்.
அவர் தாள் பணிந்து அதைக் கேட்டேன்.
மறுபடியும் கேட்டேன்.
திரும்பவும் கேட்டேன்.
சாமி சில கேள்விகளுக்கு மட்டும் இப்படி
காது கேளாதது போல் நடிப்பார்
என்று ஏற்கனவே செவியுற்றிருந்ததால்
அவர் காதுக்குள் சென்று கேட்டேன்.
இவனை வெட்டி தோட்டத்தில் புதையுங்கள்
என்று கத்தினார்.



Comments

பூடகமாக சொல்லி இருக்கீங்க.. கொஞ்சமா எனக்குத் தெரிஞ்ச மாதிரி அர்த்தம் பண்ணிக்கிட்டேன் நண்பா..
என்ன சொல்ல ? அருமை.

Popular posts from this blog

குத்துப்பாடல்களுக்கிடையே ஒரு ஆட்டம்

                                                                                                       நண்பர் செந்தில்   தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக   பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே   “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்ட...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒ...