Skip to main content

டி.வி-யைப் போடு !

                                         
                                                                                 




நிசப்தம் ஒரு நச்சரவம்
அதன் நீலம் உந்தன்  மூளையைத் தீண்டும் முன்
டி.வி-யைப் போடு!

கொட்டும் அருவியும் ஒழுகும் சுனையும்
வெக்கை அறையைச் சற்றே ஆற்றலாம்
டி.வி-யைப் போடு!

எப்போது திறந்தாலும் செய்திகள் ஓடும்.
விடிய விடிய ஜோக்குகள் வெடிக்கும்
இரண்டில் ஒன்றைப் பார்த்துச் சிரிக்கலாம்
டி.வியைப் போடு!

உயிர்நடுக்கும் கோர விபத்துகள் அடிக்கடி காட்டும்
கடவுளின் கருணையால் நீ அதிலில்லை
டி.வி-யைப் போடு!

முதலையின் வாயிலொரு வரிக்குதிரை...
உனக்கு அந்தக் குதிரையைத் தெரியாது
முதலையையும் தெரியாது
டி.வி- யைப் போடு !

காமுகியொருத்தி 
தன் பரந்த முதுகை உவந்து தருவாள்
 கையது ஒடுக்கி காலது குறுக்கி
நீ அதில் கிடக்க
டி.வி-யைப் போடு!

பக்கத்து வீட்டின் மகிழ்ச்சி வெள்ளம்
பெருக்கெடுத்து வந்துனை
அடித்துப் போகும் முன்
டி.வி-யைப் போடு!


                                                      நன்றி : உயிர்மை - நவம்பர் -2017

Comments

Popular posts from this blog

அதிர்ச்சி ரிப்போர்ட்

க டைசியில் அவன் அறிந்து கொண்டான் அவள் இல்லாத போதுதான் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்கிற உண்மையை அதனினும் கடைசியாக அவன்  திடுக்கிட்டு அறிந்ததுவோ... மகிழ்ச்சியாக இருப்பதில்தான் என்னவோ  சிக்கல் அவனுக்கு

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘ஷர்ப்’ பைத் தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?