Skip to main content

மல்யுத்தம்


                      


வழக்கம் போல் கதவை எட்டி உதைத்தேன்.
முரண்டு பிடித்தது
மறுபடியும் உதைத்தேன்
மறுபடியும் முரண்டது
மூன்றாவது உதைக்கு
என் காலைப் பற்றி தூரத்தில் எறிந்தது
எழந்து வந்து மீண்டும் முயல்கையில்
அது ஆடாது நிற்க
நான் குப்புற விழுந்தேன்.
கபாலத்தால் வெறிகொண்டு  முட்ட
கிறுகிறுவென்றது  உலகம்
உன்னையும் விட்டு விட்டால்
உதைக்க   ஓர் ஆளில்லை
மல்யுத்தனின் புடைத்தெழுந்த தேகத்துடன்
நான் ஓடோடி வருவதைப் பார்
என்னையே தூக்கி உன் மேல் எறிந்து
பொடிப் பொடியாக்குவேன் காண்.

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...