Skip to main content

மாயா விநோதம்


                       

நிசப்தம் நிலவிய கணமொன்றில்
கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட்டேன்
" துரதிருஷ்டசாலிகள் பொதுவாக ஜூன் மாதத்தில்தான்
  பிறக்கிறார்கள்"
 பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்
 ஒரு கணம் அதிர்ந்துவிட்டு பிறகு சொன்னார்...
 " தவறு...ஏப்ரல் மாதத்தில்தான் பிறக்கிறார்கள்.."
 பெரிய நெற்றியை திருநீற்றால் நிறைத்திருந்த ஒரு பெரியவர் 
தூரத்திலிருந்து சத்தமிட்டுச் சொன்னார்..
" உறுதியாக , அது நவம்பர்தான்..."
 அப்போது அவர் கண்களில் பளிங்கு மின்னியது
  மோர் ஊற்ற வந்த சிப்பந்திச் சிறுவன்
" சார்..அது ஆகஸ்ட்.." என்று முணுமுணுத்தான்.
  கைகழுவி விட்டு என்னைக் கடந்து சென்ற இளநங்கையொருத்தி
" wrong, it's  march only "  என்று கிசுகிசுத்துவிட்டுப் போனாள்
எல்லா திசைகளிலிருந்தும் எதிர்க்குரல்கள் எழுந்தன
பில்லை வாங்கி கம்பியில் செருகி விட்டு
மிச்ச சில்லறைகளின் மீது அடித்துச் சொன்னார் முதலாளி..
" எல்லோரும் தவறாகச் சொல்கிறார்கள்...துரதிர்ஷடசாலிகள் எப்போதும் மே மாதத்தில்தான் பிறந்து தொலைக்கிறார்கள்..."
பன்னிரண்டு மாதங்களும் தீர்ந்து விட்டன.
எனது குழப்பம் என்னவெனில்
இல்லாத ஒரு மாதத்தில் பிறந்து
எப்படி நைஸாக பூமிக்குள் நுழைந்து விடுகிறார்கள்
இந்த அதிர்ஷசாலிகள் என்பதுதான்.






 






Comments

karur karthik said…
மாய எதார்த்தம்

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

நார் இல் மாலை - சங்கத்து மாலைக்காட்சிகள்

அ.முத்துலிங்கம் தன் சமீபத்திய உரையாடலொன்றில் இதுபோலச் சொன்னார். “சங்க இலக்கியங்கள படிச்சாவே போதும்...எதுக்கு மத்த இலக்கியத்தெல்லாம் படிச்சுட்டு என்று சில சமயம் தோன்றும்..”. எனக்கும் சில சங்கப்பாடல்களை வாசிக்கையில் அப்படித் தோன்றியதுண்டு. அகப்பாடல்களின் முதற்பொருள் நிலமும் பொழுதும். அவை நிலத்தையும் பொழுதையும் விரித்துப் பேசியவை. தொல்காப்பியம் வகுத்துச் சொல்லும் ஐவகை நிலங்களை நாம் அறிவோம். பொழுதுகளில் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரண்டுண்டு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்கள் பெரும் பொழுதாகவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் போன்ற பொழுதுகள் சிறுபொழுதுகளாகவும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் மாலையைப் பற்றியே நம் அகப்பாடல்கள் அதிகமும் பாடியுள்ளன. சங்கத்து மாலைக்காட்சிகளில் நான் கண்டு மயங்கிய சிலவற்றை பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். சங்கப்பாடல்கள் எல்லா பொழுதையும் பாடியுள்ளன. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பொழுது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எல்லா பொழுதுகளும் அதில் உண்டு. “தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (கு...