Skip to main content

ஊடுருவல்

             


சோமனூர் பஸ்  ஸ்டாண்டில்
கொய்யாப் பழம் விற்கும்
சமூக விரோதியிடம்
கிலோவுக்கு ஒன்று குறைவதாக
சண்டையிட்டுக் கொண்டிருந்தான்
நக்சல்.
தன் உடலெங்கும் அரியவகை மூலிகைகளால் ஆன தைல டப்பாக்களை தொங்க விட்டிருக்கும்
தேசவிரோத  சக்தி
நக்சலின் தோளைத் தொட்டு
வத்திப்பெட்டி கடன் கேட்டான்.
பெட்டி இருந்தது ஆனால் அதில் குச்சி இல்லை.
இருவருமாய்ச் சேர்ந்து
கடப்பாரை, மண் வெட்டி சகிதம்
14 பி க்கு காத்திருக்கும் தீவிரவாதியை அணுகினர்.
அவன் தானும் தீயின்றித்தான் தவிப்பதாகச் சொன்னான்.
 கழிப்பறை வாசலில்  அமர்ந்து கொண்டு
" ஆச்சா... சீக்கிரம் வா..."     "ஆச்சா...சீக்கிரம் வா"  என்று கத்திக் கொண்டிருந்தான்  விஷமி
அவனிடம் ஒரெயொரு குச்சி இருந்தது.
அந்த உரிமையில்
அவன் ஒரு பீடி  ஓசி கேட்டான்.
இப்படியாக
ஒரு நக்சல், ஒரு தேச விரோத சக்தி,  ஒரு தீவிரவாதி, ஒரு விஷமி
ஆகிய நால்வரும்
ஒரேயொரு குச்சியில்
4 பீடிகளைக் கொளுத்திக் கொண்டனர்.
அப்போது
இமயம் முதல் குமரி வரை
எங்கெங்கும் பற்றியெரிந்தது.


Comments

அடடா! அற்புதமான கவிதை...நிறையப் பேசுகிறது...

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.